Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 8

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன

1. எந்த ஜெபத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்?

இயேசு சொல்லிக் கொடுத்த பரமண்டல ஜெபத்தைப் பற்றிக் கோடிக்கணக்கான ஆட்களுக்குத் தெரியும். எப்படி ஜெபம் செய்ய வேண்டுமென்று சீஷர்கள் தெரிந்துகொள்வதற்காக இயேசு அதைச் சொல்லிக் கொடுத்தார். என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யும்படி அவர் சொல்லிக் கொடுத்தார்? அந்த ஜெபம் இன்று நமக்கு ஏன் முக்கியம்?

2. முக்கியமான எந்த மூன்று விஷயங்களுக்காக ஜெபம் செய்யும்படி இயேசு சொல்லிக் கொடுத்தார்?

2 “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்” என்று ஜெபம் செய்யும்படி இயேசு சொல்லிக் கொடுத்தார். (மத்தேயு 6:9-13-ஐ வாசியுங்கள்.) இந்த மூன்று விஷயங்களுக்காக ஜெபம் செய்யும்படி இயேசு ஏன் சொல்லிக் கொடுத்தார்?—பின்குறிப்பு 20-ஐப் பாருங்கள்.

3. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் எதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்?

3 கடவுளுடைய பெயர் யெகோவா என்று நாம் ஏற்கெனவே கற்றுக்கொண்டோம். மனிதர்களையும் இந்தப் பூமியையும் அவர் ஏன் படைத்தார் என்றும் தெரிந்துகொண்டோம். ஆனால், “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன, அது என்ன செய்யும், அது கடவுளுடைய பெயரை எப்படிப் பரிசுத்தப்படுத்தும் என்றெல்லாம் நாம் பார்க்கலாம்.

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

4. கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? அதன் ராஜா யார்?

4 யெகோவா பரலோகத்தில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தி, இயேசுவை அதன் ராஜாவாக நியமித்தார். இந்த அரசாங்கத்தைத்தான் கடவுளுடைய அரசாங்கம் என்று பைபிள் சொல்கிறது. இயேசுவை “ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்” என்றும் பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:15) அப்படியென்றால், மனித ராஜாக்கள் எல்லாருடைய அதிகாரமும் பலமும் சேர்ந்தால்கூட இயேசுவின் அதிகாரத்துக்கும் பலத்துக்கும் ஈடாக முடியாது; நல்லது செய்வதில் எந்த மனித ஆட்சியாளரும் அவரை மிஞ்ச முடியாது.

5. கடவுளுடைய அரசாங்கம் எங்கிருந்து ஆட்சி செய்யும்? எதை ஆட்சி செய்யும்?

5 இயேசு உயிரோடு எழுப்பப்பட்டு நாற்பது நாட்கள் கழித்து பரலோகத்துக்குத் திரும்பிப் போனார். பிற்பாடு, யெகோவா அவரைத் தன்னுடைய அரசாங்கத்தின் ராஜாவாக நியமித்தார். (அப்போஸ்தலர் 2:33) கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து பூமியை ஆட்சி செய்யும். (வெளிப்படுத்துதல் 11:15) அதனால்தான் அதை ‘பரலோக அரசாங்கம்’ என்று பைபிள் சொல்கிறது.—2 தீமோத்தேயு 4:18.

6, 7. இயேசு எப்படி வேறெந்த மனித ராஜாவையும்விட சிறந்தவராக இருக்கிறார்?

6 இயேசு வேறெந்த மனித ராஜாவையும்விட சிறந்தவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் “ஒருவர்தான் சாவாமை உள்ளவர்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:16) மனித ஆட்சியாளர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சாவு வரலாம், ஆனால் இயேசுவுக்குச் சாவே வராது. அவர் நமக்காகச் செய்யும் எல்லா நன்மைகளும் என்றென்றும் நீடிக்கும்.

7 இயேசு நியாயமும் கரிசனையும் உள்ள ராஜாவாக இருப்பார். இதைப் பற்றி பைபிள் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்கிறது: “யெகோவாவின் சக்தி அவர்மேல் தங்கியிருக்கும். அது அவருக்கு ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும், அறிவுரை சொல்லும் ஆற்றலையும், வல்லமையையும், அறிவையும், யெகோவாவைப் பற்றிய பயத்தையும் கொடுக்கும். யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் அவர் சந்தோஷப்படுவார். கண்ணால் பார்ப்பதை வைத்து தீர்ப்பு சொல்ல மாட்டார். காதால் கேட்பதை வைத்து கண்டிக்க மாட்டார். பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.” (ஏசாயா 11:2-4) இப்படிப்பட்ட ஒருவர்தானே உங்களுடைய ராஜாவாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள்?

8. இயேசுவோடு சேர்ந்து மற்றவர்களும் ஆட்சி செய்வார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

8 பரலோக அரசாங்கத்தில் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்குக் கடவுள் சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதனால்தான், “நாம் கஷ்டங்களைச் சகித்துவந்தால், ராஜாக்களாக அவரோடு ஆட்சியும் செய்வோம்” என்று அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்குச் சொன்னார். (2 தீமோத்தேயு 2:12) எத்தனை பேர் இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்?

9. எத்தனை பேர் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள்? கடவுள் அவர்களை எப்போது தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்?

9 அதிகாரம் 7-ல் நாம் பார்த்தபடி, இயேசுவும் அவரோடு சேர்ந்து 1,44,000 பேரும் பரலோகத்தில் ராஜாக்களாக இருப்பதை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார். அந்த 1,44,000 பேர் யார்? அவர்களுடைய நெற்றிகளில் ‘இயேசுவுடைய பெயரும் அவருடைய தகப்பனின் பெயரும் எழுதப்பட்டிருந்தது’ என்று யோவான் விளக்குகிறார். அதோடு, அவர்கள் “ஆட்டுக்குட்டியானவர் [அதாவது, இயேசு] போகிற இடங்களுக்கெல்லாம் அவர் பின்னாலேயே போகிறவர்கள்; . . . மனிதகுலத்திலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்” என்றும் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 14:1, 4-ஐ வாசியுங்கள்.) ‘ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வதற்கு’ உண்மையுள்ள கிறிஸ்தவர்களாகிய இந்த 1,44,000 பேரைக் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் இறந்த பிறகு பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 5:10) உண்மையுள்ள கிறிஸ்தவர்களாகிய இந்த 1,44,000 பேரை அப்போஸ்தலர்களுடைய காலத்திலிருந்தே யெகோவா தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார்.

10. மனிதர்களை ஆட்சி செய்வதற்கு இயேசுவையும் 1,44,000 பேரையும் யெகோவா தேர்ந்தெடுத்திருப்பது எப்படி அவருடைய அன்பைக் காட்டுகிறது?

10 இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்ய யெகோவா மனிதர்களைத் தேர்ந்தெடுத்திருப்பது, நம்மேல் அவருக்கு எந்தளவு அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இயேசு தலைசிறந்த ராஜாவாக இருப்பார்; ஏனென்றால், அவர் நம்மைப் புரிந்துகொள்கிறார். மனிதனாக வாழ்வதும் கஷ்டங்களை அனுபவிப்பதும் எப்படியிருக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இயேசு ‘நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட முடிந்தவர்’ என்றும், அவர் “நம்மைப் போல் எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டவர்” என்றும் பவுல் சொன்னார். (எபிரெயர் 4:15; 5:8) 1,44,000 பேரும்கூட மனிதர்களாக வாழ்ந்து, பாவ இயல்போடும் வியாதியோடும் போராடியிருக்கிறார்கள். அதனால் இயேசுவும் சரி, 1,44,000 பேரும் சரி, நம்முடைய உணர்ச்சிகளை மட்டுமல்லாமல், நம்முடைய பிரச்சினைகளையும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

11. ஒரு காலகட்டத்தில், பரலோகத்தில் கடவுளுடைய விருப்பம் முழுமையாக நிறைவேறவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?

11 கடவுளுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டுமென்று ஜெபம் செய்யும்படி இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஒரு காலகட்டத்தில், பரலோகத்தில் கடவுளுடைய விருப்பம் முழுமையாக நிறைவேறவில்லை. ஏன்? அதிகாரம் 3-ல் நாம் பார்த்தபடி, பிசாசாகிய சாத்தான் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனான். அவனும் அவனோடு சேர்ந்துகொண்ட பேய்களும், அதாவது கெட்ட தேவதூதர்களும், கொஞ்சக் காலம் பரலோகத்தில் இருப்பதற்கு யெகோவா அனுமதித்தார். அதனால், அந்தச் சமயத்தில் பரலோகத்திலிருந்த எல்லாருமே கடவுளுடைய விருப்பத்தைச் செய்யவில்லை. சாத்தானையும் பேய்களையும் பற்றி அதிகாரம் 10-ல் நாம் அதிகமாகக் கற்றுக்கொள்வோம்.

12. வெளிப்படுத்துதல் 12:10-ல் விளக்கப்பட்டிருக்கும் இரண்டு முக்கியமான சம்பவங்கள் என்ன?

12 இயேசு கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவானதும் சாத்தானோடு போர் செய்வார் என்று பைபிள் சொன்னது. (வெளிப்படுத்துதல் 12:7-10-ஐ வாசியுங்கள்.) இரண்டு முக்கியமான சம்பவங்களைப் பற்றி வசனம் 10 விளக்குகிறது. இயேசு கிறிஸ்து கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிப்பதைப் பற்றியும், சாத்தான் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்படுவதைப் பற்றியும் அது சொல்கிறது. இவையெல்லாம் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டன. அதைப் பற்றி இனிமேல் படிப்போம்.

13. சாத்தான் தள்ளப்பட்ட பிறகு பரலோகத்தில் நிலைமை எப்படி இருக்கிறது?

13 சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட பிறகு உண்மையுள்ள தேவதூதர்கள் எந்தளவுக்குச் சந்தோஷப்பட்டிருப்பார்கள்! “பரலோகங்களே, அவற்றில் குடியிருக்கிறவர்களே, சந்தோஷப்படுங்கள்!” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:12) இப்போது பரலோகத்திலுள்ள எல்லாருமே கடவுளுடைய விருப்பத்தைச் செய்கிறார்கள். அதனால், அங்கே முழு சமாதானமும் ஒற்றுமையும் இருக்கிறது.

சாத்தானும் பேய்களும் பூமிக்குத் தள்ளப்பட்டதுமுதல் வேதனைகள் அதிகமாகிவிட்டன. ஆனால், அவை சீக்கிரத்தில் முடிவுக்கு வரும்

14. சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதால் பூமியில் நிலைமை எப்படி இருக்கிறது?

14 ஆனால், பூமியிலுள்ள நிலைமை படுமோசமாக இருக்கிறது. ‘பிசாசு தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு வந்திருக்கிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:12) சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதுமுதல் ரொம்பவே ஆவேசத்தோடு இருக்கிறான். சீக்கிரத்தில் தனக்கு அழிவு வருமென்று அவனுக்குத் தெரியும். அதனால், இந்த உலகத்தில் எல்லா விதமான பிரச்சினைகளையும் வேதனைகளையும் கஷ்டங்களையும் உண்டாக்கிக்கொண்டு வருகிறான்.

15. ஆரம்பத்திலிருந்தே கடவுளுடைய விருப்பம் என்ன?

15 ஆனால், இந்த உலகம் இப்படி இருக்க வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பம் கிடையாது. பரிபூரணமான மனிதர்கள் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே அவருடைய விருப்பம். (சங்கீதம் 37:29) இதை அவருடைய அரசாங்கம் எப்படி நிறைவேற்றும்?

16, 17. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி தானியேல் 2:44 என்ன சொல்கிறது?

16 தானியேல் 2:44-ல் உள்ள தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்கிறது: “அந்த ராஜாக்களின் காலத்தில், பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.” கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

17 முதலாவதாக, கடவுளுடைய அரசாங்கம் “அந்த ராஜாக்களின் காலத்தில்” ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. அப்படியென்றால், இந்தப் பூமியில் மற்ற அரசாங்கங்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் காலத்தில் கடவுளுடைய அரசாங்கம் அதன் ஆட்சியை ஆரம்பிக்கும். இரண்டாவதாக, கடவுளுடைய அரசாங்கம் மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. மூன்றாவதாக, கடவுளுடைய அரசாங்கத்துக்கும் மற்ற உலக அரசாங்கங்களுக்கும் போர் நடக்கும் என்று அது சொல்கிறது. அந்தப் போரில் கடவுளுடைய அரசாங்கம் வெற்றி பெறும். அதன் பிறகு, இந்தப் பூமி முழுவதையும் அது மட்டும்தான் ஆட்சி செய்யும். மனித சரித்திரத்திலேயே அதுதான் மிகச் சிறந்த அரசாங்கமாக இருக்கும்.

18. மனித அரசாங்கங்களுக்கும் கடவுளுடைய அரசாங்கத்துக்கும் நடக்கப்போகும் இறுதிப் போரின் பெயர் என்ன?

18 கடவுளுடைய அரசாங்கம் பூமியின்மேல் ஆட்சி செய்ய ஆரம்பிப்பதற்குமுன் என்ன நடக்கும்? “சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்காகப் பூமி முழுவதுமுள்ள ராஜாக்களைக் கூட்டிச்சேர்க்க” பேய்கள் புறப்பட்டுப் போகும். அந்த இறுதிப் போர் அர்மகெதோன் என்று அழைக்கப்படுகிறது. அர்மகெதோனில், மனித அரசாங்கங்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்கு எதிராகப் போர் செய்யும்.—வெளிப்படுத்துதல் 16:14, 16; பின்குறிப்பு 10-ஐப் பாருங்கள்.

19, 20. நமக்கு ஏன் கடவுளுடைய அரசாங்கம் தேவை?

19 நமக்கு ஏன் கடவுளுடைய அரசாங்கம் தேவை? குறைந்தது மூன்று காரணங்களுக்காக அது தேவை. முதலாவதாக, நாம் பாவிகளாக இருப்பதால் வியாதிப்பட்டு சாகிறோம். ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் நாம் என்றென்றும் வாழ்வோம் என்று பைபிள் சொல்கிறது. “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்” என்று யோவான் 3:16 சொல்கிறது.

20 இரண்டாவதாக, நம்மைச் சுற்றி கெட்ட ஆட்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் பொய் பேசுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள், ஒழுக்கக்கேடாக நடக்கிறார்கள். அவர்களை நம்மால் ஒழித்துக்கட்ட முடியாது, ஆனால் கடவுளால் முடியும். அக்கிரமம் செய்கிற எல்லாரையும் அவர் அர்மகெதோனில் அழிக்கப்போகிறார். (சங்கீதம் 37:10-ஐ வாசியுங்கள்.) மூன்றாவதாக, மனித அரசாங்கங்களால் உலகத்திலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடிவதில்லை, அவை கொடூரமாக நடக்கின்றன, ஊழல் செய்கின்றன. கடவுளுக்குக் கீழ்ப்படிய அவை மக்களுக்கு உதவி செய்வதில்லை. “மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 8:9.

21. கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியில் எப்படி அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும்?

21 அர்மகெதோன் போருக்குப் பின்பு கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியில் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும். உதாரணத்துக்கு, சாத்தானையும் அவனோடு சேர்ந்த பேய்களையும் நீக்கிவிடும். (வெளிப்படுத்துதல் 20:1-3) காலப்போக்கில், யாருமே வியாதிப்பட்டு சாக மாட்டார்கள். மீட்புப் பலி செலுத்தப்பட்டிருப்பதால், உண்மையுள்ள மனிதர்கள் எல்லாரும் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வார்கள். (வெளிப்படுத்துதல் 22:1-3) கடவுளுடைய அரசாங்கம் அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும். இதன் அர்த்தம் என்ன? கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது, எல்லா மனிதர்களும் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவார்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.—பின்குறிப்பு 21-ஐப் பாருங்கள்.

இயேசு எப்போது ராஜாவானார்?

22. இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது அல்லது பரலோகத்துக்குப் போனவுடனே ராஜாவாக நியமிக்கப்படவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?

22 “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்று கடவுளிடம் ஜெபம் செய்யும்படி இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதனால், கடவுளுடைய அரசாங்கம் இனிமேல்தான் இந்தப் பூமிக்கு வரும் என்பது தெளிவாக இருந்தது. அதற்குமுன் யெகோவா அந்த அரசாங்கத்தை ஏற்படுத்தி, இயேசுவை அதன் ராஜாவாக நியமிக்க வேண்டியிருந்தது. இயேசு பரலோகத்துக்குப் போனவுடனே ராஜாவாக நியமிக்கப்பட்டாரா? இல்லை, அவர் கொஞ்சக் காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. எப்படிச் சொல்லலாம்? இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குக் கொஞ்சக் காலம் கழித்து, பேதுருவும் பவுலும் சங்கீதம் 110:1-ஐ இயேசுவுக்குப் பொருத்திக் காட்டியதை வைத்து இப்படிச் சொல்லலாம். அந்தத் தீர்க்கதரிசனத்தில் யெகோவா, “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்று சொன்னார். (அப்போஸ்தலர் 2:32-35; எபிரெயர் 10:12, 13) ராஜாவாக நியமிக்கப்படுவதற்கு இயேசு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது?

கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியில் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றும்

23. (அ) இயேசு எப்போது கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

23 பைபிள் தீர்க்கதரிசனங்களின்படி 1914 ஒரு முக்கியமான வருஷமாக இருக்கும் என்பதைப் பல வருஷங்களுக்கு முன்பே உண்மைக் கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்கள் புரிந்துகொண்டது சரி என்பதை 1914-க்குப் பின் நடந்துவரும் உலக சம்பவங்கள் காட்டுகின்றன. அந்த வருஷத்தில்தான் இயேசு ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். (சங்கீதம் 110:2) சீக்கிரத்திலேயே, சாத்தான் இந்தப் பூமிக்குத் தள்ளப்பட்டான். இப்போது அவனுக்கு “கொஞ்சக் காலம்தான் இருக்கிறது.” (வெளிப்படுத்துதல் 12:12) அந்தக் காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்துவருகிறோம் என்பதற்குக் கூடுதலான அத்தாட்சிகளை அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம். ரொம்ப சீக்கிரத்தில் கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியில் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றும் என்பதையும் கற்றுக்கொள்வோம்.—பின்குறிப்பு 22-ஐப் பாருங்கள்.