Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 139

இயேசு இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுகிறார்

இயேசு இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுகிறார்

1 கொரிந்தியர் 15:24-28

  • செம்மறியாடுகளுக்கும் வெள்ளாடுகளுக்கும் என்ன எதிர்காலம்?

  • பூஞ்சோலை பூமியில் நிறைய பேர் சந்தோஷமாக வாழ்வார்கள்

  • தான்தான் வழி, சத்தியம், வாழ்வு என்பதை இயேசு நிரூபிக்கிறார்

இயேசு ஞானஸ்நானம் எடுத்த உடனேயே பிசாசு என்ற எதிரி அவரைச் சோதித்தான். அவர் ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே, அவரை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று அவன் தீர்மானமாயிருந்தான். அவன் இயேசுவைத் திரும்பத் திரும்பச் சோதித்தான். “இந்த உலகத்தை ஆளுகிறவன் வருகிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை” என்று பிற்பாடு இயேசு அந்தப் பொல்லாதவனைப் பற்றிச் சொன்னார்.—யோவான் 14:30.

‘பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்புக்கு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவனுக்கு’ என்ன கதி ஏற்படும் என்பதை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார். மனிதர்களின் கொடிய எதிரியான பிசாசு பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்படுவதை அந்தத் தரிசனத்தில் அவர் பார்த்தார். அவன் “தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு” வந்திருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 12) நாம் அந்த ‘கொஞ்சக் காலத்தில்’ வாழ்கிறோம் என்பதை நம்புவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. “பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு” சீக்கிரத்தில் அதலபாதாளத்துக்குள் தள்ளப்படுவான்; கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு ஆட்சி செய்யும்போது, அவன் 1,000 வருஷங்களுக்கு செயல்பட முடியாத நிலையில் இருப்பான்.—வெளிப்படுத்துதல் 20:1, 2.

அந்தச் சமயத்தில் இந்தப் பூமியில் என்ன நடக்கும்? இங்கே யார் வாழ்வார்கள்? எப்படிப்பட்ட சூழல் இருக்கும்? செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையில் இந்தக் கேள்விகளுக்கு இயேசு பதில் சொன்னார். செம்மறியாடு போன்ற நல்ல மனிதர்கள் இயேசுவின் சகோதரர்களுடன் ஒத்துழைத்து அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அந்தச் செம்மறியாடுகளுக்கு என்ன எதிர்காலம் என்று அந்த உவமையில் இயேசு சுட்டிக்காட்டினார். இவர்களுக்கு எதிர்மாறாக நடந்துகொள்கிற வெள்ளாடு போன்ற ஆட்களுக்கு என்ன நடக்கும் என்றும் அவர் சொன்னார். “இவர்கள் [வெள்ளாடுகள்] நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள், ஆனால் நீதிமான்கள் [செம்மறியாடுகள்] நிரந்தரமான வாழ்வைப் பெறுவார்கள்” என்றார்.—மத்தேயு 25:46.

தன் பக்கத்திலிருந்த மரக் கம்பத்தில் தொங்கிய குற்றவாளியிடம் இயேசு சொன்ன வார்த்தைகளைப் புரிந்துகொள்ள இந்த வசனம் உதவுகிறது. தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன அதே பரிசை இந்தக் குற்றவாளிக்கும் கொடுப்பதாக இயேசு சொல்லவில்லை. அப்போஸ்தலர்கள் பரலோக அரசாங்கத்தில் தன்னுடன் ஆட்சி செய்வார்கள் என்று இயேசு சொன்னார். ஆனால் மனம் திருந்திய அந்தக் குற்றவாளியிடம், “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று சொன்னார். (லூக்கா 23:43) ஒரு அழகான பூஞ்சோலையில் வாழப்போகிற நம்பிக்கை அந்த மனிதனுக்குக் கிடைத்தது. எதிர்காலத்தில் இயேசு நியாயந்தீர்க்கும்போது, செம்மறியாடுகளாகப் பிரிக்கப்பட்டு ‘நிரந்தரமான வாழ்வைப் பெறுகிறவர்களும்’ அந்தப் பூஞ்சோலையில் வாழ்வார்கள்.

அந்தச் சமயத்தில் பூமியில் இருக்கப்போகிற சூழ்நிலையைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இப்படி விவரித்தார்: “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுளே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.

அந்தக் குற்றவாளி பூஞ்சோலையில் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றால், அவன் மறுபடியும் உயிரோடு எழுப்பப்பட வேண்டும். அவனைப் போல நிறைய பேர் உயிரோடு எழுப்பப்படுவார்கள். “நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள். நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் தண்டனைத் தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்று இயேசு தெளிவாகச் சொன்னார்.—யோவான் 5:28, 29.

உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ஆட்களும் பரலோகத்தில் இயேசுவுடன் என்ன செய்வார்கள்? “இவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற குருமார்களாக இருந்து, அவரோடு 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 20:6) கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யப்போகிற ஆண்களும் பெண்களும் இந்தப் பூமியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஆட்சி செய்யும்போது, மக்களிடம் கரிசனையோடு நடந்துகொள்வார்கள், அவர்களை நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.—வெளிப்படுத்துதல் 5:10.

பூமியில் வாழ்கிற மனிதர்களுக்கு இயேசு தன்னுடைய மீட்பு பலியின் நன்மைகளைக் கொடுப்பார். ஆதாமினால் வந்த பாவத்திலிருந்து அவர்களை விடுதலை செய்வார். இயேசுவும் அவருடன் ஆட்சி செய்கிறவர்களும் சேர்ந்து, உண்மையுள்ள மனிதர்களைப் பரிபூரண நிலைக்குக் கொண்டுவருவார்கள். ஆதாம்-ஏவாளிடம், பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகி இந்தப் பூமியை நிரப்பும்படி கடவுள் சொல்லியிருந்தார். மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் அப்போது நினைத்தாரோ அந்த வாழ்க்கையை உண்மையுள்ள மனிதர்களுக்குக் கடவுள் தருவார். ஆதாமின் பாவத்தினால் ஏற்பட்ட மரணம்கூட இல்லாமல் போய்விடும்!

இப்படி, கடவுள் கொடுத்த எல்லா பொறுப்புகளையும் இயேசு செய்து முடிப்பார். தன்னுடைய ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில், அரசாங்கத்தையும் பரிபூரணமான மனித குடும்பத்தையும் தன்னுடைய தகப்பனிடம் இயேசு ஒப்படைப்பார். எப்பேர்ப்பட்ட மனத்தாழ்மை! இதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “எல்லாமே மகனுக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட பின்பு, எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்திய கடவுளுக்கு மகனும் கீழ்ப்பட்டிருப்பார். அப்போது, கடவுள்தான் எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்.”—1 கொரிந்தியர் 15:28.

கடவுளுடைய அருமையான நோக்கங்களை நிறைவேற்றுவதில் இயேசுவுக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. காலங்கள் போகப் போக, அந்த நோக்கங்கள் ஒவ்வொன்றும் நமக்குத் தெரியவரும். அது என்னவாக இருந்தாலும் அதில் இயேசுவுக்கு நிச்சயம் ஒரு பங்கு இருக்கும். அவர் எப்போதுமே “வழியும் சத்தியமும் வாழ்வுமாக” இருப்பார்.—யோவான் 14:6.