Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 114

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்

மத்தேயு 25:31-46

  • செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமை

ஒலிவ மலையில், இயேசு இப்போதுதான் பத்துக் கன்னிப்பெண்களைப் பற்றிய உவமையையும் தாலந்து பற்றிய உவமையையும் சொல்லி முடித்திருந்தார். தன்னுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் என்ன அடையாளம் என்று சீஷர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு எப்படிப் பதில் சொல்லி முடிக்கிறார்? செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையுடன் அதை முடிக்கிறார்.

இந்த உவமையில் சொல்லப்படுகிற விஷயங்கள் எப்போது நடக்கும் என்பதை இயேசு முதலில் விளக்குகிறார். “மனிதகுமாரன் தன்னுடைய மகிமையில் எல்லா தேவதூதர்களோடும் வரும்போது, தன் மகிமையான சிம்மாசனத்தில் உட்காருவார்” என்று அவர் சொல்கிறார். (மத்தேயு 25:31) இந்த உவமையில் வரும் முக்கிய நபர் இயேசுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் தன்னை அடிக்கடி “மனிதகுமாரன்” என்று சொல்லியிருக்கிறார்.—மத்தேயு 8:20; 9:6; 20:18, 28.

இயேசு “தன்னுடைய மகிமையில்” தேவதூதர்களோடு வந்து “தன் மகிமையான சிம்மாசனத்தில்” உட்காரும்போது இந்த உவமை நிறைவேறும். “மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்து மேகங்கள்மேல்” தன்னுடைய தூதர்களோடு வருவார் என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்தார். இது எப்போது நடக்கும்? “உபத்திரவத்துக்குப் பின்பு, உடனடியாக” நடக்கும். (மத்தேயு 24:29-31; மாற்கு 13:26, 27; லூக்கா 21:27) இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இயேசு எதிர்காலத்தில் மகிமையோடு வரும்போது இந்த உவமை நிறைவேறும் என்று தெரிகிறது. அப்போது அவர் என்ன செய்வார்?

“மனிதகுமாரன் . . . வரும்போது, . . . எல்லா தேசத்தாரும் அவர் முன்னால் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் ஒரு மேய்ப்பன் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர்களை அவர் பிரிப்பார். செம்மறியாடுகளைத் தன் வலது பக்கத்தில் நிறுத்துவார், வெள்ளாடுகளையோ தன் இடது பக்கத்தில் நிறுத்துவார்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 25:31-33.

மனிதகுமாரனின் தயவைப் பெற்று, அவருடைய வலது பக்கத்தில் நிறுத்தப்படுகிற செம்மறியாடுகளுக்கு என்ன நடக்கும்? “பின்பு, ராஜா தன் வலது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’ என்று சொல்வார்.” (மத்தேயு 25:34) செம்மறியாடுகளுக்கு ஏன் ராஜாவின் தயவு கிடைக்கிறது?

ராஜா அவர்களைப் பார்த்து, “நான் பசியாக இருந்தேன், எனக்குச் சாப்பிடக் கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், குடிக்கக் கொடுத்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரித்தீர்கள்; உடையில்லாமல் இருந்தேன், எனக்கு உடை கொடுத்தீர்கள். நோயாளியாக இருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள். சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்” என்று சொல்கிறார். ‘நாங்கள் எப்போது அந்த உதவிகளைச் செய்தோம்?’ என்று செம்மறியாடுகளான அந்த ‘நீதிமான்கள்’ கேட்கிறார்கள். அதற்கு ராஜா, “மிகச் சிறியவர்களான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்” என்று சொல்கிறார். (மத்தேயு 25:35, 36, 40, 46) அவர்கள் இந்த உதவிகளைப் பரலோகத்தில் செய்ய வாய்ப்பில்லை. ஏனென்றால் அங்கே நோயாளிகளும் இல்லை, பசியால் வாடுகிறவர்களும் இல்லை. அதனால் இந்த உதவிகள் எல்லாம் பூமியில் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு செய்யப்பட்ட உதவிகளாகத்தான் இருக்க வேண்டும்.

இடது பக்கத்தில் நிறுத்தப்படுகிற வெள்ளாடுகளுக்கு என்ன நடக்கும்? “பின்பு, [ராஜா] தன்னுடைய இடது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு விலகி, பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் தயார்படுத்தப்பட்டுள்ள, என்றென்றும் அணையாத நெருப்புக்குள் போய் விழுங்கள். ஏனென்றால் நான் பசியாக இருந்தேன், நீங்கள் எனக்குச் சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், குடிக்க எதுவும் தரவில்லை. அன்னியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரிக்கவில்லை; உடையில்லாமல் இருந்தேன், உடை கொடுக்கவில்லை; நோயாளியாகவும் சிறைக்கைதியாகவும் இருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்று சொல்வார்.” (மத்தேயு 25:41-43) இது நியாயமான தீர்ப்புதான்! ஏனென்றால், பூமியில் இருக்கிற கிறிஸ்துவின் சகோதரர்களிடம் இந்த வெள்ளாடுகள் அன்பாக நடந்துகொள்ளவில்லை.

எதிர்காலத்தில் வரப்போகிற இந்த நியாயத்தீர்ப்பு நிரந்தரமான நன்மைகளையோ பாதிப்புகளையோ கொண்டுவரும் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால் இயேசு அவர்களிடம், “அதற்கு [ராஜா], ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியவர்களான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ அதை எனக்கே செய்யவில்லை’ என்று சொல்வார். இவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள், ஆனால் நீதிமான்கள் நிரந்தரமான வாழ்வைப் பெறுவார்கள்” என்கிறார்.—மத்தேயு 25:45, 46.

அப்போஸ்தலர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு பதில் சொல்லிவிட்டார். அவர்கள் இப்போது நிறைய விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் அலசி ஆராய இயேசுவின் பதில் அவர்களுக்கு உதவி செய்கிறது.