Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 13

உயிர் என்ற பரிசுக்கு மதிப்புக் காட்டுங்கள்

உயிர் என்ற பரிசுக்கு மதிப்புக் காட்டுங்கள்

1. நமக்கு உயிர் கொடுத்தது யார்?

யெகோவா “உயிருள்ள கடவுள்.” (எரேமியா 10:10) அவர் நம் படைப்பாளர், நமக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ‘அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார், அவருடைய விருப்பத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன’ என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) நாம் வாழ வேண்டும் என்பதற்காக உயிர் என்ற அருமையான பரிசை அவர் கொடுத்திருக்கிறார்.சங்கீதம் 36:9-ஐ வாசியுங்கள்.

2. நாம் என்ன செய்தால் சந்தோஷமாக வாழ முடியும்?

2 நாம் தொடர்ந்து உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவு, தண்ணீர் போன்ற எல்லாவற்றையும் யெகோவா நமக்குக் கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 17:28) முக்கியமாக, நாம் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (அப்போஸ்தலர் 14:15-17) நாம் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால்தான் சந்தோஷமாக வாழ முடியும்.—ஏசாயா 48:17, 18.

உயிர் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டம்

3. ஆபேலைக் காயீன் கொன்றபோது யெகோவா என்ன செய்தார்?

3 நம்முடைய உயிரையும் மற்றவர்களுடைய உயிரையும் யெகோவா ரொம்ப மதிப்புள்ளதாகக் கருதுகிறார் என்று பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த காயீனின் விஷயத்தில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். அவன் தன்னுடைய தம்பி ஆபேலிடம் பயங்கரமாகக் கோபப்பட்டான். ஆனால், அவன் தன்னுடைய கோபத்தை அடக்க வேண்டுமென்று யெகோவா எச்சரித்தார். காயீன் அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. கோபத்தில் ‘தன் தம்பி ஆபேலைக் கொலையே செய்துவிட்டான்.’ (ஆதியாகமம் 4:3-8) அதற்காக யெகோவா காயீனுக்குத் தண்டனை கொடுத்தார். (ஆதியாகமம் 4:9-11) இந்தச் சம்பவத்திலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? கோபமும் வெறுப்பும் ரொம்ப ஆபத்தானவை. அவை நம்மை வெறித்தனமாக அல்லது கொடூரமாக நடக்க வைக்கும். அப்படி நடக்கிறவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது. (1 யோவான் 3:15-ஐ வாசியுங்கள்.) அதனால், எல்லா மக்களையும் நேசிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்; அப்போதுதான், யெகோவாவைப் பிரியப்படுத்த முடியும்.—1 யோவான் 3:11, 12.

4. இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த ஒரு கட்டளையிலிருந்து உயிரைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

4 ஆயிரக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு, யெகோவா மோசேயிடம் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தபோதும், உயிரை தான் எந்தளவுக்கு மதிக்கிறார் என்பதைக் காட்டினார். அவர் கொடுத்த கட்டளைகளில், “நீங்கள் கொலை செய்யக் கூடாது” என்ற கட்டளையும் இருந்தது. (உபாகமம் 5:17) ஒருவர் வேண்டுமென்றே யாரையாவது கொலை செய்தால், அவரும் கொல்லப்பட வேண்டியிருந்தது.

5. கருக்கலைப்பைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார்?

5 கருக்கலைப்பைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார்? தாயின் வயிற்றிலுள்ள குழந்தையின் உயிரைக்கூட யெகோவா உயர்வாக மதிக்கிறார். இஸ்ரவேலர்களுக்கு அவர் கொடுத்த திருச்சட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு கர்ப்பிணிக்கு அடிபட்டு அவளுடைய வயிற்றிலுள்ள குழந்தை இறந்துவிட்டால், அவளை அடித்தவன் கொல்லப்பட வேண்டுமென்று திருச்சட்டம் சொன்னது. (யாத்திராகமம் 21:22, 23-ஐ வாசியுங்கள்; சங்கீதம் 127:3) கருக்கலைப்பு செய்வது தவறு என்பதை இது காட்டுகிறது.—பின்குறிப்பு 28-ஐப் பாருங்கள்.

6, 7. உயிரை உயர்வாக மதிக்கிறோம் என்பதை யெகோவாவுக்கு நாம் எப்படிக் காட்டலாம்?

6 நம்முடைய உயிரையும் மற்றவர்களுடைய உயிரையும் உயர்வாக மதிக்கிறோம் என்பதை யெகோவாவுக்கு நாம் எப்படிக் காட்டலாம்? நம் உயிருக்கோ மற்றவர்களுடைய உயிருக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் எதையும் செய்யாமல் இருப்பதன் மூலம் அதைக் காட்டலாம். அப்படியென்றால், நம் உடலைக் கெடுத்து நம் உயிரையே பறித்துவிடும் புகையிலை, பாக்கு, போதைப்பொருள் போன்றவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது.

7 கடவுள்தான் நமக்கு உயிரையும் உடலையும் கொடுத்திருக்கிறார். அதனால், அவர் விரும்புகிற விதத்தில் அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். நம் உடலை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், கடவுளுடைய பார்வையில் நாம் அசுத்தமானவர்களாக இருப்போம். (ரோமர் 6:19; 12:1; 2 கொரிந்தியர் 7:1) உயிரை நாம் உயர்வாக மதிக்காவிட்டால், அதைக் கொடுத்த யெகோவாவை வணங்க முடியாது. கெட்ட பழக்கவழக்கங்களை விட்டுவிடுவது ரொம்பக் கஷ்டம்தான். ஆனால், உயிர்மேல் இருக்கிற மதிப்பினால் அதைச் செய்ய நாம் முயற்சி எடுக்கும்போது யெகோவா நமக்கு உதவுவார்.

8. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதபடி நாம் எப்படிக் கவனமாக இருக்க வேண்டும்?

8 உயிர் ஒரு அருமையான பரிசு என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். நம் உயிருக்கோ மற்றவர்களுடைய உயிருக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் எதையும் நாம் செய்ய மாட்டோம் என்ற நம்பிக்கை யெகோவாவுக்கு இருக்கிறது. கார், பைக், அல்லது மற்ற வாகனங்களை நாம் ஓட்டும்போது உயிர்மேல் இருக்கும் மதிப்பைக் காட்ட வேண்டும். ஆபத்தான அல்லது வன்முறையான விளையாட்டுகளைத் தவிர்க்க வேண்டும். (சங்கீதம் 11:5) அதோடு, நம்முடைய வீடு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். யெகோவா இஸ்ரவேலர்களிடம் இந்தக் கட்டளை கொடுத்தார்: “நீங்கள் புது வீடு கட்டினால், மொட்டைமாடிக்குக் கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டும். ஏனென்றால், மாடியிலிருந்து யாராவது கீழே விழுந்தால் உங்கள் வீட்டில் இருக்கிறவர்கள்மேல் கொலைப்பழி வரும்.”—உபாகமம் 22:8.

9. நாம் மிருகங்களை எப்படி நடத்த வேண்டும்?

9 நாம் மிருகங்களை நடத்தும் விதத்தைக்கூட யெகோவா முக்கியமாக நினைக்கிறார். உணவுக்காகவும் உடைக்காகவும் மிருகங்களைக் கொல்வதற்கு அவர் நம்மை அனுமதிக்கிறார். அதோடு, ஒரு மிருகத்தால் நம் உயிருக்கு ஆபத்து வரும்போது அதைக் கொல்வதற்கு அவர் அனுமதிக்கிறார். (ஆதியாகமம் 3:21; 9:3; யாத்திராகமம் 21:28) ஆனால், நாம் மிருகங்களைக் கொடூரமாக நடத்தக் கூடாது, அவற்றை விளையாட்டுக்காகக் கொல்லவும் கூடாது.—நீதிமொழிகள் 12:10.

உயிரின் பரிசுத்தத்தை மதியுங்கள்

10. இரத்தம் உயிரைக் குறிக்கிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?

10 இரத்தம் யெகோவாவுக்குப் பரிசுத்தமானது. ஏனென்றால், இரத்தம் உயிரைக் குறிக்கிறது. ஆபேலை காயீன் கொலை செய்த பிறகு யெகோவா காயீனிடம், “உன் தம்பியின் இரத்தம் என்னிடம் நீதி கேட்டு இந்த மண்ணிலிருந்து கதறுகிறது” என்று சொன்னார். (ஆதியாகமம் 4:10) ஆபேலின் இரத்தம் அவருடைய உயிரைக் குறித்தது. ஆபேலைக் கொலை செய்ததற்காக காயீனை யெகோவா தண்டித்தார். நோவாவின் நாளில் பெருவெள்ளம் வந்த பிறகும், இரத்தம் உயிரைக் குறிப்பதாக யெகோவா சுட்டிக்காட்டினார். மிருகங்களின் இறைச்சியைச் சாப்பிடுவதற்கு நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் யெகோவா அனுமதி கொடுத்தார். அவர்களிடம், “பூமியில் வாழும் எல்லா மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம். நான் உங்களுக்குச் செடிகொடிகளைத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்” என்று சொன்னார். அதேசமயத்தில், “இறைச்சியை நீங்கள் இரத்தத்தோடு சாப்பிடக் கூடாது” என்றும் சொன்னார். அப்படியென்றால், இரத்தத்தைச் சாப்பிடுவதற்கு மட்டும் அவர் அனுமதி கொடுக்கவில்லை.—ஆதியாகமம் 1:29; 9:3, 4.

11. இஸ்ரவேலர்களுக்கு இரத்தம் சம்பந்தமாகக் கடவுள் என்ன கட்டளை கொடுத்தார்?

11 இரத்தத்தைச் சாப்பிடக் கூடாதென்று நோவாவிடம் சொல்லி கிட்டத்தட்ட 800 வருஷங்களுக்குப் பிறகு, யெகோவா மறுபடியும் தன் மக்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: ‘உங்களில் ஒருவனோ உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் ஒருவனோ சாப்பிடுவதற்கு நான் அனுமதித்திருக்கும் ஒரு காட்டு மிருகத்தை அல்லது பறவையை வேட்டையாடிப் பிடித்தால், அதன் இரத்தத்தைக் கீழே ஊற்றி மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். . . . இரத்தத்தை நீங்கள் சாப்பிடக் கூடாது.’ (லேவியராகமம் 17:13, 14) அந்தக் காலப்பகுதியிலும், தன் மக்கள் இரத்தத்தைப் பரிசுத்தமானதாகக் கருத வேண்டுமென்று யெகோவா விரும்பினார். அவர்கள் இறைச்சியைச் சாப்பிட அவர் அனுமதித்தார், ஆனால் இரத்தத்தைச் சாப்பிட அனுமதிக்கவில்லை. உணவுக்காக ஒரு மிருகத்தைக் கொல்லும்போது, அதன் இரத்தத்தை அவர்கள் தரையில் ஊற்றிவிட வேண்டியிருந்தது.

12. கிறிஸ்தவர்கள் இரத்தத்தை எப்படிக் கருதுகிறார்கள்?

12 இயேசு இறந்து சில வருஷங்களுக்குப் பிறகு, எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுப்பதற்காக ஒன்றுகூடினார்கள். இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் எவை கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தின என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. (அப்போஸ்தலர் 15:28, 29-ஐ வாசியுங்கள்; 21:25) அதற்கு யெகோவா அவர்களுக்கு உதவி செய்தார். அந்தச் சமயத்திலும் அவர் இரத்தத்தை உயர்வாக மதித்தார் என்பதையும், அவர்கள் இரத்தத்தைப் பரிசுத்தமாகக் கருத வேண்டும் என்பதையும் அவர்களுக்குப் புரியவைத்தார். இரத்தத்தைச் சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ அன்றிருந்த கிறிஸ்தவர்களை யெகோவா அனுமதிக்கவில்லை. இரத்தம் சரியாக வடிக்கப்படாத இறைச்சியைச் சாப்பிடுவதற்கும் அவர் அனுமதிக்கவில்லை. அவர்கள் அப்படிச் செய்வது, சிலை வழிபாட்டுக்கு அல்லது பாலியல் முறைகேட்டுக்குச் சமமான பாவமாக இருந்தது. அதுமுதல், உண்மைக் கிறிஸ்தவர்கள் இரத்தத்தைச் சாப்பிடாமலும் குடிக்காமலும் இருந்திருக்கிறார்கள். நம் காலத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? நாமும் இரத்தத்தைப் பரிசுத்தமானதாகக் கருத வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்.

13. கிறிஸ்தவர்கள் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்வது இல்லை?

13 அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் இரத்தத்தை ஏற்றிக்கொள்ளவும் கூடாதா? ஆம், அதை ஏற்றிக்கொள்ளவும் கூடாது. இரத்தத்தைச் சாப்பிடவோ குடிக்கவோ கூடாதென்று யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார். நீங்கள் மதுபானம் குடிக்கக் கூடாதென்று ஒரு டாக்டர் சொன்னால், அதை ஊசி வழியாக உங்கள் உடலில் ஏற்றிக்கொள்வீர்களா? கண்டிப்பாக ஏற்றிக்கொள்ள மாட்டீர்கள்! அதேபோல், இரத்தத்தைச் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்று சொல்லும்போது, அதை ஏற்றிக்கொள்ளவும் கூடாது என்றுதான் அர்த்தம்.—பின்குறிப்பு 29-ஐப் பாருங்கள்.

14, 15. கிறிஸ்தவர்கள் உயிருக்கு மதிப்புக் கொடுப்பதும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதும் ஏன் முக்கியம்?

14 இரத்தம் ஏற்றிக்கொண்டால்தான் உயிர் பிழைப்போம் என்று டாக்டர் சொன்னால் என்ன செய்வது? இரத்தம் சம்பந்தமாகக் கடவுள் கொடுத்திருக்கும் கட்டளைக்குக் கீழ்ப்படிவதா வேண்டாமா என்ற தீர்மானத்தை அவரவர்தான் எடுக்க வேண்டும். கடவுள் கொடுத்திருக்கும் உயிர் என்ற பரிசைக் கிறிஸ்தவர்கள் உயர்வாக மதிக்கிறார்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இரத்தம் இல்லாத சிகிச்சை முறைகளை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள், ஆனால் இரத்தத்தை மட்டும் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள்.

15 உடல் ஆரோக்கியத்துக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்; ஆனால், உயிரைக் கடவுள் உயர்வாக மதிப்பதால் நாம் இரத்தத்தை ஏற்றிக்கொள்ள மாட்டோம். யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதுதான் முக்கியம்; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைத்து அவருடைய சட்டத்தை மீறக் கூடாது. “தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறவன் அதை இழந்துபோவான்; ஆனால், எனக்காகத் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 16:25) யெகோவாமேல் இருக்கும் அன்பினால் நாம் அவருக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம். நமக்கு எது சிறந்தது என்று அவருக்குத் தெரியும். அதனால், யெகோவாவைப் போலவே நாமும் உயிரை மதிப்பானதாகவும் பரிசுத்தமானதாகவும் கருதுகிறோம்.—எபிரெயர் 11:6.

16. கடவுளுடைய ஊழியர்கள் ஏன் அவருக்குக் கீழ்ப்படிகிறார்கள்?

16 இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். அவர்கள் இரத்தத்தைச் சாப்பிடவோ குடிக்கவோ மாட்டார்கள்; இரத்தத்தைப் பயன்படுத்துகிற எந்தச் சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். * இருந்தாலும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மற்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்வார்கள். தங்களுக்கு எது சிறந்தது என்பது உயிரையும் இரத்தத்தையும் படைத்தவருக்கு நன்றாகத் தெரியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். உங்களுக்கு எது சிறந்தது என்று அவருக்குத் தெரியும் என்பதை நீங்களும் நம்புகிறீர்களா?

இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கு யெகோவா அனுமதித்த ஒரே காரணம்

17. எந்தக் காரணத்துக்காக மட்டும் இரத்தத்தைப் பயன்படுத்த இஸ்ரவேலர்களை யெகோவா அனுமதித்தார்?

17 மோசே மூலம் கொடுத்த திருச்சட்டத்தில் யெகோவா இஸ்ரவேலர்களிடம், “உயிரினங்களின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. பாவப் பரிகாரம் செய்வதற்காக [அதாவது, மன்னிப்பு கேட்பதற்காக] மட்டும் நீங்கள் பலிபீடத்தில் இரத்தத்தைச் செலுத்தலாம் என்ற கட்டளையை நான் கொடுத்திருக்கிறேன். ஏனென்றால், இரத்தம்தான் பாவப் பரிகாரம் செய்கிறது” என்று சொன்னார். (லேவியராகமம் 17:11) இஸ்ரவேலர்கள் பாவம் செய்தபோது, மிருகத்தைப் பலி கொடுத்தார்கள்; அதன் இரத்தத்தைப் பலிபீடத்தில் செலுத்தும்படி ஆலயத்திலிருந்த குருவிடம் கேட்டார்கள்; இப்படிச் செய்வதன் மூலம், யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டார்கள். இந்த ஒரே காரணத்துக்காக மட்டும் இரத்தத்தைப் பயன்படுத்த இஸ்ரவேலர்களை யெகோவா அனுமதித்தார்.

18. இயேசு தன் உயிரைப் பலியாகக் கொடுத்ததால் நமக்கு என்ன வாய்ப்புக் கிடைத்திருக்கிறது?

18 இயேசு இந்தப் பூமிக்கு வந்தபோது, நம்முடைய பாவ மன்னிப்புக்காகத் தன்னுடைய உயிரை அல்லது இரத்தத்தைக் கொடுத்தார்; அதன் மூலம், மிருக பலிகள் சம்பந்தமான சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார். (மத்தேயு 20:28; எபிரெயர் 10:1) இயேசு கொடுத்த உயிர் மிகவும் மதிப்புள்ளதாக இருந்ததால், அதன் அடிப்படையில் யெகோவா என்றென்றும் வாழ்கிற வாய்ப்பை எல்லா மனிதர்களுக்கும் கொடுத்தார்.—யோவான் 3:16; எபிரெயர் 9:11, 12; 1 பேதுரு 1:18, 19.

உயிருக்கும் இரத்தத்துக்கும் நீங்கள் எப்படி மதிப்புக் காட்ட முடியும்?

19. நாம் என்ன செய்தால், “எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல” என்று சொல்ல முடியும்?

19 உயிர் என்ற அற்புதமான பரிசுக்காக நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிறோம். இயேசுமேல் விசுவாசம் வைக்கிறவர்களால் என்றென்றும் வாழ முடியும் என்று எல்லாருக்கும் சொல்ல விரும்புகிறோம். நாம் மக்களை நேசிப்பதால், எப்படி வாழ்வு பெறலாம் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க எல்லா முயற்சியும் எடுப்போம். (எசேக்கியேல் 3:17-21) அப்போது, பவுலைப் போலவே, “எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல . . . கடவுளுடைய நோக்கங்களில் ஒன்றைக்கூட மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று நம்மால் சொல்ல முடியும். (அப்போஸ்தலர் 20:26, 27) யெகோவாவைப் பற்றியும், அவர் உயிரை எந்தளவுக்கு மதிக்கிறார் என்பதைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்வதன் மூலம் நாம் உயிரையும் இரத்தத்தையும் உயர்வாய் மதிப்பதைக் காட்டுவோம்.

^ பாரா. 16 இரத்தம் ஏற்றுவது பற்றிய கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட, கடவுளுடைய அன்புக்கு பாத்திரராய் இருங்கள் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 87-89-ஐப் பாருங்கள்.