Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 134

இயேசு உயிரோடு இருக்கிறார்!

இயேசு உயிரோடு இருக்கிறார்!

மத்தேயு 28:3-15 மாற்கு 16:5-8 லூக்கா 24:4-12 யோவான் 20:2-18

  • இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார்

  • இயேசுவின் கல்லறையில் நடக்கிற சம்பவங்கள்

  • வெவ்வேறு பெண்களுக்கு முன் தோன்றுகிறார்

கல்லறை காலியாக இருப்பதைப் பார்த்து அந்தப் பெண்கள் அதிர்ந்துபோகிறார்கள். உடனே, மகதலேனா மரியாள் ‘சீமோன் பேதுருவையும் இயேசுவின் பாசத்துக்குரிய சீஷரான’ யோவானையும் பார்க்க ஓடுகிறாள். (யோவான் 20:2) அந்தச் சமயத்தில், கல்லறையில் நிற்கிற மற்ற பெண்கள் ஒரு தேவதூதரைப் பார்க்கிறார்கள். ‘வெள்ளை அங்கி போட்டிருக்கிற’ இன்னொரு தேவதூதர் கல்லறைக்குள் இருக்கிறார்.—மாற்கு 16:5.

அந்தத் தேவதூதர்களில் ஒருவர் அந்தப் பெண்களிடம், “பயப்படாதீர்கள், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவைத்தானே தேடுகிறீர்கள்? அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார். அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள். சீக்கிரமாக அவருடைய சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள். உங்களுக்கு முன்பே அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்” என்று சொல்கிறார். (மத்தேயு 28:5-7) அதைக் கேட்டதும், அந்தப் பெண்கள் “நடுக்கத்தோடும், அதேசமயத்தில் பிரமிப்போடும்” சீஷர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்வதற்காக ஓடுகிறார்கள்.—மாற்கு 16:8.

இதற்குள், பேதுருவையும் யோவானையும் மரியாள் பார்த்துவிடுகிறாள். “நம் எஜமானை யாரோ கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று மூச்சுவாங்க சொல்கிறாள். (யோவான் 20:2) உடனே, பேதுருவும் யோவானும் கல்லறைக்கு ஓடுகிறார்கள். யோவான் வேகமாக ஓடி, முதல் ஆளாக கல்லறைக்குப் போய்விடுகிறார். ஆனால், அவர் வெளியிலேயே நின்றுகொள்கிறார். அவர் கல்லறைக்குள் எட்டிப் பார்க்கும்போது, கட்டுகள் மட்டும்தான் உள்ளே இருக்கின்றன.

பேதுரு வந்ததும் நேராகக் கல்லறைக்குள் போகிறார். நாரிழைத் துணிகளையும் இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த துணியையும் அங்கே பார்க்கிறார். இப்போது, யோவானும் உள்ளே போகிறார். அதற்குப் பிறகு, மரியாள் சொன்னதை அவர் நம்புகிறார். இயேசு முன்பே சொல்லியிருந்தாலும், அவர் உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார் என்று அவர்கள் இரண்டு பேருமே புரிந்துகொள்ளவில்லை. (மத்தேயு 16:21) குழப்பத்தோடு, அவர்கள் வீட்டுக்குப் போகிறார்கள். கல்லறைக்குத் திரும்பி வந்த மரியாள் அங்கேயே இருக்கிறாள்.

இதற்கிடையே, இயேசு உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார் என்று சீஷர்களிடம் சொல்வதற்காக மற்ற பெண்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வழியில் இயேசு அவர்களைச் சந்தித்து ‘வாழ்த்துகிறார்.’ உடனே, அவர்கள் அவர் முன்னால் ‘மண்டிபோடுகிறார்கள்.’ இயேசு அவர்களிடம், “பயப்படாதீர்கள்! நீங்கள் என் சகோதரர்களிடம் போய், அவர்களை கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 28:9, 10.

அந்தப் பெண்கள் கல்லறைக்கு வருவதற்கு முன்பு, அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது, தேவதூதர்கள் தோன்றியிருந்தார்கள். அப்போது, கல்லறையைக் காவல்காத்த காவல்காரர்கள் “பயந்து நடுங்கி, செத்தவர்களைப் போல ஆனார்கள்.” அவர்கள் சுயநினைவுக்கு வந்த பிறகு, நகரத்துக்குள் போய் “நடந்த எல்லாவற்றையும் முதன்மை குருமார்களிடம் சொன்னார்கள்.” அந்தக் குருமார்கள் யூதர்களுடைய பெரியோர்களிடம் இதைப் பற்றிப் பேசி, காவல்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்து இந்த விஷயத்தை அப்படியே மூடிமறைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். “ராத்திரியில் நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருடைய சீஷர்கள் வந்து அவருடைய உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று காவல்காரர்களிடம் சொல்லச் சொன்னார்கள்.—மத்தேயு 28:4, 11, 13.

வேலை நேரத்தில் தூங்கினால், ரோம வீரர்களுக்கு மரண தண்டனைகூட கொடுக்கப்படலாம். அதனால், அந்தக் குருமார்கள், “இது [அவர்கள் தூங்கிவிட்டார்கள் என்ற பொய்யான தகவல்] ஆளுநருடைய காதுக்கு எட்டினால், நாங்கள் அவரிடம் பேசிக்கொள்கிறோம், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்” என்று வாக்குக் கொடுத்தார்கள். (மத்தேயு 28:14) காவல்காரர்களும் லஞ்சம் வாங்கிக்கொண்டு, குருமார்கள் சொன்னபடியே செய்கிறார்கள். அதனால், இயேசுவின் உடல் திருடப்பட்டது என்ற பொய்யான செய்தி யூதர்கள் மத்தியில் பரவுகிறது.

மகதலேனா மரியாள் இன்னமும் அந்தக் கல்லறையில் அழுதுகொண்டு நிற்கிறாள். அந்தக் கல்லறைக்குள் அவள் எட்டிப் பார்க்கும்போது, வெள்ளை உடையில் இரண்டு தேவதூதர்கள் அங்கே இருக்கிறார்கள். இயேசுவின் உடல் வைக்கப்பட்ட இடத்தில், தலைமாட்டில் ஒருவரும் கால்மாட்டில் ஒருவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்கிறார்கள். அதற்கு மரியாள், “யாரோ என் எஜமானை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்கிறாள். அவள் இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பும்போது, இன்னொருவர் அங்கே நிற்பதைப் பார்க்கிறாள். தேவதூதர்கள் கேட்ட அதே கேள்வியை அவரும் கேட்கிறார். பிறகு, “யாரைத் தேடுகிறாய்?” என்றும் கேட்கிறார். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து, “ஐயா, நீங்கள் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால், எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், நான் போய் அவரை எடுத்துக்கொள்கிறேன்” என்று சொல்கிறாள்.—யோவான் 20:13-15.

உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவிடம்தான் மரியாள் பேசிக்கொண்டிருக்கிறாள். ஆனால், அந்தச் சமயத்தில் அவரை அவள் அடையாளம் தெரிந்துகொள்ளவில்லை. அப்போது அவர், “மரியாளே!” என்று கூப்பிடுகிறார். அவர் கூப்பிட்ட விதத்தை வைத்தே, அவர் இயேசுதான் என்று மரியாள் புரிந்துகொள்கிறாள். உடனே சந்தோஷமாக, “ரபூனி!” (“போதகரே!” என்று அர்த்தம்) என்று சொல்கிறாள். ஆனாலும், இயேசு உடனே பரலோகத்துக்குப் போய்விடுவார் என்ற பயத்தில் அவரைப் பிடித்துக்கொள்கிறாள். அதனால் இயேசு அவளிடம், “என்னைப் பிடித்துக்கொண்டிருக்காதே. ஏனென்றால், நான் இன்னும் என் தகப்பனிடம் போகவில்லை. நீ என் சகோதரர்களிடம் போய், ‘நான் என் தகப்பனிடமும் உங்கள் தகப்பனிடமும் என் கடவுளிடமும் உங்கள் கடவுளிடமும் போகப்போகிறேன்’ என்று சொல்” என்கிறார்.—யோவான் 20:16, 17.

அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் கூடியிருக்கிற இடத்துக்கு மரியாள் ஓடுகிறாள். அவர்களிடம், “நான் எஜமானைப் பார்த்தேன்!” என்று சொல்கிறாள். ஏற்கெனவே மற்ற பெண்கள் சொன்னதுபோல, இவளும் கல்லறையில் நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்கிறாள். (யோவான் 20:18) ஆனால், இந்த விஷயங்கள் ‘அவர்களுக்கு அபத்தமாகத் தோன்றுகிறது.’—லூக்கா 24:11.