Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 128

இயேசு நிரபராதி என்று பிலாத்துவும் ஏரோதுவும் புரிந்துகொள்கிறார்கள்

இயேசு நிரபராதி என்று பிலாத்துவும் ஏரோதுவும் புரிந்துகொள்கிறார்கள்

மத்தேயு 27:12-14, 18, 19 மாற்கு 15:2-5 லூக்கா 23:4-16 யோவான் 18:36-38

  • பிலாத்துவும் ஏரோதுவும் இயேசுவை விசாரிக்கிறார்கள்

தான் ஒரு ராஜா என்பதை பிலாத்துவிடமிருந்து இயேசு மறைக்கவில்லை. அதேசமயத்தில், அவருடைய அரசாங்கம் ரோம அரசாங்கத்துக்கு எதிரானது கிடையாது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல. என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள். ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று சொல்கிறார். (யோவான் 18:36) இயேசுவுக்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது. ஆனால், அது இந்த உலகத்தைச் சேர்ந்தது கிடையாது.

பிலாத்து அந்த விஷயத்தை அதோடு விடவில்லை. “அப்படியென்றால் நீ ஒரு ராஜாவா?” என்று கேட்கிறார். அவர் சரியான முடிவுக்குத்தான் வந்திருக்கிறார் என்பதை இயேசு அவருக்குத் தெரியப்படுத்துகிறார். இயேசு அவரிடம், “நான் ஒரு ராஜாவென்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்துக்கு வந்தேன். சத்தியத்தின் பக்கம் இருக்கிற ஒவ்வொருவனும் நான் சொல்வதைக் கேட்கிறான்” என்று சொல்கிறார்.—யோவான் 18:37.

இயேசு ஒருசமயம் தோமாவிடம், “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். இப்போது, பிலாத்துவிடமும் “சத்தியத்தை” பற்றி சாட்சி கொடுக்கவே தான் வந்ததாகச் சொல்கிறார். அதுவும் தன்னுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுப்பதற்காகவே இந்தப் பூமிக்கு வந்ததாகச் சொல்கிறார். உயிரே போனாலும் அந்தச் சத்தியத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியோடு இருக்கிறார். பிலாத்து அவரிடம், “சத்தியமா? அது என்ன?” என்று கேட்கிறார். ஆனால் இயேசு பதில் சொல்லும்வரை அவர் காத்திருக்கவில்லை. தீர்ப்பு சொல்வதற்கு, இதுவரை கேட்ட விஷயங்களே போதும் என்று அவர் நினைக்கிறார்.—யோவான் 14:6; 18:38.

தன்னுடைய மாளிகைக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிற கூட்டத்தாரிடம் பிலாத்து வருகிறார். அப்போது, இயேசுவும் அவருக்குப் பக்கத்தில் இருந்திருக்கலாம். பிலாத்து முதன்மை குருமார்களையும் அவர்களோடு இருக்கிறவர்களையும் பார்த்து, “இந்த மனுஷன் எந்தக் குற்றமும் செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்கிறார். அதைக் கேட்டு அந்தக் கூட்டத்தார் கொதிக்கிறார்கள். “இவன் யூதேயா முழுவதிலும், கலிலேயா தொடங்கி இந்த இடம் வரையிலும், மக்களுக்குக் கற்பித்து, அவர்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான்” என்று அடித்துச் சொல்கிறார்கள்.—லூக்கா 23:4, 5.

காரணமே இல்லாமல், யூதர்கள் இப்படி வெறித்தனமாக நடந்துகொள்வதைப் பார்த்து பிலாத்து ஆச்சரியப்படுகிறார். முதன்மை குருமார்களும் பெரியோர்களும் கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பதைப் பார்த்து, “இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்கள், அதையெல்லாம் நீ கேட்கவில்லையா?” என்று இயேசுவிடம் கேட்கிறார். (மத்தேயு 27:13) இயேசு அமைதியாக இருக்கிறார். அந்தக் காட்டுக் கூச்சலுக்கு மத்தியில் இயேசு அமைதியாக இருப்பதைப் பார்த்து பிலாத்து அசந்துபோகிறார்.

இயேசு ‘கலிலேயாவில் கற்பிக்கத் தொடங்கியதாக’ யூதர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதைக் கேட்ட பிறகு, இயேசு ஒரு கலிலேயர்தானா என்பதை பிலாத்து விசாரித்து, உறுதிசெய்துகொள்கிறார். இயேசுவுக்குத் தீர்ப்பு கொடுக்காமல் தப்பித்துக்கொள்ள பிலாத்துவுக்கு இப்போது ஒரு யோசனை வருகிறது. ஏரோது அந்திப்பாதான் (மகா ஏரோதுவின் மகன்) கலிலேயாவை ஆட்சி செய்துவருகிறான். பஸ்கா சமயத்தில் அவனும் எருசலேமுக்கு வந்திருக்கிறான். அதனால், இயேசுவை ஏரோதுவிடம் பிலாத்து அனுப்புகிறார். இந்த ஏரோது அந்திப்பாதான் யோவான் ஸ்நானகரின் தலையை வெட்டியவன். பிற்பாடு, இயேசு அற்புதங்கள் செய்வதைக் கேள்விப்பட்டதும், யோவான்தான் உயிரோடு எழுந்துவிட்டாரோ என்று பயந்தவன்.—லூக்கா 9:7-9.

இயேசுவைப் பார்க்க ஏரோது ஆசையாகக் காத்திருக்கிறான். அவருக்கு உதவி செய்வதற்காகவோ, அவர் உண்மையிலேயே தவறு செய்தாரா என்று விசாரிப்பதற்காகவோ அவன் காத்திருக்கவில்லை. அவர் செய்கிற “அற்புதங்களில் ஒன்றைப் பார்க்க” அவன் ஆசைப்படுகிறான், அவ்வளவுதான்! (லூக்கா 23:8) ஆனால், இயேசு அவன் முன்னால் எந்த அற்புதமும் செய்யவில்லை. சொல்லப்போனால், ஏரோது கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. அவனுக்கு ஒரே ஏமாற்றமாக இருக்கிறது. அவனும் அவனுடைய படைவீரர்களும் இயேசுவை ‘அவமதிக்கிறார்கள்.’ (லூக்கா 23:11) அவருக்கு ஆடம்பரமான உடையை உடுத்தி, அவரைக் கேலி செய்கிறார்கள். பிறகு ஏரோது, பிலாத்துவிடம் அவரைத் திருப்பி அனுப்புகிறான். அதுவரை எதிரிகளாக இருந்த ஏரோதுவும் பிலாத்துவும் அன்றைக்கு நல்ல நண்பர்களாக ஆகிறார்கள்.

இயேசு திரும்பி வந்ததும், முதன்மை குருமார்களையும் யூதத் தலைவர்களையும் மக்களையும் பிலாத்து ஒன்றுகூட்டுகிறார். “இவனை உங்கள் முன்னால் விசாரித்தேன். ஆனால், இவனுக்கு எதிராக நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஏரோதுவுக்கும் தெரியவில்லை; அதனால்தான், அவரும் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பிவிட்டார். மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு எந்தக் குற்றத்தையும் இவன் செய்யவில்லை. அதனால், இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்கிறார்.—லூக்கா 23:14-16.

இயேசுவின் மேல் இருக்கிற பொறாமையால்தான் குருமார்கள் அவரைப் பிடித்து கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டதால், அவரை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும் என்று பிலாத்து நினைக்கிறார். அதோடு, அவர் நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்திருக்கும்போது, அவருடைய மனைவி அவருக்கு ஆள் அனுப்பி, “அந்த நல்ல மனுஷனுடைய விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்; அவரைப் பற்றி இன்று நான் ஒரு கனவு கண்டு [அநேகமாக, அது கடவுளின் செயலாக இருக்கலாம்] ரொம்பவே கலங்கிப்போனேன்” என்று சொல்கிறாள். இதற்குப் பிறகு, இயேசுவை விடுதலை செய்ய அவர் இன்னும் மும்முரமாக முயற்சி செய்கிறார்.—மத்தேயு 27:19.

இந்த நிரபராதியை பிலாத்து விடுதலை செய்ய வேண்டும். ஆனால், அவர் எப்படி விடுதலை செய்வார்?