Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 70

பிறந்ததிலிருந்தே பார்வை இல்லாதவனைக் குணமாக்குகிறார்

பிறந்ததிலிருந்தே பார்வை இல்லாதவனைக் குணமாக்குகிறார்

யோவான் 9:1-18

  • பிறந்ததிலிருந்தே பார்வை இல்லாத ஒரு பிச்சைக்காரனைக் குணமாக்குகிறார்

இயேசு இன்னமும் எருசலேமில்தான் இருக்கிறார். ஓய்வுநாள் அன்றைக்கு அவரும் அவருடைய சீஷர்களும் அந்த நகரத்தில் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். அப்போது, பிறந்ததிலிருந்தே பார்வை இல்லாத ஒரு பிச்சைக்காரனைப் பார்க்கிறார்கள். அப்போது அவருடைய சீஷர்கள், “ரபீ, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா, இவனுடைய அப்பா அம்மா செய்த பாவமா?” என்று கேட்கிறார்கள்.—யோவான் 9:2.

இவன் தன்னுடைய அம்மாவின் வயிற்றில் இருந்தபோது ஏதாவது பாவம் செய்திருப்பானோ என்று சீஷர்கள் நினைக்கிறார்கள். அதனால் இயேசு, “இவன் செய்த பாவமும் இல்லை, இவனுடைய அப்பா அம்மா செய்த பாவமும் இல்லை. கடவுளுடைய செயல்கள் இவன் மூலம் எல்லாருக்கும் தெரியவரும்படியே இப்படிப் பிறந்திருக்கிறான்” என்று சொல்கிறார். (யோவான் 9:3) இவனோ இவனுடைய அப்பா-அம்மாவோ செய்த ஏதோவொரு பாவத்தினால்தான் இவன் பார்வை இல்லாதவனாகப் பிறந்தான் என்று நினைப்பது தவறு. ஆதாம் பாவம் செய்ததால்தான், மனிதர்கள் எல்லாரும் பாவ இயல்போடு பிறக்கிறார்கள். பார்வை இல்லாமல் பிறப்பது போன்ற குறைபாடுகளும் அதனால்தான் ஏற்படுகின்றன. இருந்தாலும், இவன் பார்வை இல்லாதவனாகப் பிறந்ததால் கடவுளின் செயல்களை எல்லாருக்கும் தெரியப்படுத்த இயேசுவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. மக்களுடைய நோய்களைக் குணமாக்கிய ஒவ்வொரு சமயத்திலும் கடவுளுடைய செயல்களை இயேசு தெரியப்படுத்தினார்.

இந்தச் செயல்களை இப்போதே செய்ய வேண்டும் என்று இயேசு சொல்கிறார். “என்னை அனுப்பியவருடைய செயல்களைப் பகலிலேயே நாம் செய்ய வேண்டும். ராத்திரி வரப்போகிறது, அப்போது எந்த மனுஷனாலும் வேலை செய்ய முடியாது. நான் இந்த உலகத்தில் இருக்கும்வரை, இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். (யோவான் 9:4, 5) சீக்கிரத்தில், இயேசு இறந்துவிடுவார். அப்போது அவர் கல்லறையின் இருட்டில், எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்பார். அதுவரைக்கும், அவர் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறார்.

பார்வை இல்லாத இந்த மனிதனை இயேசு குணமாக்குவாரா? அவனை எப்படிக் குணமாக்குவார்? இயேசு தரையில் துப்பி, எச்சிலால் மண்ணைக் குழைத்து, அந்த மனிதனுடைய கண்கள்மேல் பூசுகிறார். பிறகு, “சீலோவாம் குளத்துக்குப் போய்க் கழுவு” என்று சொல்கிறார். (யோவான் 9:7) அவனும் இயேசு சொன்னபடியே செய்கிறான். அவனுக்குப் பார்வை கிடைக்கிறது. வாழ்க்கையில் முதல் தடவையாக அவன் பார்க்கிறான்! அவனுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!

அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களும் முன்பு அவன் பிச்சை எடுத்ததைப் பார்த்தவர்களும், “இங்கே உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவன் இவன்தானே?” என்று பேசிக்கொள்கிறார்கள். சிலர், “இவன்தான்” என்று சொல்கிறார்கள். வேறு சிலர் அதை நம்பாமல், “இல்லவே இல்லை, ஆனால் அவனைப் போலவே இருக்கிறான்” என்று சொல்கிறார்கள். அந்த மனிதனோ, “நான்தான் அவன்” என்று சொல்கிறான்.—யோவான் 9:8, 9.

அப்போது அவர்கள், “அப்படியானால், உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவன், “இயேசு என்பவர் மண்ணைக் குழைத்து என் கண்கள்மேல் பூசி, ‘சீலோவாம் குளத்துக்குப் போய்க் கழுவு’ என்று சொன்னார். நானும் போய்க் கழுவினேன், எனக்குப் பார்வை கிடைத்தது” என்று சொல்கிறான். அதற்கு அவர்கள், “அவர் எங்கே?” என்று கேட்கிறார்கள். அவனோ, “எனக்குத் தெரியாது” என்கிறான்.—யோவான் 9:10-12.

மக்கள் அவனைப் பரிசேயர்களிடம் கூட்டிக்கொண்டு போகிறார்கள். அவனுக்கு எப்படிப் பார்வை கிடைத்தது என்று பரிசேயர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவன், “மண்ணைக் குழைத்து அவர் என் கண்கள்மேல் பூசினார்; அதைக் கழுவிய பிறகு எனக்குப் பார்வை கிடைத்தது” என்கிறான். நியாயப்படி பார்த்தால், அந்தப் பரிசேயர்கள் அவனுக்குப் பார்வை கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களில் சிலர் இயேசுவைக் குறை சொல்கிறார்கள். “அந்த மனுஷன் கடவுளிடமிருந்து வந்தவனல்ல. ஏனென்றால், அவன் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். மற்றவர்களோ, “இப்படிப்பட்ட அற்புதங்களை ஒரு பாவியால் எப்படிச் செய்ய முடியும்?” என்று கேட்கிறார்கள். (யோவான் 9:15, 16) இதனால், பரிசேயர்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுகிறது.

பலரும் பலவிதமாகப் பேச ஆரம்பித்ததால், பரிசேயர்கள் அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து, “அவன் உனக்குத்தானே பார்வை கொடுத்தான், அந்த ஆளைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்று சொல்கிறான். இயேசு யார் என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.—யோவான் 9:17.

யூதர்கள் இதை நம்ப மறுக்கிறார்கள். இயேசுவும் அந்தப் பிச்சைக்காரனும் கூட்டுச்சேர்ந்து மக்களை ஏமாற்றுவதாக அவர்கள் நினைத்திருக்கலாம். கடைசியில், அவனுடைய அப்பா-அம்மாவைக் கூப்பிட்டு, அவன் உண்மையிலேயே பார்வை இல்லாதவனாகப் பிறந்தானா என்பதை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.