Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 121

“தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்”

“தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்”

யோவான் 16:1-33

  • கொஞ்சக் காலத்தில் இயேசுவை அப்போஸ்தலர்கள் பார்க்க மாட்டார்கள்

  • அப்போஸ்தலர்களின் வேதனை சந்தோஷமாக மாறும்

பஸ்கா உணவைச் சாப்பிட்ட பிறகு, அந்த மாடி அறையிலிருந்து இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் புறப்படத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை இயேசு கொடுத்துவிட்டார். இப்போது அவர்களிடம், “நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போகாமல் இருப்பதற்காக இவற்றை நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன்” என்கிறார். இயேசு ஏன் இப்படி எச்சரிக்கிறார்? “அவர்கள் உங்களை ஜெபக்கூடத்தைவிட்டு நீக்கிவிடுவார்கள். சொல்லப்போனால், உங்களைக் கொலை செய்கிறவர்கள் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதாக நினைத்துக்கொள்கிற காலம் வரும்” என்று அவர்களிடம் விளக்குகிறார்.—யோவான் 16:1, 2.

அப்போஸ்தலர்கள் இதைக் கேட்டு பயந்திருக்கலாம். இந்த உலகம் அவர்களை வெறுக்கும் என்று ஏற்கெனவே இயேசு சொல்லியிருந்தார். ஆனால், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று இதுவரை நேரடியாகச் சொன்னதில்லை. ஏன்? “இவற்றை முதலிலேயே நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால், நான் உங்களோடு இருந்தேன்” என்கிறார். (யோவான் 16:4) இப்போது, அவர்களைவிட்டுப் போவதற்கு முன்பு இயேசு அவர்களை எச்சரிக்கிறார். விசுவாசத்தைவிட்டு விலகிப்போகாமல் இருக்க அவர்களுக்கு இந்த எச்சரிப்பு பிற்பாடு உதவியாக இருக்கும்.

பிறகு அவர்களிடம், “இப்போது என்னை அனுப்பியவரிடம் போகப் போகிறேன். அப்படியிருந்தும், ‘எங்கே போகிறீர்கள்?’ என்று நீங்கள் யாருமே என்னிடம் கேட்கவில்லை” என்று சொல்கிறார். சில மணிநேரங்களுக்கு முன்பு, அவர் எங்கே போகப் போகிறார் என்று கேட்டிருந்தார்கள். (யோவான் 13:36; 14:5; 16:5) ஆனால் இப்போது, துன்புறுத்தலைப் பற்றி இயேசு சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள், தங்களைப் பற்றிய கவலையில் மூழ்கியிருக்கிறார்கள். அதனால், அவருக்குக் கிடைக்கப்போகிற மகிமையைப் பற்றியோ, உண்மை வணக்கத்தாருக்குக் கிடைக்கப்போகிற நன்மைகளைப் பற்றியோ அவர்கள் கேள்வி கேட்கவில்லை. “நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 16:6.

பிறகு அவர்களிடம், “உங்களுடைய நன்மைக்காகத்தான் நான் போகிறேன். நான் போகவில்லை என்றால் அந்தச் சகாயர் உங்களிடம் வர மாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்” என்று சொல்கிறார். (யோவான் 16:7) இயேசு இறந்து, பரலோகத்துக்குப் போனால்தான் அவருடைய சீஷர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கும். அவருடைய மக்கள் இந்தப் பூமியில் எங்கே வாழ்ந்தாலும், அவர்களுக்கு உதவி செய்வதற்கு அந்தச் சக்தியை அவர் அனுப்புவார்.

கடவுளுடைய சக்தி, “பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் பற்றி இந்த உலகத்திலுள்ள மக்களுக்கு நம்பகமான அத்தாட்சி” கொடுக்கும். (யோவான் 16:8) அதாவது, கடவுளுடைய மகன்மீது இந்த உலகம் விசுவாசம் வைக்கவில்லை என்பதைக் கடவுளுடைய சக்தி வெட்டவெளிச்சமாக்கும். இயேசு பரலோகத்துக்குப் போவது அவருடைய நீதிக்கு நம்பகமான அத்தாட்சியாக இருக்கும். அதோடு, “இந்த உலகத்தை ஆளுகிற” சாத்தான் தண்டிக்கப்படுவது நியாயம்தான் என்பதை எடுத்துக்காட்டும்.—யோவான் 16:11.

“இன்னும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இப்போது அவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று இயேசு சொல்கிறார். கடவுளுடைய சக்தியை அவர் பொழியும்போது, “சத்தியத்தை முழுமையாக” புரிந்துகொள்ள சீஷர்களுக்கு அது உதவி செய்யும். அதனால், அந்தச் சத்தியத்துக்கு ஏற்றபடி நடக்கவும் அவர்களால் முடியும்.—யோவான் 16:12, 13.

அடுத்ததாக இயேசு, “இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள், அதன் பின்பு கொஞ்சக் காலத்தில் மறுபடியும் என்னைப் பார்ப்பீர்கள்” என்கிறார். அதைக் கேட்டு அவர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. அவர் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். அதைப் பற்றித் தன்னிடம் கேட்க நினைக்கிறார்கள் என்பதை இயேசு புரிந்துகொள்கிறார். அதனால், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும். நீங்கள் வேதனைப்படுவீர்கள், ஆனால் உங்களுடைய வேதனை சந்தோஷமாக மாறும்” என்று விளக்குகிறார். (யோவான் 16:16, 20) அடுத்த நாள் மத்தியானம் இயேசு கொல்லப்படும்போது, மதத் தலைவர்கள் சந்தோஷப்படுவார்கள். அவருடைய சீஷர்களோ வேதனைப்படுவார்கள். இயேசு உயிரோடு எழுந்த பிறகு, அவர்களுடைய வேதனை சந்தோஷமாக மாறும். அவர் கடவுளுடைய சக்தியை அவர்கள்மேல் பொழியும்போது அவர்களுடைய சந்தோஷம் நிலைத்திருக்கும்.

அப்போஸ்தலர்களுடைய நிலைமையைப் பிரசவ வேதனைப்படுகிற ஒரு பெண்ணின் சூழ்நிலைமையோடு இயேசு ஒப்பிடுகிறார். “குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண், தனக்குப் பிரசவ நேரம் வந்துவிட்டதற்காக வேதனைப்படுகிறாள். ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு, இந்த உலகத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்ட சந்தோஷத்தில் அந்த வேதனையை மறந்துவிடுகிறாள்” என்று இயேசு சொல்கிறார். “நீங்களும்கூட இப்போது வேதனைப்படுகிறீர்கள். ஆனால், நான் மறுபடியும் உங்களைப் பார்ப்பேன். அப்போது, உங்கள் இதயம் சந்தோஷத்தால் நிரம்பும். உங்கள் சந்தோஷத்தை யாராலும் பறிக்க முடியாது” என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.—யோவான் 16:21, 22.

அந்தச் சமயம்வரை, இயேசுவின் பெயரில் அப்போஸ்தலர்கள் ஜெபம் செய்தது கிடையாது. ஆனால் இப்போது, “அந்த நாளில் என்னுடைய பெயரில் நீங்கள் தகப்பனிடம் வேண்டிக்கொள்வீர்கள்” என்று இயேசு சொல்கிறார். வேண்டுதலைக் கேட்க தகப்பனுக்கு விருப்பம் இல்லை என்ற அர்த்தத்திலா அப்படிச் சொல்கிறார்? இல்லை! சொல்லப்போனால், “தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார். ஏனென்றால், நீங்கள் என்மேல் பாசம் வைத்து, கடவுளுடைய பிரதிநிதியாக நான் வந்திருப்பதை நம்புகிறீர்கள்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 16:26, 27.

இவ்வளவு நேரமாக இயேசு அவர்களை உற்சாகப்படுத்தி பேசியிருந்ததால், அவர்கள் தைரியமாக, “நீங்கள் கடவுளிடமிருந்து வந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்” என்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கை சீக்கிரத்திலேயே சோதிக்கப்படும். அடுத்து என்ன நடக்கும் என்று இயேசுவே சொல்கிறார். “நேரம் வரும், சொல்லப்போனால், அது வந்துவிட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டு அவரவருடைய வீட்டுக்குப் போவீர்கள். என்னையோ தனியாக விட்டுவிடுவீர்கள்” என்று சொல்கிறார். ஆனாலும், “என் மூலம் உங்களுக்குச் சமாதானம் கிடைப்பதற்காக இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன். இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும். ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்” என்று அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். (யோவான் 16:30-33) இயேசு அவர்களைத் தனியாகத் தவிக்க விட்டுவிட மாட்டார். அவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்வார். சாத்தானும் இந்த உலக மக்களும் அவர்களுடைய உத்தமத்தைக் குலைத்துப்போட முயற்சி செய்வார்கள். ஆனாலும், கடவுள் விரும்புவதை அவர்கள் உண்மையோடு செய்தால், இயேசுவைப் போல அவர்களாலும் இந்த உலகத்தை ஜெயிக்க முடியும்.