Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 107

திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை ராஜா கூப்பிடுகிறார்

திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை ராஜா கூப்பிடுகிறார்

மத்தேயு 22:1-14

  • கல்யாண விருந்தைப் பற்றிய உவமை

இயேசுவின் ஊழியம் சீக்கிரத்தில் முடியப்போகிறது. அவர் பல உவமைகளைச் சொல்லி, வேத அறிஞர்கள் மற்றும் முதன்மை குருமார்களின் வெளிவேஷத்தை அம்பலப்படுத்துகிறார். அதனால், அவர்கள் இயேசுவைக் கொல்ல நினைக்கிறார்கள். (லூக்கா 20:19) ஆனாலும், இயேசு அவர்களைப் பற்றி மக்களிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அடுத்ததாக, அவர் இன்னொரு உவமையைச் சொல்கிறார்.

“பரலோக அரசாங்கம், மகனுடைய திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த ஒரு ராஜாவைப் போல் இருக்கிறது. திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரச் சொல்லி அவர் தன்னுடைய அடிமைகளை அனுப்பினார்; ஆனால், அழைக்கப்பட்டவர்கள் வர விரும்பவில்லை” என்று சொல்கிறார். (மத்தேயு 22:2, 3) “பரலோக அரசாங்கம்” என்ற வார்த்தைகளோடு இயேசு இந்த உவமையை ஆரம்பிக்கிறார். இதிலிருந்தே, யெகோவா தேவன்தான் அந்த “ராஜா” என்று தெரிகிறது. ராஜாவின் மகன் யார்? விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்? யெகோவாவின் மகன்தான் அந்த ராஜாவின் மகன். அவர்தான் இந்த உவமையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். பரலோக அரசாங்கத்தில் மகனோடு இருக்கப்போகிறவர்கள்தான் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள்.

அந்த விருந்துக்கு யார் முதன்முதலில் அழைக்கப்பட்டார்கள்? சரி, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி யாரிடம் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்? யூதர்களிடம்தானே? (மத்தேயு 10:6, 7; 15:24) இந்தத் தேசத்தார் கி.மு. 1513-ல் திருச்சட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் “ஆட்சி செய்கிற குருமார்களாக” ஆவதற்கான வாய்ப்பு முதலில் இவர்களுக்குத்தான் கிடைத்தது. (யாத்திராகமம் 19:5-8) ஆனால், “திருமண விருந்துக்கு” இவர்கள் எப்போது அழைக்கப்பட்டார்கள்? கி.பி. 29-ல், பரலோக அரசாங்கத்தைப் பற்றி இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்தபோது இவர்களுக்கு அழைப்பு கிடைத்தது.

அழைப்பு கிடைத்தபோது, பெரும்பாலான இஸ்ரவேலர்கள் என்ன செய்தார்கள்? இயேசு அந்த உவமையில் சொன்னபடி, அவர்கள் “வர விரும்பவில்லை.” பெரும்பாலான மதத் தலைவர்களும் மக்களும் இயேசுவை மேசியாவாகவும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை.

யூதர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று இயேசு சொல்கிறார். “[ராஜா] மறுபடியும் வேறு அடிமைகளைக் கூப்பிட்டு, ‘அழைக்கப்பட்டவர்களிடம் நீங்கள் போய், “இதோ! நான் மதிய விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன், காளைகளையும் கொழுத்த மிருகங்களையும் அடித்துச் சமைத்து வைத்திருக்கிறேன், எல்லாம் தயாராக இருக்கிறது; திருமண விருந்துக்கு வாருங்கள்” என நான் அழைப்பதாகச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார். ஆனால், அழைக்கப்பட்டவர்கள் அதை அசட்டை செய்து, ஒருவன் தன்னுடைய வயலுக்குப் போய்விட்டான், வேறொருவன் தன்னுடைய வியாபாரத்தைக் கவனிக்கப் போய்விட்டான். மற்றவர்களோ, அவருடைய அடிமைகளைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொன்றுபோட்டார்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 22:4-6) கிறிஸ்தவ சபை ஆரம்பமான பிறகு என்ன நடக்கும் என்பதை இது காட்டுகிறது. கடவுளுடைய அரசாங்கத்தில் பங்கு பெற யூதர்களுக்கு அப்போதும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான யூதர்கள் இதை அலட்சியம் செய்தார்கள். ‘ராஜாவின் அடிமைகளை’ அவமானப்படுத்தும் அளவுக்கு மோசமாக நடந்துகொண்டார்கள்.—அப்போஸ்தலர் 4:13-18; 7:54, 58.

அதனால் அந்தத் தேசத்துக்கு என்ன கதி ஏற்படும்? “ராஜாவுக்குப் பயங்கர கோபம் வந்தது; அதனால், தன் படைவீரர்களை அனுப்பி அந்தக் கொலைகாரர்களைக் கொன்றுபோட்டார், அவர்களுடைய நகரத்தையும் கொளுத்தினார்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 22:7) கி.பி. 70-ல், ‘யூதர்களுடைய நகரமான’ எருசலேமை ரோமர்கள் அழித்தபோது இது நிறைவேறியது.

ராஜாவின் விருந்துக்கு அவர்கள் வராததால், வேறு யாருக்குமே அந்த அழைப்பு கிடைக்காதா? அப்படியில்லை என்று இயேசு தன் உவமையில் சொல்கிறார். “பின்பு [ராஜா] தன் அடிமைகளிடம், ‘திருமண விருந்து தயாராக இருக்கிறது, ஆனால் அழைக்கப்பட்டவர்கள் அதற்குத் தகுதியில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள். அதனால், நகரத்துக்கு வெளியே செல்லும் சாலைகளுக்குப் போய், யாரையெல்லாம் பார்க்கிறீர்களோ அவர்களையெல்லாம் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்று சொன்னார். அதன்படியே, அந்த அடிமைகள் அந்தச் சாலைகளுக்குப் போய், அவர்கள் பார்த்த நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லாரையும் அழைத்து வந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பி வழிந்தது” என்று அவர் சொல்கிறார்.—மத்தேயு 22:8-10.

மற்ற தேசத்து மக்கள், அதாவது யூதரல்லாதவர்களும் யூத மதத்துக்கு மாறாதவர்களும், உண்மை கிறிஸ்தவர்களாக ஆவதற்கு பேதுரு உதவி செய்தபோது இது நிறைவேறியது. கி.பி. 36-ல் ரோமப் படை அதிகாரியான கொர்நேலியுவும் அவருடைய குடும்பத்தாரும் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள். பரலோக அரசாங்கத்துக்குள் போகும் வாய்ப்பு அப்போது அவர்களுக்குக் கிடைத்தது.—அப்போஸ்தலர் 10:1, 34-48.

விருந்துக்கு வருகிற எல்லாருமே “ராஜா” ஏற்றுக்கொள்கிற மாதிரி இருக்க மாட்டார்கள் என்று இயேசு குறிப்பிடுகிறார். “விருந்தாளிகளைப் பார்வையிட ராஜா உள்ளே வந்தபோது, திருமண நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையைப் போடாத ஒருவன் அங்கே இருப்பதைப் பார்த்தார். அதனால் அவனிடம், ‘திருமண நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையைப் போடாமல் நீ எப்படி உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அப்போது ராஜா தன் வேலையாட்களிடம், ‘அவனுடைய கை கால்களைக் கட்டி, வெளியே இருட்டில் வீசியெறியுங்கள். அங்கே அவன் அழுது அங்கலாய்ப்பான்’ என்று சொன்னார். இப்படியாக, அழைக்கப்படுகிறவர்கள் பலர், ஆனால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் சிலர்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 22:11-14.

இயேசு சொல்கிற எல்லாமே மதத் தலைவர்களுக்குப் புரிந்திருக்காது. ஆனாலும், அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் ரொம்பக் கோபப்படுகிறார்கள். தங்களை இந்தளவு தர்மசங்கடப்படுத்துகிற ஒருவரை இனியும் விட்டுவைக்கக் கூடாது என்று தீர்மானமாக இருக்கிறார்கள்.