Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 136

கலிலேயா கடலோரத்தில்

கலிலேயா கடலோரத்தில்

யோவான் 21:1-25

  • கலிலேயா கடலோரத்தில் இயேசு தோன்றுகிறார்

  • பேதுருவும் மற்றவர்களும் ஆடுகளுக்கு உணவளிக்க வேண்டும்

இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களோடு இருந்த கடைசி இரவில், “நான் உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்று சொல்லியிருந்தார். (மத்தேயு 26:32; 28:7, 10) அவரைப் பின்பற்றிய நிறைய பேர் அங்கே போகிறார்கள். ஆனால், அவர்கள் கலிலேயாவில் என்ன செய்வார்கள்?

ஒரு கட்டத்தில் பேதுரு, “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்று அப்போஸ்தலர்கள் ஆறு பேரிடம் சொல்கிறார். அதற்கு அவர்கள், “நாங்களும் உங்களோடு வருகிறோம்” என்று சொல்கிறார்கள். (யோவான் 21:3) அன்று ராத்திரி அவர்களுக்கு ஒரு மீன்கூட கிடைக்கவில்லை. விடியும் நேரத்தில், இயேசு கரையில் நிற்கிறார். ஆனால், அவர் யார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே, உங்களிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா?” என்று சத்தமாகக் கேட்கிறார். அதற்கு அவர்கள், “ஒன்றுமே இல்லை!” என்கிறார்கள். அப்போது அவர், “படகின் வலது பக்கத்தில் வலையைப் போடுங்கள், உங்களுக்கு மீன் கிடைக்கும்” என்கிறார். (யோவான் 21:5, 6) அப்படிப் போட்டபோது, வலையை இழுக்கக்கூட முடியாத அளவுக்கு ஏராளமான மீன்களைப் பிடிக்கிறார்கள்.

உடனே, “அவர் நம் எஜமான்தான்!” என்று பேதுருவிடம் யோவான் சொல்கிறார். (யோவான் 21:7) பேதுரு அதைக் கேட்டதும், தான் கழற்றி வைத்திருந்த மேலங்கியை எடுத்துக் கட்டிக்கொண்டு, கடலில் குதிக்கிறார். கிட்டத்தட்ட 90 மீட்டர் தூரம் நீந்தி கரைக்குப் போகிறார். மற்றவர்கள் வலை நிறைய மீன்களை இழுத்துக்கொண்டு, அவருக்குப் பின்னால் மெதுவாகப் படகில் வருகிறார்கள்.

கரைக்கு வந்ததும், ‘கரியால் தீ மூட்டப்பட்டு அதன்மேல் மீன் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். அங்கே ரொட்டியும் இருக்கிறது.’ இயேசு அவர்களிடம், “இப்போது நீங்கள் பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்று சொல்கிறார். பேதுரு பெரிய மீன்கள் நிறைந்த வலையைக் கரைக்கு இழுக்கிறார். அதில் 153 மீன்கள் இருக்கின்றன. இயேசு அவர்களிடம், “வந்து சாப்பிடுங்கள்” என்று சொல்கிறார். அவர்களில் ஒருவருக்குக்கூட, “நீங்கள் யார்?” என்று கேட்கத் தைரியம் வரவில்லை; ஏனென்றால், அவர் இயேசு என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. (யோவான் 21:9-12) ஒரு தொகுதியாக தன் சீஷர்கள் முன்னால் அவர் இப்போது மூன்றாவது தடவையாகத் தோன்றியிருக்கிறார்.

சாப்பிடுவதற்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் ரொட்டியும் மீனும் கொடுக்கிறார். வலை நிறைய இருக்கிற மீன்களைப் பார்த்து, “யோவானின் மகனான சீமோனே, இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” என்று கேட்கிறார். இயேசு கொடுத்த வேலையைவிட மீன்பிடி தொழிலை பேதுரு ரொம்ப விரும்புகிறாரா? பேதுரு அவரிடம், “ஆமாம், எஜமானே, உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பது உங்களுக்கே தெரியும்” என்று சொல்கிறார். அப்படியென்றால், “என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்” என்று இயேசு அவரிடம் சொல்கிறார்.—யோவான் 21:15.

இரண்டாவது தடவையாக, “யோவானின் மகனான சீமோனே, என்மேல் உனக்கு அன்பு இருக்கிறதா?” என்று இயேசு கேட்கிறார். பேதுருவுக்கு ஒருவேளை குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனாலும் உற்சாகத்தோடு, “ஆமாம், எஜமானே, உங்கள்மேல் எனக்குப் பாசம் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்” என்கிறார். உடனே இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளை நீ மேய்க்க வேண்டும்” என்று சொல்கிறார்.—யோவான் 21:16.

மூன்றாவது தடவையாக, “யோவானின் மகனான சீமோனே, என்மேல் உனக்குப் பாசம் இருக்கிறதா?” என்று கேட்கிறார். இயேசு தன்னைச் சந்தேகப்படுகிறாரோ என்று பேதுரு யோசித்திருக்கலாம். அவர் இயேசுவிடம், “எஜமானே, உங்களுக்கு எல்லாமே தெரியும். உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பதும் தெரியும்” என்று அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார். மறுபடியும் இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்” என்கிறார். (யோவான் 21:17) உண்மைதான், சபையை முன்நின்று வழிநடத்துகிறவர்கள் கடவுளுடைய மந்தைக்குள் வருகிறவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.

கடவுள் தந்த வேலையைச் செய்ததால், இயேசு கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். பேதுருவுக்கும் அதேபோன்ற நிலைமை வரும் என்று இயேசு சொல்கிறார். “நீ இளைஞனாக இருந்தபோது நீயே உடை உடுத்திக்கொண்டு விரும்பிய இடங்களுக்குப் போனாய். ஆனால், வயதாகும்போது நீ உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு உடை உடுத்தி நீ விரும்பாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான்” என்கிறார். ஆனாலும், “நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா” என்று இயேசு அவரை உற்சாகப்படுத்துகிறார்.—யோவான் 21:18, 19.

பேதுரு அப்போஸ்தலன் யோவானைப் பார்த்ததும், “எஜமானே, இவனுக்கு என்ன நடக்கும்?” என்று கேட்கிறார். இயேசுவின் அன்புக்குரிய அந்த அப்போஸ்தலனுக்கு என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ள பேதுரு ஆசைப்பட்டிருக்கலாம். இயேசு அவரிடம், “நான் வரும்வரை இவன் உயிரோடிருக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பம் என்றால், உனக்கென்ன?” என்று சொல்கிறார். (யோவான் 21:21-23) மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பேதுரு தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அதேசமயத்தில், மற்ற அப்போஸ்தலர்களைவிட யோவான் ரொம்ப நாள் உயிரோடிருப்பார் என்பதையும், இயேசு ராஜ அதிகாரத்தோடு வருவதைப் பற்றிய தரிசனத்தைப் பார்ப்பார் என்பதையும் இயேசு இப்படிச் சுட்டிக்காட்டுகிறார்.

இயேசு இன்னும் நிறைய விஷயங்களைச் செய்தார். அவரைப் பற்றி எழுத எத்தனை சுருள்கள் இருந்தாலும் போதாது!