Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 14

உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க முடியும்

உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க முடியும்

1, 2. குடும்பங்கள் எப்படி இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்?

யெகோவா தேவன்தான் முதல் திருமணத்தை நடத்தி வைத்தார். அவர் முதன்முதலாக ஒரு பெண்ணைப் படைத்து, “அவளை மனிதனிடம் [அதாவது, ஆதாமிடம்] கொண்டுவந்தார்.” அப்போது, ஆதாம் ரொம்பவும் சந்தோஷப்பட்டு, “இவள் என்னுடைய எலும்பின் எலும்பு! என் சதையின் சதை!” என்று சொன்னான். (ஆதியாகமம் 2:22, 23) திருமணமானவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புவது இதிலிருந்து தெரிகிறது.

2 வருத்தமான விஷயம் என்னவென்றால், நிறைய பேர் குடும்பத்தில் சந்தோஷமாக இருந்ததே இல்லை. ஆனால், குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக பைபிளில் நிறைய நியமங்கள் இருக்கின்றன. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அவற்றின்படி நடந்தால் குடும்பத்தில் சந்தோஷம் களைகட்டும்.—லூக்கா 11:28.

கணவனிடம் யெகோவா எதிர்பார்க்கும் விஷயங்கள்

3, 4. (அ) ஒரு கணவன் தன் மனைவியை எப்படி நடத்த வேண்டும்? (ஆ) கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மன்னிப்பது ஏன் முக்கியம்?

3 ஒரு நல்ல கணவன் தன் மனைவியை அன்போடும் மரியாதையோடும் நடத்துவார் என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:25-29-ஐ வாசியுங்கள்.) கணவன் எப்போதுமே தன் மனைவியிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். புண்படுத்தும் விதத்தில் அவளிடம் பேசக் கூடாது, அவளை அடிக்கவும் கூடாது.

4 மனைவி ஏதாவது தவறு செய்யும்போது கணவன் என்ன செய்ய வேண்டும்? “உங்கள் மனைவிமேல் எப்போதும் அன்பு காட்டுங்கள், அவளிடம் கடுகடுப்பாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:19) கணவர்களே, நீங்களும் தவறு செய்கிறவர்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். கடவுள் உங்களை மன்னிக்க வேண்டுமென்றால், நீங்கள் உங்களுடைய மனைவியை மன்னிக்க வேண்டும். (மத்தேயு 6:12, 14, 15) கணவனும் சரி மனைவியும் சரி, ஒருவரை ஒருவர் மன்னிக்கத் தயாராக இருக்கும்போது அவர்களுடைய திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

5. ஒரு கணவன் தன் மனைவிக்கு ஏன் மதிப்புக் காட்ட வேண்டும்?

5 கணவன் தன் மனைவிக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். மனைவிக்குத் தேவையானதையெல்லாம் கணவன் கொடுக்க வேண்டும்; அதுமட்டுமல்ல, அவளிடம் மனந்திறந்து பேசவும், அவளுடைய உணர்ச்சிகளைப் புரிந்து நடக்கவும் வேண்டும். இது ரொம்பவும் முக்கியம். ஒரு கணவன் தன் மனைவியைச் சரியாக நடத்தாவிட்டால், அவருடைய ஜெபங்களை யெகோவா கேட்க மாட்டார். (1 பேதுரு 3:7) பெண்களைவிட ஆண்கள்தான் முக்கியம் என்று யெகோவா நினைப்பதில்லை; தன்மேல் அன்பு காட்டுகிற எல்லாரையுமே அவர் முக்கியமாக நினைக்கிறார்.

6. கணவனும் மனைவியும் “ஒரே உடலாக” இருப்பதன் அர்த்தம் என்ன?

6 கணவனும் மனைவியும் “இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 19:6) அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும்; ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யவே கூடாது. (நீதிமொழிகள் 5:15-21; எபிரெயர் 13:4) தாம்பத்திய விஷயத்தில், கணவனும் மனைவியும் சுயநலமில்லாமல் கரிசனையாக நடந்துகொள்ள வேண்டும். (1 கொரிந்தியர் 7:3-5) “ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான்” என்பதைக் கணவன் ஞாபகம் வைக்க வேண்டும். அவர் தன் மனைவியை நெஞ்சார நேசிக்க வேண்டும். கணவன் பாசமாகவும் பரிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் மனைவி முக்கியமாக எதிர்பார்ப்பாள்.—எபேசியர் 5:29.

மனைவியிடம் யெகோவா எதிர்பார்க்கும் விஷயங்கள்

7. குடும்பத்துக்கு ஏன் ஒரு குடும்பத் தலைவர் தேவை?

7 குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கு ஒரு குடும்பத் தலைவர் தேவை; குடும்பத்தில் உள்ளவர்கள் அவரவர் பொறுப்பை நல்லபடியாக செய்வதற்கு அவருடைய உதவி தேவை. “ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறான், கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 11:3.

8. மனைவி எப்படி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டலாம்?

8 கணவர்கள் எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான். ஆனால், மனைவி தன் கணவன் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு கொடுத்து, அவரோடு மனப்பூர்வமாக ஒத்துழைக்கும்போது, முழு குடும்பமும் பயனடைகிறது. (1 பேதுரு 3:1-6) “மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:33) மனைவியுடைய மத நம்பிக்கைகளைக் கணவன் ஏற்றுக்கொள்ளாதபோது மனைவி என்ன செய்ய வேண்டும்? அப்போதும் அவருக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும். “மனைவிகளே உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும், உங்கள் கற்புள்ள நடத்தையையும் நீங்கள் காட்டுகிற ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து அவர் விசுவாசியாக ஆகலாம்; நீங்கள் ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே உங்கள் நடத்தையால் அவர் விசுவாசியாக ஆகலாம்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:1, 2) மனைவியின் நல்ல நடத்தையைப் பார்க்கும்போது அவளுடைய கணவன் அவளுடைய மத நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ளவும் மதிக்கவும் ஆரம்பிப்பார்.

9. (அ) ஒரு விஷயத்தில் கணவன் சொல்வதையோ செய்வதையோ ஒத்துக்கொள்ள முடியாதபோது மனைவி என்ன செய்ய வேண்டும்? (ஆ) மனைவிகளுக்கு தீத்து 2:4, 5 சொல்லும் அறிவுரை என்ன?

9 ஒரு விஷயத்தில் கணவன் சொல்வதையோ செய்வதையோ ஒத்துக்கொள்ள முடியாதபோது மனைவி என்ன செய்ய வேண்டும்? அந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பதை மரியாதையான விதத்தில் அவரிடம் சொல்ல வேண்டும். சாராளின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவள் சொன்ன ஒரு விஷயம் ஆபிரகாமுக்குப் பிடிக்காதபோது யெகோவா ஆபிரகாமிடம், “அவளுடைய பேச்சைக் கேள்” என்று சொன்னார். (ஆதியாகமம் 21:9-12) கணவன் எடுக்கும் தீர்மானம் பைபிளுக்கு விரோதமாக இல்லாதவரை, மனைவி அதற்கு ஆதரவு காட்ட வேண்டும். (அப்போஸ்தலர் 5:29; எபேசியர் 5:24) ஒரு நல்ல மனைவி தன் குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்கொள்வாள். (தீத்து 2:4, 5-ஐ வாசியுங்கள்.) அவள் எவ்வளவு கடினமாக உழைக்கிறாள் என்பதை அவளுடைய கணவனும் பிள்ளைகளும் பார்க்கும்போது, அவளை இன்னும் அதிகமாக நேசிப்பார்கள், இன்னும் உயர்வாக மதிப்பார்கள்.—நீதிமொழிகள் 31:10, 28.

சாராள் எப்படி மனைவிகளுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறாள்?

10. பிரிந்துபோவதைப் பற்றியும் விவாகரத்து செய்வதைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது?

10 சிலசமயங்களில், கணவனும் மனைவியும் பிரிந்துபோகவோ விவாகரத்து செய்யவோ சட்டென்று முடிவு எடுத்துவிடுகிறார்கள். ஆனால், “மனைவி தன்னுடைய கணவனைவிட்டுப் பிரிந்துபோகக் கூடாது. . . . கணவனும் தன்னுடைய மனைவியைவிட்டுப் பிரிந்துபோகக் கூடாது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:10, 11) அதேசமயத்தில், கணவனும் மனைவியும் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காகப் பிரிந்துபோகலாம்; ஆனால், அது அவ்வளவு லேசான விஷயம் அல்ல. * விவாகரத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? கணவனோ மனைவியோ வேறு ஒருவரோடு பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டால் மட்டும்தான் விவாகரத்து செய்ய முடியும் என்று அது சொல்கிறது.—மத்தேயு 19:9.

பெற்றோர்களிடம் யெகோவா எதிர்பார்க்கும் விஷயங்கள்

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இயேசு நல்ல உதாரணமாக இருக்கிறார்

11. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஏன் ரொம்பவே தேவை?

11 பெற்றோர்களே, பிள்ளைகளோடு நிறைய நேரம் செலவிடுங்கள். வேறு எதையும்விட உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தான் தேவை. அதுவும், யெகோவாவைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க நீங்கள் அவர்களுக்கு ரொம்பவே தேவை.—உபாகமம் 6:4-9.

12. பிள்ளைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

12 சாத்தானுடைய உலகம் மோசமாகிக்கொண்டே போகிறது. சிலர் நம் பிள்ளைகளுக்குத் தீங்கு செய்ய நினைக்கலாம். அவர்களுக்குப் பாலியல் தொல்லைகூட கொடுக்கலாம். இந்த விஷயத்தைப் பற்றிப் பிள்ளைகளிடம் பேச சில பெற்றோர்கள் தயங்கலாம். ஆனால், அப்படிப்பட்ட ஆட்களைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்கும்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும். அந்த ஆட்களிடமிருந்து எப்படி ஒதுங்கியிருக்க வேண்டுமென்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை நீங்கள் கண்டிப்பாகப் பாதுகாக்க வேண்டும். *1 பேதுரு 5:8.

13. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டும்?

13 எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. நீங்கள் எப்படி உங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம்? உங்கள் பிள்ளைகளை நீங்கள் பயிற்றுவிக்க வேண்டும்; ஆனால், கடுமையாகவோ கொடூரமாகவோ கண்டிக்கக் கூடாது. (எரேமியா 30:11) அதனால், நீங்கள் கோபமாக இருக்கும்போது அவர்களைக் கண்டிக்காதீர்கள். “வாள் போலக் குத்தும்” வார்த்தைகளால் அவர்களுடைய மனதை நோகடிக்காதீர்கள். (நீதிமொழிகள் 12:18) அவர்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டுமென்று அவர்களுக்குப் புரிய வையுங்கள்.—எபேசியர் 6:4; எபிரெயர் 12:9-11; பின்குறிப்பு 30-ஐப் பாருங்கள்.

பிள்ளைகளிடம் யெகோவா எதிர்பார்க்கும் விஷயங்கள்

14, 15. பிள்ளைகள் ஏன் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

14 இயேசு எப்போதுமே தன் அப்பாவுக்குக் கீழ்ப்படிந்தார்; தனக்குக் கஷ்டமாக இருந்த சமயங்களிலும் அவருக்குக் கீழ்ப்படிந்தார். (லூக்கா 22:42; யோவான் 8:28, 29) அதேபோல், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்.—எபேசியர் 6:1-3.

15 பிள்ளைகளே, உங்களுக்குக் கஷ்டமாக இருந்தாலும் உங்கள் அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிந்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள், யெகோவாவும் சந்தோஷப்படுவார். *நீதிமொழிகள் 1:8; 6:20; 23:22-25.

தவறு செய்யும்படி ஆசை காட்டப்படும்போது, கடவுளுக்கு உண்மையாக இருக்க பிள்ளைகளுக்கு எது உதவும்?

16. (அ) கெட்ட காரியங்களைச் செய்ய பிள்ளைகளுக்கு சாத்தான் எப்படி ஆசை காட்டுகிறான்? (ஆ) யெகோவாவை நேசிக்கிற ஆட்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?

16 சாத்தான் உங்கள் நண்பர்களையோ மற்ற பிள்ளைகளையோ பயன்படுத்தி, ஏதோவொரு கெட்ட காரியத்தைச் செய்ய உங்களுக்கு ஆசை காட்டலாம். அவர்களிடமிருந்து வரும் சோதனையைச் சமாளிப்பது ரொம்பக் கஷ்டம் என்று சாத்தானுக்குத் தெரியும். யாக்கோபின் மகளான தீனாளுடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவை நேசிக்காதவர்கள் அவளுடைய நண்பர்களாக இருந்தார்கள். அதனால், அவளுக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன. (ஆதியாகமம் 34:1, 2) உங்கள் நண்பர்கள் யெகோவாவை நேசிக்காதவர்களாக இருந்தால், அவருக்குப் பிடிக்காத ஏதோவொன்றைச் செய்யும்படி அவர்கள் உங்களுக்கு ஆசை காட்டலாம். அவர்களுடைய பேச்சைக் கேட்டால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடவுளுக்கும் ரொம்ப வேதனையைக் கொண்டுவருவீர்கள். (நீதிமொழிகள் 17:21, 25) அதனால்தான், யெகோவாவை நேசிக்கிற ஆட்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பது ரொம்பவே முக்கியம்.—1 கொரிந்தியர் 15:33.

உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க முடியும்

17. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது?

17 குடும்பத்தில் உள்ளவர்கள் கடவுளுடைய அறிவுரைகளைக் கேட்டு நடக்கும்போது, பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அதனால் கணவர்களே, உங்கள் மனைவியை நேசியுங்கள். அவளை அன்பாக நடத்துங்கள். மனைவிகளே, உங்கள் கணவனுக்கு மரியாதை காட்டுங்கள். அவருக்கு அடங்கி நடங்கள். நீதிமொழிகள் 31:10-31-ல் சொல்லப்பட்ட மனைவியைப் போல நடந்துகொள்ளுங்கள். பெற்றோர்களே, கடவுளை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். (நீதிமொழிகள் 22:6) அப்பாக்களே, “சிறந்த விதத்தில்” உங்கள் குடும்பத்தை நடத்துங்கள். (1 தீமோத்தேயு 3:4, 5; 5:8) பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். (கொலோசெயர் 3:20) குடும்பத்தில் உள்ள எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால், மனத்தாழ்மையோடு ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பு கேளுங்கள். நாம் பார்த்தபடி, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் யெகோவா பைபிளில் அறிவுரைகளைத் தந்திருக்கிறார்.

^ பாரா. 10 கூடுதலான தகவலைத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட, கடவுளுடைய அன்புக்கு பாத்திரராய் இருங்கள் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 251-253-ஐப் பாருங்கள்.

^ பாரா. 12 பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிக் கூடுதலான தகவலைத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தில் அதிகாரம் 32-ஐப் பாருங்கள்.

^ பாரா. 15 கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமான ஏதோவொன்றைச் செய்யும்படி பெற்றோர்கள் சொல்லும்போது பிள்ளைகள் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியது இல்லை.—அப்போஸ்தலர் 5:29.