Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 111

அப்போஸ்தலர்கள் அடையாளம் கேட்கிறார்கள்

அப்போஸ்தலர்கள் அடையாளம் கேட்கிறார்கள்

மத்தேயு 24:3-51 மாற்கு 13:3-37 லூக்கா 21:7-38

  • நான்கு சீஷர்கள் அடையாளம் கேட்கிறார்கள்

  • அந்த அடையாளம் முதல் நூற்றாண்டிலும் அதற்குப் பிறகும் நிறைவேறுகிறது

  • நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இது நிசான் 11–ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மத்தியானம். இந்த நாள் சீக்கிரத்தில் முடியப்போகிறது. இந்தப் பூமியில் இயேசு செய்த சுறுசுறுப்பான ஊழியமும் சீக்கிரத்தில் முடியப்போகிறது. இதுவரை பகல் நேரத்தில் அவர் ஆலயத்தில் கற்பித்துவந்தார்; ராத்திரி நேரத்தில், நகரத்துக்கு வெளியே தங்கிவந்தார். மக்களும் ரொம்ப ஆர்வத்தோடு ‘ஆலயத்தில் அவர் பேசுவதைக் கேட்பதற்காக விடியற்காலையிலேயே அவரிடம் கூடிவந்தார்கள்.’ (லூக்கா 21:37, 38) இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது! இயேசு தன்னுடைய நான்கு அப்போஸ்தலர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவானுடன் ஒலிவ மலையில் உட்கார்ந்திருக்கிறார்.

இவர்கள் நான்கு பேரும் அவரிடம் தனியாகப் பேச வந்திருக்கிறார்கள். ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி ஆலயம் தரைமட்டமாகும் என்று இயேசு கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் சொல்லியிருந்தார். அதனால், ஆலயத்தை நினைத்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். அதைத் தவிர, வேறு பல விஷயங்களும் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இயேசு அவர்களிடம், “தயாராயிருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்” என்று இதற்கு முன்பு சொல்லியிருந்தார். (லூக்கா 12:40) அதோடு, ‘மனிதகுமாரன் வெளிப்படும் நாளை’ பற்றியும் அவர்களிடம் பேசியிருந்தார். (லூக்கா 17:30) இந்த விஷயங்களுக்கும் ஆலயத்தைப் பற்றி இப்போது அவர் சொன்ன விஷயத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அதைத் தெரிந்துகொள்ள அப்போஸ்தலர்கள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால், “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்கள்.—மத்தேயு 24:3.

அவர்களுடைய கண் முன்னால் கம்பீரமாக நிற்கிற ஆலயத்தின் அழிவை மனதில் வைத்து அவர்கள் இப்படிக் கேட்டிருக்கலாம். அதோடு, மனிதகுமாரனின் பிரசன்னத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பியதாலும் அப்படிக் கேட்டிருக்கலாம். ஏனென்றால், ‘அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ராஜ அதிகாரத்தைப் பெற்றுவர தூர தேசத்துக்குப் புறப்பட்டதை’ பற்றி இயேசு சொன்ன உவமை அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். (லூக்கா 19:11, 12) அதோடு, ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில்’ என்னவெல்லாம் நடக்கும் என்ற யோசனையும் வந்திருக்கும்.

இயேசு அவர்களுக்கு விளக்கமாகப் பதில் சொல்கிறார். எருசலேமும் அதன் ஆலயமும் எப்போது அழியும் என்பதைக் காட்டுகிற ஒரு அடையாளத்தை இயேசு கொடுக்கிறார். இது எதிர்காலத்தில் இன்னும் பெரியளவில் நிறைவேறும். கிறிஸ்துவின் ‘பிரசன்னம்’ ஆரம்பமாகிவிட்டதையும், இந்தச் சகாப்தத்தின் முடிவு நெருங்கிவிட்டதையும் புரிந்துகொள்ள, எதிர்காலத்தில் வாழ்கிற கிறிஸ்தவர்களுக்கு இந்த அடையாளம் உதவியாக இருக்கும்.

வருஷங்கள் போகப் போக, இயேசு கொடுத்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை அப்போஸ்தலர்கள் பார்க்கிறார்கள். இயேசு சொன்ன நிறைய விஷயங்கள் தங்களுடைய வாழ்நாளிலேயே நிறைவேற ஆரம்பிப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அதனால், 37 வருஷங்களுக்குப் பிறகு, கி.பி. 70-ல் யூத சமுதாயத்துக்கும் அதன் ஆலயத்துக்கும் அழிவு வந்தபோது, விழிப்புள்ள கிறிஸ்தவர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், இயேசு சொன்ன எல்லா தீர்க்கதரிசனங்களுமே அந்தச் சமயத்தில் நிறைவேறவில்லை. அப்படியானால், அவர் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இதற்கான பதிலை இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் சொல்கிறார்.

“போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும்” பற்றி மக்கள் கேள்விப்படுவார்கள் என்று இயேசு சொல்கிறார். அதோடு, “ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்” என்றும் சொல்கிறார். (மத்தேயு 24:6, 7) “பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும். அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் உண்டாகும்” என்றும்கூட சொல்கிறார். (லூக்கா 21:11) ‘மக்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்’ என்று தன் சீஷர்களை எச்சரிக்கிறார். (லூக்கா 21:12) போலித் தீர்க்கதரிசிகள் வந்து நிறைய பேரை ஏமாற்றுவார்கள். அக்கிரமம் அதிகமாகும், நிறைய பேருடைய அன்பு குறைந்துவிடும். அதோடு, ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்’ என்றும் சொல்கிறார்.—மத்தேயு 24:14.

ரோமர்களால் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பும், அந்த நகரம் அழிக்கப்பட்ட சமயத்திலும் இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின் சில அம்சங்கள் நிறைவேறின. ஆனாலும், அந்தத் தீர்க்கதரிசனம் பிற்பாடு பெரியளவில் நிறைவேறும் என்று இயேசு சொன்னாரா? இயேசு சொன்ன அந்த முக்கியமான தீர்க்கதரிசனம் நம்முடைய காலத்தில் பெரியளவில் நிறைவேறுவதை நீங்கள் பார்க்கிறீர்களா?

தன்னுடைய பிரசன்னத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தில், ‘பாழாக்கும் அருவருப்பை’ பற்றியும் இயேசு சொல்கிறார். (மத்தேயு 24:15) கி.பி. 66-ல், தங்களுடைய மத சின்னங்களைப் பிடித்துக்கொண்டு வந்த ரோம “படைகள்” பாழாக்கும் அருவருப்பாக இருந்தன. ரோமர்கள் எருசலேமைச் சுற்றிவளைத்து, அதன் மதிலுக்குக் கீழே குழி தோண்டி அதை வலுவிழக்க வைத்தார்கள். (லூக்கா 21:20) இப்படி, “பாழாக்கும் அருவருப்பு” நிற்கக்கூடாத இடத்தில், அதாவது யூதர்கள் ‘பரிசுத்தமாக’ கருதுகிற இடத்தில், நின்றது.

“அப்போது மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை” என்று இயேசு சொல்கிறார். அவர் சொன்னபடியே, கி.பி. 70-ல் ரோமர்கள் எருசலேமை அழித்தார்கள். யூதர்களின் ‘பரிசுத்த நகரத்தையும்’ அதில் இருக்கிற ஆலயத்தையும் ரோமர்கள் கைப்பற்றி தரைமட்டமாக்கினார்கள். அந்தச் சமயத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இது மிகுந்த உபத்திரவமாக இருந்தது. (மத்தேயு 4:5; 24:21) இதற்கு முன்பு, அந்த நகரமும் யூத மக்களும் சந்தித்த எந்த அழிவையும்விட இது பயங்கரமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக யூதர்கள் பின்பற்றிவந்த வழிபாட்டு முறைக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இயேசுவின் இந்தத் தீர்க்கதரிசனம் பிற்பாடு பெரியளவில் நிறைவேறும்போது, கண்டிப்பாகப் படுபயங்கரமாக இருக்கும் என்று தெரிகிறது.

முடிவு காலத்தில் நம்பிக்கை

இயேசு தன்னுடைய பிரசன்னத்தையும் இந்தச் சகாப்தத்தின் முடிவையும் பற்றி இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறார். ‘போலிக் கிறிஸ்துக்கள் மற்றும் போலித் தீர்க்கதரிசிகள்’ பின்னால் போகக் கூடாது என்று தன் அப்போஸ்தலர்களை எச்சரிக்கிறார். “முடிந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக்கூட ஏமாற்றுவதற்கு” அந்த ஆட்கள் முயற்சி செய்வார்கள் என்று சொல்கிறார். (மத்தேயு 24:24) ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஏமாற மாட்டார்கள். இப்படிப்பட்ட போலிக் கிறிஸ்துக்களை நேரில் பார்க்க முடியும். ஆனால், கிறிஸ்துவின் பிரசன்னத்தை நேரில் பார்க்க முடியாது.

இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில் வரப்போகிற மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி இயேசு இப்படிச் சொல்கிறார்: “சூரியன் இருண்டுவிடும், சந்திரன் ஒளி கொடுக்காது, வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும், வான மண்டலங்கள் அசைக்கப்படும்.” (மத்தேயு 24:29) குலைநடுங்க வைக்கிற அந்த விவரிப்பை இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் சொல்லும்போது, இவையெல்லாம் எப்படி நடக்கும் என்று அவர்களால் ஊகிக்க முடிவதில்லை. ஆனால், இவை கண்டிப்பாக மக்களை அதிர வைக்கும் என்பதை மட்டும் அவர்களால் உணர முடிகிறது.

அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது மக்களுக்கு எப்படி இருக்கும்? “உலகத்துக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தில் மக்களுக்குத் தலைசுற்றும். ஏனென்றால், வான மண்டலங்கள் அசைக்கப்படும்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 21:26) உண்மைதான், அது மனித சரித்திரத்தின் மிக மிக இருண்ட காலப்பகுதியாக இருக்கும்.

ஆனால், “மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்” வரும்போது எல்லாருமே புலம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் சொல்கிறார். (மத்தேயு 24:30) ஏனென்றால், “தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக” கடவுள் தலையிடுவார் என்று அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தார். (மத்தேயு 24:22) இப்படிப்பட்ட உண்மையுள்ள சீஷர்கள் அவர் சொல்கிற இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கும்போது என்ன செய்ய வேண்டும்? “இவையெல்லாம் நடக்க ஆரம்பிக்கும்போது நீங்கள் நேராக நிமிர்ந்து நின்று, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; ஏனென்றால், உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது” என்று சொல்லி இயேசு உற்சாகப்படுத்துகிறார்.—லூக்கா 21:28.

அவர் முன்னறிவித்த இந்தக் காலப்பகுதியில் வாழ்கிற சீஷர்கள், முடிவு சீக்கிரத்தில் வரப்போவதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்காக, அத்தி மரத்தைப் பற்றிய உவமையை இயேசு சொல்கிறார். “அதில் இளங்கிளைகள் தோன்றி, இலைகள் துளிர்க்க ஆரம்பித்ததுமே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொள்கிறீர்கள். அப்படியே, இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, கதவுக்குப் பக்கத்திலேயே அவர் வந்துவிட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது” என்று அவர் சொல்கிறார்.—மத்தேயு 24:32-34.

இந்த அடையாளத்தின் ஒவ்வொரு அம்சமும் நிறைவேறுவதைப் பார்க்கும்போது, முடிவு சீக்கிரத்தில் வந்துவிடும் என்பதைச் சீஷர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த விறுவிறுப்பான காலப்பகுதியில் வாழப்போகிற சீஷர்களுக்கு இயேசு இந்த அறிவுரையைக் கொடுக்கிறார்:

“அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது. நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும் நடக்கும். எப்படியென்றால், பெருவெள்ளம் வருவதற்கு முந்தின காலத்தில், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். நோவா பேழைக்குள் நுழைந்த நாள்வரை அப்படித்தான் இருந்தார்கள். பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை; மனிதகுமாரனுடைய பிரசன்னத்தின்போதும் அப்படியே நடக்கும்.” (மத்தேயு 24:36-39) நோவாவின் காலத்தில் வந்த பெருவெள்ளம் உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோலத்தான், இந்தச் சகாப்தத்தின் முடிவிலும் இருக்கும்.

ஒலிவ மலையில் இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிற அப்போஸ்தலர்கள், விழிப்போடு இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று புரிந்துகொள்கிறார்கள். இயேசு அவர்களிடம், “பெருந்தீனியாலும் குடிவெறியாலும் வாழ்க்கைக் கவலைகளாலும் உங்கள் இதயம் பாரமடையாதபடி எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால், எதிர்பாராத வேளையில் அந்த நாள் திடீரென உங்கள்மேல் கண்ணியைப் போல் வரும். பூமி முழுவதும் குடியிருக்கிற எல்லார்மேலும் அது வரும். அதனால், விழித்திருந்து எப்போதும் மன்றாடுங்கள். அப்படிச் செய்தால்தான், நடக்கப்போகிற இவை எல்லாவற்றிலிருந்தும் உங்களால் தப்பிக்க முடியும், மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கவும் முடியும்” என்கிறார்.—லூக்கா 21:34-36.

தான் சொல்கிற இந்தச் சம்பவங்கள் பெரியளவில் நடக்கும் என்பதை இயேசு மறுபடியும் வலியுறுத்துகிறார். ஒருசில பத்தாண்டுகளில் நடக்கப்போகிற சம்பவங்களையோ, எருசலேம் நகரத்தையும் யூத தேசத்தையும் மட்டுமே பாதிக்கப்போகிற சம்பவங்களையோ பற்றி இயேசு இங்கே சொல்லிக்கொண்டில்லை. ‘பூமி முழுவதும் குடியிருக்கிற எல்லார்மேலும் வரப்போகிற’ சம்பவங்களைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.

தன்னுடைய சீஷர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இதை வலியுறுத்துவதற்காக இயேசு இன்னொரு உவமையைச் சொல்கிறார். “ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்: ராத்திரி எந்த நேரத்தில் திருடன் வருவான் என்பது வீட்டு எஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவர் விழித்திருந்து, வீட்டுக்குள் திருடன் புகுந்துவிடாமல் பார்த்துக்கொள்வார். அதனால், நீங்களும் தயாராக இருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்” என்று எச்சரிக்கிறார்.—மத்தேயு 24:43, 44.

அதேசமயத்தில், தன்னுடைய சீஷர்கள் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம் என்றும் இயேசு சொல்கிறார். இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிற சமயத்தில், எச்சரிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகிற ஒரு “அடிமை” கண்டிப்பாக இருப்பார் என்று சொல்கிறார். அப்போஸ்தலர்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயத்தை வைத்தே இதை விளக்குகிறார். “ஏற்ற வேளையில் தன்னுடைய வீட்டாருக்கு உணவு கொடுப்பதற்காக எஜமான் நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்? எஜமான் வரும்போது அப்படிச் செய்துகொண்டிருக்கிற அடிமையே சந்தோஷமானவன்! உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவர் தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அவனை நியமிப்பார்” என்று சொல்கிறார். ஒருவேளை அந்த “அடிமை” பொல்லாதவனாக மாறி, மற்றவர்களை அடிக்க ஆரம்பித்தால் அவனுடைய எஜமான் வந்து, “அவனை மிகக் கடுமையாகத் தண்டிப்பார்” என்றும் சொல்கிறார்.—மத்தேயு 24:45-51; லூக்கா 12:45, 46-ஐ ஒப்பிடுங்கள்.

தன்னுடைய சீஷர்களில் ஒரு பிரிவினர் பொல்லாதவர்களாக மாறிவிடுவார்கள் என்று இயேசு இங்கே சொல்லவில்லை. அப்படியானால், தன் சீஷர்களுக்கு என்ன பாடத்தை அவர் இங்கே கற்பிக்கிறார்? அவர்கள் எச்சரிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்றுதான் அவர் சொல்கிறார். இதைத் தெளிவுபடுத்துவதற்காக அவர் இன்னொரு உவமையைச் சொல்கிறார்.