Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 5

மீட்புவிலை​—⁠கடவுள் தந்திருக்கும் மிகச் சிறந்த பரிசு

மீட்புவிலை​—⁠கடவுள் தந்திருக்கும் மிகச் சிறந்த பரிசு

1, 2. (அ) நீங்கள் எதை மிகச் சிறந்த பரிசு என்று சொல்வீர்கள்? (ஆ) மீட்புவிலைதான் கடவுள் நமக்குக் கொடுத்த மிகச் சிறந்த பரிசு என்று ஏன் சொல்லலாம்?

இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசு எது? மிகச் சிறந்த ஒரு பரிசு எப்போதுமே விலை உயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும்போது அல்லது உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் ஒன்றாக இருக்கும்போது நீங்கள் அதற்காக நன்றியோடு இருப்பீர்கள்.

2 கடவுள் நமக்கு நிறைய பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்; எல்லாவற்றையும்விட மிக அதிகமாகத் தேவைப்படுகிற ஒரு பரிசையும் கொடுத்திருக்கிறார். அதுதான் மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்திருக்கும் மிகச் சிறந்த பரிசு. நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக யெகோவா தன்னுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவை இந்தப் பூமிக்கு அனுப்பினார்; இதைப் பற்றி இந்த அதிகாரத்தில் படிப்போம். (மத்தேயு 20:28-ஐ வாசியுங்கள்.) இயேசுவை மீட்புவிலையாக அனுப்புவதன் மூலம், நம்மேல் உண்மையான அன்பு இருப்பதை யெகோவா காட்டியிருக்கிறார்.

மீட்புவிலை என்றால் என்ன?

3. மனிதர்கள் ஏன் சாகிறார்கள்?

3 மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுதான் மீட்புவிலை. (எபேசியர் 1:7) நமக்கு மீட்புவிலை ஏன் தேவை என்பதைப் புரிந்துகொள்ள, ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தார்கள். அதனால், அவர்கள் செத்துப்போனார்கள். அவர்களுடைய பாவம் பரம்பரை பரம்பரையாக அவர்களுடைய எல்லா பிள்ளைகளுக்கும் வந்துவிட்டது. அதனால், நாம் எல்லாரும் சாகிறோம்.—பின்குறிப்பு 9-ஐப் பாருங்கள்.

4. ஆதாம் யார், அவனுக்குக் கடவுள் என்ன கொடுத்தார்?

4 முதல் மனுஷனான ஆதாமை யெகோவா படைத்ததால் அவர் அவனுடைய அப்பாவாக ஆனார். (லூக்கா 3:38) அவனுக்கு ரொம்ப அருமையான ஒரு பரிசை யெகோவா கொடுத்தார். வியாதியோ முதுமையோ மரணமோ இல்லாத ஒரு பரிபூரண வாழ்க்கையைக் கொடுத்தார். ஆதாமுக்குப் பரிபூரணமான மனமும் பரிபூரணமான உடலும் இருந்தது. யெகோவா அவனிடம் அடிக்கடி பேசினார். அவனிடம் அவர் என்ன எதிர்பார்த்தார் என்பதைத் தெளிவாகச் சொன்னார். அவன் சந்தோஷமாகச் செய்வதற்கு நல்ல வேலையையும் கொடுத்தார்.—ஆதியாகமம் 1:28-30; 2:16, 17.

5. ஆதாமைக் கடவுள் “தன்னுடைய சாயலில்” படைத்தார் என்று பைபிள் சொல்வதன் அர்த்தம் என்ன?

5 ஆதாமைக் கடவுள் “தன்னுடைய சாயலில்” படைத்தார். (ஆதியாகமம் 1:27) அவரிடம் இருந்த அன்பு, ஞானம், நீதி, வல்லமை போன்ற அருமையான குணங்களை அவனுக்குக் கொடுத்தார். அவனை ஒரு ரோபோ போல அவர் படைக்கவில்லை. சொந்தமாக யோசித்து முடிவு எடுக்கும் சுதந்திரத்தை அவனுக்குக் கொடுத்தார். அவர் சொல்கிறபடி நடப்பதா வேண்டாமா என்ற முடிவை அவனே எடுக்கும்படி விட்டுவிட்டார். ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க முடிவு எடுத்திருந்தால், பூஞ்சோலை பூமியில் என்றென்றைக்கும் வாழ்ந்திருக்க முடியும்.

6. ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது எதையெல்லாம் இழந்தான்? இது நம்மை எப்படிப் பாதித்திருக்கிறது?

6 ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போய் மரண தண்டனையைப் பெற்றபோது அருமையான ஆசீர்வாதங்களை இழந்தான். அதாவது, யெகோவாவோடு அவனுக்கு இருந்த நெருங்கிய நட்பையும் பரிபூரண வாழ்க்கையையும் ஏதேன் தோட்டத்தையும் இழந்தான். (ஆதியாகமம் 3:17-19) ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல்போக முடிவு எடுத்தார்கள். அதனால், அவர்களுக்கு எந்த எதிர்கால நம்பிக்கையும் இல்லாமல் போனது. ஆதாம் பாவம் செய்ததால், “பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோமர் 5:12) ஆதாம் அப்படிப் பாவம் செய்தபோது தன்னை மட்டுமல்ல, நம்மையும்கூட பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமையாக விற்றுப்போட்டான். (ரோமர் 7:14) நமக்கு எதிர்கால நம்பிக்கை இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது.

7, 8. மீட்புவிலை என்றால் என்ன?

7 மீட்புவிலை என்றால் என்ன? மீட்புவிலை என்பது ஒருவரை விடுவிப்பதற்காகச் செலுத்தப்படும் தொகையைக் குறிக்கிறது. பைபிளின்படி, ஒரு நஷ்டத்தை ஈடுகட்டுவதற்குக் கொடுக்கப்படும் தொகையையும் குறிக்கிறது.

8 ஆதாம் பாவம் செய்ததால் ஏற்பட்ட மாபெரும் நஷ்டத்தை ஈடுகட்டும் சக்தி எந்த மனிதருக்கும் கிடையாது. அதனால், நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்கு யெகோவா ஏற்பாடு செய்தார். மீட்புவிலை எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றியும், அதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

மீட்புவிலையை யெகோவா எப்படிக் கொடுத்தார்?

9. எப்படிப்பட்ட மீட்புவிலை நமக்குத் தேவைப்பட்டது?

9 எல்லா மனிதர்களுமே பாவிகள் என்பதால், ஆதாம் இழந்த பரிபூரண உயிருக்கு ஈடாக எந்த மனிதராலும் மீட்புவிலையைக் கொடுக்க முடியவில்லை. (சங்கீதம் 49:7, 8) ஆதாம் இழந்த பரிபூரண உயிருக்கு ஈடாக இன்னொரு பரிபூரண உயிரைத்தான் மீட்புவிலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அதனால்தான் அதை “சரிசமமான மீட்புவிலை” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 2:6) நமக்குத் தேவைப்பட்ட மீட்புவிலை, ஆதாம் இழந்த உயிருக்குச் சரிசமமாக இருக்க வேண்டியிருந்தது.

10. மீட்புவிலைக்கு யெகோவா எப்படி ஏற்பாடு செய்தார்?

10 மீட்புவிலைக்கு யெகோவா எப்படி ஏற்பாடு செய்தார்? யெகோவா அவருடைய பாசத்துக்குரிய ஒரே மகனை, அதாவது அவர் முதன்முதலில் படைத்த இயேசுவை, இந்தப் பூமிக்கு அனுப்பினார். (1 யோவான் 4:9, 10) இயேசு தன்னுடைய அப்பாவையும் பரலோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு வருவதற்குத் தயாராக இருந்தார். (பிலிப்பியர் 2:7) இயேசுவுடைய உயிரைப் பரலோகத்திலிருந்து மரியாளின் கருப்பைக்கு யெகோவா மாற்றினார். அதனால், இயேசு எந்தப் பாவமும் இல்லாத பரிபூரண மனிதராகப் பிறந்தார்.—லூக்கா 1:35.

யெகோவா தன்னுடைய அருமை மகனை மீட்புவிலையாக நமக்குக் கொடுத்திருக்கிறார்

11. ஒரு மனிதரின் உயிர் எப்படி எல்லா மனிதர்களுக்கும் மீட்புவிலையாகக் கொடுக்கப்பட்டது?

11 முதல் மனிதனான ஆதாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாததால் அவனுடைய சந்ததியில் வந்த எல்லா மனிதர்களும் பரிபூரண வாழ்க்கையை இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு மரணம் இல்லாத வாழ்க்கையை இன்னொரு மனிதரால் கொடுக்க முடிந்ததா? முடிந்தது. (ரோமர் 5:19-ஐ வாசியுங்கள்.) எந்தப் பாவமும் செய்யாத இயேசு தன்னுடைய பரிபூரண உயிரை மீட்புவிலையாகக் கொடுத்தார். (1 கொரிந்தியர் 15:45) அவருடைய பரிபூரண உயிரின் மூலமாக ஆதாமுடைய எல்லா பிள்ளைகளும் மரணம் இல்லாமல் வாழும் வாய்ப்பைப் பெற்றார்கள்.—1 கொரிந்தியர் 15:21, 22.

12. இயேசு ஏன் பாடுபட்டு சாக வேண்டியிருந்தது?

12 இயேசு இறப்பதற்கு முன்பு எந்தளவு பாடுபட்டார் என்று பைபிள் சொல்கிறது. அவர் கொடூரமாக சாட்டையால் அடிக்கப்பட்டார், சித்திரவதைக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டார், அணு அணுவாக மரண வேதனையை அனுபவித்து இறந்துபோனார். (யோவான் 19:1, 16-18, 30) இயேசு ஏன் இவ்வளவு பாடுபட்டு சாக வேண்டியிருந்தது? கடுமையான சோதனைகள் வரும்போது எந்த மனிதனும் கடவுளுக்கு உண்மையோடு இருக்க மாட்டான் என்று சாத்தான் சொன்னான். ஆனால், பயங்கரமான கஷ்டங்கள் வந்தாலும் ஒரு பரிபூரண மனிதனால் கடவுளுக்கு உண்மையோடு இருக்க முடியும் என்பதை இயேசு நிரூபித்துக் காட்டினார். இயேசுவைப் பார்த்து யெகோவா எந்தளவுக்குப் பெருமைப்பட்டிருப்பார்!—நீதிமொழிகள் 27:11; பின்குறிப்பு 15-ஐப் பாருங்கள்.

13. மீட்புவிலை எப்படிச் செலுத்தப்பட்டது?

13 மீட்புவிலை எப்படிச் செலுத்தப்பட்டது? யூத காலண்டரின்படி கி.பி. 33-வது வருஷம் நிசான் 14-ம் தேதி இயேசுவின் எதிரிகள் அவரைக் கொல்லும்படி யெகோவா அனுமதித்தார். (எபிரெயர் 10:10) மூன்று நாட்களுக்குப் பிறகு இயேசுவை யெகோவா உயிரோடு எழுப்பினார். மனித உடலில் அல்ல, பரலோகத்துக்குரிய உடலில் உயிரோடு எழுப்பினார். இயேசு பரலோகத்துக்குப் போனதும் தன் பரிபூரண மனித உயிரின் மதிப்பை மீட்புவிலையாக யெகோவாவிடம் சமர்ப்பித்தார். (எபிரெயர் 9:24) இப்படி, இயேசு மீட்புவிலையைச் செலுத்தியதால் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை பெறும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.ரோமர் 3:23, 24-ஐ வாசியுங்கள்.

மீட்புவிலையினால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

14, 15. நம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

14 கடவுள் தந்திருக்கிற மிகச் சிறந்த பரிசினால் நமக்கு நன்மைகள் கிடைத்திருக்கின்றன. இப்போது நாம் அனுபவிக்கும் நன்மைகளையும் இனி அனுபவிக்கப்போகும் நன்மைகளையும் பற்றிப் பார்க்கலாம்.

15 பாவங்களுக்கு மன்னிப்பு. சரியானதைச் செய்வது எப்போதுமே சுலபம் கிடையாது. சிலசமயம் நாம் தவறாக ஏதாவது சொல்லிவிடலாம் அல்லது செய்துவிடலாம். (கொலோசெயர் 1:13, 14) மன்னிப்பு பெற நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் செய்த தவறை நினைத்து உண்மையாக மனம் வருந்த வேண்டும். மனத்தாழ்மையோடு யெகோவாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது, நம் பாவங்கள் கண்டிப்பாக மன்னிக்கப்படும்.—1 யோவான் 1:8, 9.

16. சுத்தமான மனசாட்சியோடு இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

16 சுத்தமான மனசாட்சி. நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் நம் மனசாட்சி உறுத்தும். நாம் எதற்குமே லாயக்கில்லாததுபோல் உணரலாம். ஆனால், நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. நாம் மன்னிப்புக்காக யெகோவாவிடம் கெஞ்சினால், அவர் கண்டிப்பாக நம் ஜெபத்தைக் கேட்டு நம்மை மன்னிப்பார். (எபிரெயர் 9:13, 14) நம்முடைய பிரச்சினையோ பலவீனமோ எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி நாம் அவரிடம் மனம்விட்டுப் பேச வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (எபிரெயர் 4:14-16) அப்படிச் செய்தால், நாம் அவருக்கு முன் சுத்தமான மனசாட்சியோடு இருக்க முடியும்.

17. இயேசு நமக்காக உயிரைக் கொடுத்ததால் நமக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

17 முடிவில்லாத வாழ்வு. “பாவத்தின் சம்பளம் மரணம்; நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு.” (ரோமர் 6:23) இயேசு நமக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால், நமக்குப் பரிபூரண ஆரோக்கியமும் முடிவில்லாத வாழ்வும் கிடைக்கும். (வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆனால், அந்த ஆசீர்வாதங்களைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

மீட்புவிலைக்காக நன்றியோடு இருப்பீர்களா?

18. யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

18 யாராவது உங்களுக்கு ஒரு அருமையான பரிசைக் கொடுத்தால் நீங்கள் அதற்காக நன்றியோடு இருப்பீர்கள்தானே? அப்படியென்றால், மீட்புவிலை என்ற மிகச் சிறந்த பரிசைக் கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நாம் எந்தளவு நன்றியோடு இருக்க வேண்டும்! ‘கடவுள் தன்னுடைய ஒரே மகனைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்’ என்று யோவான் 3:16 சொல்கிறது. ஆம், யெகோவா நம்மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். அதனால்தான், அவருடைய அருமை மகன் இயேசுவை நமக்காகக் கொடுத்தார். இயேசுவும் நம்மேல் ரொம்ப அன்பு வைத்திருப்பதால், அவருடைய உயிரை நமக்காகக் கொடுக்கத் தயாராக இருந்தார். (யோவான் 15:13) யெகோவாவும் இயேசுவும் உங்கள்மேல் உண்மையிலேயே அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு மீட்புவிலை என்ற பரிசு தெளிவான அத்தாட்சியாக இருக்கிறது.—கலாத்தியர் 2:20.

நாம் யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளும்போது, அவர்மேல் நமக்கு இருக்கும் அன்பு அதிகமாகும், நாம் அவருடைய நண்பராகவும் ஆவோம்

19, 20. (அ) நீங்கள் யெகோவாவுடைய நண்பராவதற்கு என்ன செய்யலாம்? (ஆ) இயேசுவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைத்திருப்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?

19 கடவுள் எந்தளவுக்கு உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்று இப்போது தெரிந்துகொண்டீர்கள்; அப்படியென்றால், அவருடைய நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? முன்பின் தெரியாத ஒருவர்மேல் அன்பு காட்டுவது சுலபம் கிடையாது. நாம் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்று யோவான் 17:3 சொல்கிறது. நீங்கள் அதைச் செய்யும்போது யெகோவாவின் மேல் உங்களுக்கு அன்பு அதிகமாகும், அவருக்குப் பிரியமாக நடக்க விரும்புவீர்கள், அவருடைய நண்பராகவும் ஆவீர்கள். அதனால், பைபிளைப் படிப்பதன் மூலம் தொடர்ந்து யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.—1 யோவான் 5:3.

20 இயேசுவின் மீட்புப் பலியில் விசுவாசம் வையுங்கள். “மகன்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 3:36) நம்முடைய விசுவாசத்தை எப்படிக் காட்டலாம்? இயேசு சொன்னபடியெல்லாம் செய்வதன் மூலம் நம்முடைய விசுவாசத்தைக் காட்டலாம். (யோவான் 13:15) நாம் இயேசுமேல் விசுவாசம் வைத்திருக்கிறோம் என்று வாயளவில் சொன்னால் மட்டும் போதாது. மீட்புப் பலியில் விசுவாசம் வைத்திருப்பதை நம் செயலில் காட்டவும் வேண்டும். ஏனென்றால், ‘செயல்கள் இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது’ என்று யாக்கோபு 2:26 சொல்கிறது.

21, 22. (அ) ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் நாம் ஏன் கலந்துகொள்ள வேண்டும்? (ஆ) அடுத்த இரண்டு அதிகாரங்களில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

21 கிறிஸ்துவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். இயேசு, தன்னுடைய மரண நாளை நாம் அனுசரிக்க வேண்டுமென்று தான் இறப்பதற்கு முந்தின இரவு சொன்னார். இதை நாம் ஒவ்வொரு வருஷமும் செய்கிறோம். அவருடைய நினைவு நாளை, ‘எஜமானின் இரவு விருந்து’ என்று சொல்கிறோம். (1 கொரிந்தியர் 11:20; மத்தேயு 26:26-28) இயேசு நமக்காகத் தன் பரிபூரண உயிரை மீட்புவிலையாகக் கொடுத்திருப்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார். அதனால், “என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று சொன்னார். (லூக்கா 22:19-ஐ வாசியுங்கள்.) நீங்கள் இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, மீட்புவிலையை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறீர்கள் என்பதைக் காட்ட முடியும். யெகோவாவும் இயேசுவும் நம்மேல் வைத்திருக்கிற அளவில்லாத அன்புக்கு நன்றியோடு இருக்கிறீர்கள் என்பதையும் காட்ட முடியும்.—பின்குறிப்பு 16–ஐப் பாருங்கள்.

22 நமக்குக் கிடைத்திருக்கும் பரிசுகளிலேயே மீட்புவிலைதான் மிகச் சிறந்த பரிசு. (2 கொரிந்தியர் 9:14, 15) ஏற்கெனவே இறந்துபோன கோடிக்கணக்கான மக்களும் இந்த அருமையான பரிசிலிருந்து பயனடைவார்கள். அது எப்படி என்று அடுத்த இரண்டு அதிகாரங்களில் பார்க்கலாம்.