Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 112

விழிப்போடு இருக்க வேண்டும்​​—⁠கன்னிப்பெண்கள் உவமை

விழிப்போடு இருக்க வேண்டும்​​—⁠கன்னிப்பெண்கள் உவமை

மத்தேயு 25:1-13

  • பத்துக் கன்னிப்பெண்களைப் பற்றிய உவமை

தன்னுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் என்ன அடையாளம் என்பதைப் பற்றிச் சீஷர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போது இன்னொரு உவமையின் மூலமாக அவர்களுக்கு ஞானமான ஆலோசனையைக் கொடுக்கிறார். இந்த உவமையில் சொல்லப்பட்ட விஷயங்கள் நிறைவேறுவதை அவருடைய பிரசன்னத்தின்போது வாழ்கிறவர்கள் பார்ப்பார்கள்.

“பரலோக அரசாங்கம் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைப் பார்க்க போன பத்துக் கன்னிப்பெண்களைப் போல் இருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்கள், ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 25:1, 2.

பரலோக அரசாங்கத்துக்குள் போகப்போகிற சீஷர்களில் பாதி பேர் புத்தியில்லாதவர்கள், இன்னொரு பாதி பேர் புத்தியுள்ளவர்கள் என்று இயேசு இங்கே சொல்லவில்லை. அந்த அரசாங்கத்தைப் பற்றிய விஷயங்களில், விழிப்பாக இருப்பதா வேண்டாமா என்ற முடிவை சீஷர்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும் என்பதைத்தான் இயேசு இங்கே சுட்டிக்காட்டுகிறார். ஆனாலும், தன்னுடைய சீஷர்கள் ஒவ்வொருவரும் கடைசிவரை உண்மையோடு இருந்து, தகப்பனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் இயேசுவுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த உவமையில், பத்துக் கன்னிப்பெண்களும் மணமகனை வரவேற்பதற்காகவும், திருமண ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காகவும் புறப்பட்டுப் போகிறார்கள். மணமகன் வந்ததும், இந்தக் கன்னிப்பெண்கள் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு அவர் வருகிற பாதையைப் பிரகாசிக்க வைப்பார்கள். மணமகளுக்காகத் தயார் செய்யப்பட்டிருக்கிற வீட்டுக்கு மணமகன் அவளைக் கூட்டிக்கொண்டு வரும்போது இந்தக் கன்னிப்பெண்கள் அவரை இப்படிக் கௌரவப்படுத்துவார்கள். ஆனால், இந்த உவமையில் என்ன நடக்கிறது?

“புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளைக் கொண்டுபோனார்கள், ஆனால் எண்ணெயைக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்களோ தங்கள் விளக்குகளோடு குப்பிகளில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணமகன் வரத் தாமதித்ததால், அவர்கள் எல்லாரும் அசந்து தூங்கிவிட்டார்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:3-5) அவர்கள் எதிர்பார்த்த நேரத்தில் மணமகன் வரவில்லை. அவர் வருவதற்கு ரொம்பத் தாமதமாவதுபோல் தெரிவதால், அந்தக் கன்னிப்பெண்கள் எல்லாரும் தூங்கிவிடுகிறார்கள். இயேசு இதற்கு முன்பு சொன்ன ஒரு உவமையில், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தூர தேசத்துக்குப் போய், ‘கடைசியில், ராஜ அதிகாரத்தை பெற்றுக்கொண்டு திரும்பி வந்தார்’ என்பது அப்போஸ்தலர்களின் ஞாபகத்துக்கு வந்திருக்கும்.—லூக்கா 19:11-15.

மணமகன் வரும்போது என்ன நடக்கிறது என்பதைப் பத்துக் கன்னிப்பெண்கள் பற்றிய உவமையில் இயேசு சொல்கிறார்: “நடுராத்திரியில், ‘இதோ, மணமகன் வருகிறார்! அவரைப் பார்க்கப் புறப்பட்டுப் போங்கள்’ என்ற சத்தம் கேட்டது.” (மத்தேயு 25:6) கன்னிப்பெண்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்களா? விழிப்போடு இருக்கிறார்களா?

“அப்போது, அந்தக் கன்னிப்பெண்கள் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளைத் தயார்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம், ‘எங்களுடைய விளக்குகள் அணையப்போகின்றன, உங்களிடம் இருக்கிற எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்குப் புத்தியுள்ளவர்கள், ‘எங்களுக்கும் உங்களுக்கும் எண்ணெய் போதாமல் போய்விடலாம். அதனால், விற்கிறவர்களிடம் போய் நீங்களே அதை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள்” என இயேசு சொல்கிறார்.—மத்தேயு 25:7-9.

புத்தியில்லாத ஐந்து கன்னிப்பெண்களும் மணமகனைச் சந்திக்கத் தயாராகவும் இல்லை, விழிப்பாகவும் இல்லை. அவர்களிடம் தேவையான அளவு எண்ணெய் இல்லை. அதனால், அவர்கள் போய் வாங்கிக்கொண்டு வர வேண்டியிருக்கிறது. “அவர்கள் அதை வாங்கப் போனபோது மணமகன் வந்துவிட்டார்; தயாராக இருந்த கன்னிப்பெண்கள் அவரோடு திருமண விருந்தில் கலந்துகொள்ள வீட்டுக்குள் போனார்கள், கதவும் மூடப்பட்டது. அதன் பின்பு, மற்ற ஐந்து கன்னிப்பெண்களும் அங்கே வந்து, ‘எஜமானே! எஜமானே! கதவைத் திறங்கள்!’ என்றார்கள். அதற்கு அவர், ‘நிஜமாகச் சொல்கிறேன், நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார்” என இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:10-12) தயாராகவும் விழிப்பாகவும் இல்லாததால் எப்பேர்ப்பட்ட சோக முடிவு!

இயேசு தன்னைத்தான் மணமகன் என்று குறிப்பிடுகிறார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்கிறார்கள். இதற்கு முன்பும், இயேசு தன்னை ஒரு மணமகனுக்கு ஒப்பிட்டுப் பேசியிருந்தார். (லூக்கா 5:34, 35) புத்தியுள்ள கன்னிப்பெண்கள் யார்? அரசாங்கத்தைப் பெறப்போகிற ‘சிறுமந்தையை’ பற்றிப் பேசும்போது, “இடுப்புப்பட்டையைக் கட்டிக்கொண்டு தயாராயிருங்கள், உங்கள் விளக்குகளை எரியவிடுங்கள்” என்று இயேசு சொல்லியிருந்தார். (லூக்கா 12:32, 35) அதனால், தங்களைப் போன்ற உண்மையுள்ள சீஷர்களைப் பற்றித்தான் இயேசு இந்த உவமையில் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்கிறார்கள். இந்த உவமை மூலமாக இயேசு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார்?

இயேசுவே அதைத் தெளிவாகச் சொல்கிறார். “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” என்று அவர் கடைசியில் சொல்கிறார்.—மத்தேயு 25:13.

தன்னை உண்மையோடு பின்பற்றுகிறவர்கள், தன்னுடைய பிரசன்னத்தின்போது ‘விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று இயேசு சொல்கிறார். அவர் கண்டிப்பாக வருவார். அப்படி வரும்போது, புத்தியுள்ள ஐந்து கன்னிப்பெண்களைப் போல அவர்கள் தயாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், தங்களுடைய அருமையான நம்பிக்கையை அவர்கள் எப்போதும் கண் முன்னால் வைத்திருக்க முடியும்; பரிசை இழந்துவிடாமல் இருக்கவும் முடியும்.