Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 131

மரக் கம்பத்தில் ராஜா அறையப்படுகிறார்

மரக் கம்பத்தில் ராஜா அறையப்படுகிறார்

மத்தேயு 27:33-44 மாற்கு 15:22-32 லூக்கா 23:32-43 யோவான் 19:17-24

  • சித்திரவதைக் கம்பத்தில் இயேசு அறையப்படுகிறார்

  • இயேசுவின் தலைக்கு மேல் வைக்கப்பட்ட வாசகத்தைப் பார்த்து கேலி செய்கிறார்கள்

  • பூஞ்சோலையில் வாழ்கிற நம்பிக்கையை இயேசு கொடுக்கிறார்

நகரத்திலிருந்து கொஞ்சத் தூரத்தில் இருக்கிற ஒரு இடத்துக்கு இயேசு கொண்டுபோகப்படுகிறார். அங்குதான் அவரும் இன்னும் இரண்டு கொள்ளைக்காரர்களும் கொல்லப்படுவார்கள். அந்த இடத்துக்கு கொல்கொதா, அதாவது மண்டையோடு, என்று பெயர். அந்த இடத்தை ஓரளவு “தூரத்திலிருந்து” பார்க்க முடியும்.—மாற்கு 15:40.

தண்டனை பெற்ற மூன்று பேரின் உடைகளும் கழற்றப்படுகின்றன. போதையூட்டும் வெள்ளைப்போளமும் கசப்புப் பொருளும் கலந்த திராட்சமது அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அநேகமாக, எருசலேம் பெண்கள் இதைத் தயாரித்திருக்கலாம். வலியைக் குறைக்கிற இந்தக் கலவையை மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்குக் கொடுக்க ரோமர்கள் அனுமதிக்கிறார்கள். இயேசு அதை ருசிபார்த்த பிறகு, அதைக் குடிக்க மறுக்கிறார். ஏன்? இந்த முக்கியமான சோதனையின் சமயத்தில், தன்னுடைய எல்லா உணர்வுகளும் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். சாகும்வரை சுயநினைவோடும், உண்மையோடும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இயேசு மரக் கம்பத்தில் படுக்க வைக்கப்படுகிறார். (மாற்கு 15:25) படைவீரர்கள் அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணியடிக்கிறார்கள். அந்த ஆணிகள் அவருடைய சதையையும் தசைநார்களையும் கிழித்து, பயங்கர வலியை ஏற்படுத்துகின்றன. அந்த மரக் கம்பம் நேராக நிமிர்த்தி வைக்கப்படும்போது, இயேசுவின் உடல் பாரம் முழுவதும் அந்த ஆணிகளில் தொங்குகிறது. அப்போது, அவருடைய கைகளிலும் கால்களிலும் உள்ள காயங்கள் இன்னும் அதிகமாகக் கிழிகின்றன. இயேசு வலியில் துடிக்கிறார். ஆனாலும், படைவீரர்களை அவர் திட்டவில்லை. அதற்குப் பதிலாக, “தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை” என்று ஜெபம் செய்கிறார்.—லூக்கா 23:34.

குற்றவாளி செய்த தவறை ஒரு பலகையில் எழுதி மாட்டுவது ரோமர்களின் வழக்கம். இயேசு அறையப்பட்ட கம்பத்தின் மேல், “நாசரேத்தூர் இயேசு, யூதர்களுடைய ராஜா” என்ற வாசகம் வைக்கப்படுகிறது. இப்படி எழுதும்படி பிலாத்து கட்டளையிட்டிருந்தார். அது எபிரெயுவிலும் லத்தீனிலும் கிரேக்கிலும் எழுதப்பட்டிருக்கிறது. அதனால், கிட்டத்தட்ட எல்லாராலும் அதைப் படிக்க முடிகிறது. இயேசுவைக் கொல்லும்படி வற்புறுத்திய யூதர்கள்மேல் தனக்கு இருக்கிற வெறுப்பைக் காட்டுவதற்காக பிலாத்து இப்படிச் செய்கிறார். முதன்மை குருமார்கள் அதைப் பார்த்து எரிச்சலடைந்து, “‘யூதர்களுடைய ராஜா’ என்று எழுதாமல், ‘நான் யூதர்களுடைய ராஜா’ என்று அவன் சொல்லிக்கொண்டதாக எழுதுங்கள்” என்று பிலாத்துவிடம் சொல்கிறார்கள். இந்தத் தடவையும் அவர்கள் ஆட்டி வைக்கிற பொம்மையாக இருக்க பிலாத்து விரும்பவில்லை. அதனால், “நான் எழுதியது எழுதியதுதான்” என்று சொல்லிவிடுகிறார்.—யோவான் 19:19-22.

குருமார்களுக்குப் பயங்கர எரிச்சலாக இருக்கிறது. அதனால், நியாயசங்கத்தில் இயேசுவை விசாரணை செய்தபோது சொன்ன அதே பொய்யை இப்போதும் சொல்கிறார்கள். அதைக் கேட்டு, அந்த வழியாகப் போகிறவர்கள் கேலியாகத் தலையை ஆட்டி, “ஹா! ஆலயத்தைத் தரைமட்டமாக்கி மூன்று நாட்களில் கட்டப்போகிறவனே, இப்போது சித்திரவதைக் கம்பத்தைவிட்டு இறங்கி வந்து, உன்னை நீயே காப்பாற்றிக்கொள்” என்று பழிக்கிறார்கள். இதேபோல் வேத அறிஞர்களும் முதன்மை குருமார்களும், “இஸ்ரவேலின் ராஜாவான கிறிஸ்து இப்போது சித்திரவதைக் கம்பத்தைவிட்டு கீழே இறங்கி வருகிறானா பார்ப்போம், பிறகு அவனை நம்புவோம்” என்று சொல்லிக்கொள்கிறார்கள். (மாற்கு 15:29-32) அங்கே மரக் கம்பங்களில் ஏற்றப்பட்ட ஆட்களில் இயேசு ஒருவர்தான் நிரபராதி. ஆனாலும், அவருடைய இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் ஏற்றப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரைப் பழிக்கிறார்கள்.

ரோமப் படைவீரர்கள் நான்கு பேரும்கூட இயேசுவை ஏளனம் செய்கிறார்கள். அவர்கள் ஒருவேளை புளிப்பான திராட்சமதுவைக் குடித்துக்கொண்டிருந்திருக்கலாம். இயேசுவைக் கேலி செய்வதற்காக அதை அவரிடம் நீட்டுகிறார்கள். மரக் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருக்கிற இயேசுவினால் அதை எப்படிக் கைநீட்டி வாங்க முடியும்? அவருடைய தலையின் மேல் வைக்கப்பட்டிருக்கிற வாசகத்தைச் சுட்டிக்காட்டி, “நீ யூதர்களுடைய ராஜாவாக இருந்தால், உன்னை நீயே காப்பாற்றிக்கொள்” என்று கிண்டலாகச் சொல்கிறார்கள். (லூக்கா 23:36, 37) கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! வழியாகவும், சத்தியமாகவும், வாழ்வாகவும் இருக்கிற மனிதர் இப்போது அநியாயமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு, கேலி செய்யப்படுகிறார். ஆனாலும், வேடிக்கை பார்க்கிற யூதர்களையோ, கேலி செய்கிற ரோம வீரர்களையோ, தன் பக்கத்தில் மரக் கம்பங்களில் தொங்குகிற குற்றவாளிகளையோ திட்டாமல், எல்லா கஷ்டங்களையும் இயேசு தைரியமாகத் தாங்கிக்கொள்கிறார்.

படைவீரர்கள் நான்கு பேர் இயேசுவின் மேலங்கிகளை நான்கு பாகங்களாக்கி, ஆளுக்கொரு பாகத்தை எடுத்துக்கொள்கிறார்கள். யாருக்கு எந்தப் பாகம் என்று பார்ப்பதற்காகக் குலுக்கல் போடுகிறார்கள். இயேசுவின் உள்ளங்கி உயர்தரமாக இருக்கிறது. அது ‘தையல் இல்லாமல் மேலிருந்து கீழ்வரை ஒரே துணியாக நெய்யப்பட்டிருக்கிறது.’ அதனால், “இதைக் கிழிக்க வேண்டாம்; இது யாருக்கு என்று குலுக்கல் போட்டுப் பார்க்கலாம்” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். “என்னுடைய அங்கிகளைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள், என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்” என்ற வேதவசனம் இப்படி நிறைவேறுகிறது.—யோவான் 19:23, 24; சங்கீதம் 22:18.

கொஞ்ச நேரத்தில், அந்தக் குற்றவாளிகளில் ஒருவன் இயேசு ஒரு ராஜாவாகத்தான் இருப்பார் என்பதைப் புரிந்துகொள்கிறான். அதனால் இன்னொரு குற்றவாளியை அதட்டி, “கடவுளுக்குப் பயப்பட மாட்டாயா? உனக்கும் இதே தீர்ப்புதானே கிடைத்திருக்கிறது? நாம் தண்டிக்கப்படுவது நியாயம். நம்முடைய செயல்களுக்கு ஏற்ற தண்டனைதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையே” என்கிறான். பிறகு இயேசுவிடம், “நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று கெஞ்சுகிறான்.—லூக்கா 23:40-42.

அதற்கு அவர், “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று சொல்கிறார். (லூக்கா 23:43) என்னோடு பரலோக அரசாங்கத்தில் இருப்பாய் என்று இயேசு சொல்லவில்லை, “பூஞ்சோலையில் இருப்பாய்” என்றுதான் சொல்கிறார். தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு இயேசு கொடுத்த வாக்குறுதிக்கும் இந்தக் குற்றவாளிக்கு அவர் கொடுத்த வாக்குறுதிக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால், தன்னுடைய அப்போஸ்தலர்கள் பரலோக அரசாங்கத்தில் தன்னோடு சிம்மாசனங்களில் உட்காருவார்கள் என்ற வாக்குறுதியை அவர் கொடுத்திருந்தார். (மத்தேயு 19:28; லூக்கா 22:29, 30) இந்தக் குற்றவாளி ஒரு யூதனாக இருப்பதால், ஆதாம்-ஏவாளும் அவர்களுடைய பிள்ளைகளும் வாழ்வதற்காக இந்தப் பூமியில் கடவுள் ஏற்படுத்திய பூஞ்சோலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பான். இப்போது ஒரு அருமையான நம்பிக்கையோடு, இந்தக் குற்றவாளி கண்மூடலாம்.