Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 16

கடவுள் விரும்புகிறபடி அவரை வணங்குங்கள்

கடவுள் விரும்புகிறபடி அவரை வணங்குங்கள்

1, 2. உங்களை நீங்களே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்? இது ஏன் முக்கியம்?

நீங்கள் பைபிளிலிருந்து தெரிந்துகொண்டபடி, கடவுளை வணங்குவதாகச் சொல்லும் நிறைய பேர் உண்மையில் கடவுள் வெறுக்கிற காரியங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள் அல்லது செய்கிறார்கள். (2 கொரிந்தியர் 6:17) அதனால்தான், ‘மகா பாபிலோனைவிட்டு,’ அதாவது பொய் மதங்களைவிட்டு, வெளியே வர வேண்டுமென்று யெகோவா நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 18:2, 4) நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நாம் எல்லாருமே ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். அதற்காக, நம்மை நாமே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கடவுள் விரும்புகிற விதத்தில் நான் அவரை வணங்க வேண்டுமா அல்லது இவ்வளவு காலமாக நான் எப்படி அவரை வணங்கினேனோ அப்படியே வணங்க வேண்டுமா?’

2 நீங்கள் ஏற்கெனவே பொய் மதத்தைவிட்டு வெளியே வந்திருந்தால், உங்களைப் பாராட்டுகிறோம். ஆனால், சில பொய் மத பழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் அடிமனதில் இன்னமும் நீங்கள் விரும்பலாம். அப்படிப்பட்ட சில பழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் பற்றி இப்போது கவனிக்கலாம். அவற்றை யெகோவா பார்க்கும் விதமாக நாமும் பார்ப்பது ஏன் ரொம்ப முக்கியம் என்றும் கவனிக்கலாம்.

உருவங்களையும் இறந்தவர்களையும் வணங்குவது

3. (அ) உருவங்களை வைத்து வணங்குவதை நிறுத்துவது சிலருக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்? (ஆ) கடவுளை வணங்குவதற்கு உருவங்களைப் பயன்படுத்துவது பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

3 சிலர் வருஷக்கணக்காகத் தங்களுடைய வீடுகளில் உருவங்களை வைத்து வணங்கியிருக்கிறார்கள். நீங்களும் ஒருவேளை அப்படிச் செய்திருந்தால், இப்போது உருவங்கள் இல்லாமல் கடவுளை வணங்குவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம், தவறாகக்கூடத் தெரியலாம். ஆனால், தன்னை எப்படி வணங்க வேண்டுமென்று யெகோவாவே நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். உருவங்களை வைத்து வணங்குவதை யெகோவா விரும்புவதில்லை என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது.யாத்திராகமம் 20:4, 5-ஐ வாசியுங்கள்; சங்கீதம் 115:4-8; ஏசாயா 42:8; 1 யோவான் 5:21.

4. (அ) நாம் ஏன் இறந்தவர்களை வணங்கக் கூடாது? (ஆ) இறந்தவர்களோடு பேச முயற்சி செய்யக் கூடாது என்று யெகோவா ஏன் தன்னுடைய மக்களிடம் சொன்னார்?

4 சிலர் நிறைய நேரமும் சக்தியும் பணமும் செலவழித்து, இறந்துபோனவர்களைப் பிரியப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்களை வணங்கவும் செய்கிறார்கள். ஆனால், நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இறந்தவர்களால் நமக்கு உதவி செய்யவோ கெடுதல் செய்யவோ முடியாது. அவர்கள் எங்கேயும் வாழ்ந்துகொண்டு இல்லை. உண்மையில், அவர்களோடு தொடர்புகொள்ள முயற்சி செய்வது ஆபத்தானது. ஏனென்றால், இறந்தவர்களிடமிருந்து கிடைத்திருப்பதாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மையில் கெட்ட தேவதூதர்களாகிய பேய்களிடமிருந்துதான் வருகின்றன. அதனால்தான், இறந்தவர்களோடு பேசவோ வேறு விதமான ஆவியுலகத் தொடர்பில் ஈடுபடவோ கூடாது என்று யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தார்.—உபாகமம் 18:10-12; பின்குறிப்பு 26-ஐயும் 31-ஐயும் பாருங்கள்.

5. உருவங்களையோ இறந்தவர்களையோ வணங்குவதை நிறுத்துவதற்கு எது உங்களுக்கு உதவும்?

5 உருவங்களையோ இறந்தவர்களையோ வணங்குவதை நிறுத்துவதற்கு எது உங்களுக்கு உதவும்? நீங்கள் பைபிளை வாசித்து, இவற்றைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். இவற்றை அவர் ‘அருவருப்பானதாக’ நினைக்கிறார். (உபாகமம் 27:15) யெகோவாவைப் போலவே நீங்களும் நினைப்பதற்கு உதவி கேட்டு தினமும் அவரிடம் ஜெபம் செய்யுங்கள். அதோடு, யெகோவா விரும்பும் விதத்தில் அவரை வணங்குவதற்கு உதவி கேட்டு ஜெபம் செய்யுங்கள். (ஏசாயா 55:9) அப்போது, பொய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் ஒழித்துக்கட்ட யெகோவா கண்டிப்பாக உங்களுக்குப் பலம் கொடுப்பார்.

நாம் கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டுமா?

6. டிசம்பர் 25-ஆம் தேதி ஏன் இயேசுவின் பிறந்த நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது?

6 உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப் பிரபலமான ஒரு பண்டிகைதான் கிறிஸ்மஸ். அது இயேசுவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கிறிஸ்மஸ் உண்மையில் பொய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ரோமர்கள் டிசம்பர் 25-ஆம் தேதியைச் சூரியனின் பிறந்த நாளாகக் கொண்டாடினார்கள் என்று ஒரு என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. மற்ற மதங்களைச் சேர்ந்த நிறைய பேர் கிறிஸ்தவர்களாக ஆக வேண்டுமென்று சர்ச் தலைவர்கள் விரும்பினார்கள். அதனால், இயேசு டிசம்பர் 25-ஆம் தேதி பிறக்காவிட்டாலும் அந்தத் தேதியில் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தார்கள். (லூக்கா 2:8-12) இயேசுவின் சீஷர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடவில்லை. இயேசு பிறந்து 200 வருஷங்களாக, “அவர் எந்தத் தேதியில் பிறந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை, அதைத் தெரிந்துகொள்வது முக்கியம் என்றுகூட யாரும் நினைக்கவில்லை” என்று ஆழமான காரியங்களின் புனித ஆரம்பங்கள் என்ற ஆங்கில புத்தகம் சொன்னது. இயேசு பிறந்து கிட்டத்தட்ட 300 வருஷங்களுக்குப் பிறகுதான் கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

7. உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை?

7 கிறிஸ்மஸ் பண்டிகையும், அதோடு சம்பந்தப்பட்ட பாரம்பரியங்களும், அதாவது பார்ட்டிகள் வைப்பது, பரிசுகள் கொடுப்பது போன்ற பாரம்பரியங்களும், மற்ற மதங்களிலிருந்து தோன்றியிருப்பது நிறைய பேருக்குத் தெரியும். அதனால்தான், ஒரு காலத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் கிறிஸ்மஸ் பண்டிகை தடை செய்யப்பட்டிருந்தது. அந்தத் தடையை மீறி அதைக் கொண்டாடியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால், காலப்போக்கில் மக்கள் மறுபடியும் அதைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை? ஏனென்றால், எல்லா விஷயங்களிலும் அவர்கள் கடவுளுக்குப் பிரியமாக நடக்க விரும்புகிறார்கள்.

பிறந்த நாட்களை நாம் கொண்டாட வேண்டுமா?

8, 9. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஏன் பிறந்த நாட்களைக் கொண்டாடவில்லை?

8 இன்னொரு பிரபலமான கொண்டாட்டம்தான் பிறந்த நாள் கொண்டாட்டம். கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாட வேண்டுமா? யெகோவாவை வணங்காதவர்கள்தான் பிறந்த நாளைக் கொண்டாடியதாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 40:20; மாற்கு 6:21) பொய்க் கடவுள்களைக் கௌரவிக்கும் விதத்தில் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட்டன. அதனால்தான் ஆரம்பகால கிறிஸ்தவர்கள், “பிறந்த நாள் கொண்டாட்டத்தை மற்ற மதங்களின் பழக்கமாக நினைத்தார்கள்.”—த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா.

9 ஒருவர் பிறக்கும்போது ஒரு ஆவி அவர் கூடவே இருக்கும் என்பதாகவும், அவரை வாழ்நாள் முழுவதும் அது பாதுகாக்கும் என்பதாகவும் பழங்கால ரோமர்களும் கிரேக்கர்களும் நம்பினார்கள். “அந்த ஆவிக்கும் அதே தேதியில் பிறந்த தெய்வத்துக்கும் ஏதோவொரு மர்மத் தொடர்பு இருந்ததாக நம்பப்பட்டது” என்று ஒரு புத்தகம் (லோர் ஆஃப் பர்த்டேஸ்) சொல்கிறது.

10. இன்று கிறிஸ்தவர்கள் ஏன் பிறந்த நாட்களைக் கொண்டாடக் கூடாது?

10 பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட கொண்டாட்டங்களை யெகோவா ஏற்றுக்கொள்கிறாரென நீங்கள் நினைக்கிறீர்களா? (ஏசாயா 65:11, 12) உண்மையில், யெகோவா அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால், பிறந்த நாட்களையோ பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு பண்டிகையையோ நாம் கொண்டாடக் கூடாது.

ஒரு பண்டிகை ஆரம்பமான விதம் அவ்வளவு முக்கியமா?

11. சிலர் ஏன் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்? ஆனால், நீங்கள் எதை முக்கியமாக நினைக்க வேண்டும்?

11 கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் மற்ற மதங்களிலிருந்து வந்திருப்பது சிலருக்குத் தெரியும். ஆனாலும் அவற்றைக் கொண்டாடுகிறார்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கு பண்டிகை நாட்கள் நல்ல வாய்ப்புத் தருவதாக அவர்கள் நினைக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிட விரும்புவது தவறல்ல. யெகோவாதான் குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார். குடும்பத்தாரோடு நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (எபேசியர் 3:14, 15) ஆனாலும், யெகோவாவுடன் நல்ல பந்தத்தை வைத்திருப்பதுதான் முக்கியம்; சொந்தபந்தங்களைப் பிரியப்படுத்துவதற்காகப் பொய் மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவது சரியாக இருக்காது. அதனால்தான், “நம் எஜமானுக்கு எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பவுல் சொன்னார்.—எபேசியர் 5:10.

12. எந்தப் பண்டிகைகளை யெகோவா ஏற்றுக்கொள்ள மாட்டார்?

12 ஒரு பண்டிகை எப்படி ஆரம்பமானது என்பது முக்கியமல்ல என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், யெகோவா அப்படி நினைப்பதில்லை. பொய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட பண்டிகைகளையும், மனிதர்களை அல்லது தேசியச் சின்னங்களைக் கௌரவிக்கும் பண்டிகைகளையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை. உதாரணத்துக்கு, எகிப்தியர்கள் தங்களுடைய பொய் தெய்வங்களுக்காக நிறைய பண்டிகைகளைக் கொண்டாடினார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி வந்த பிறகு, எகிப்தியர்கள் கொண்டாடியதைப் போலவே ஒரு பண்டிகையைக் கொண்டாடினார்கள்; ஆனால் அந்தப் பண்டிகையை, ‘யெகோவாவுக்குக் கொண்டாடுவதாக’ சொன்னார்கள். அதற்காக யெகோவா அவர்களைத் தண்டித்தார். (யாத்திராகமம் 32:2-10) ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது போலவே, நாம் ‘அசுத்தமான எதையும் தொட’ கூடாது!ஏசாயா 52:11-ஐ வாசியுங்கள்.

மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்

13. பண்டிகைகள் கொண்டாடுவதை நிறுத்திவிட நீங்கள் முடிவு செய்யும்போது உங்கள் மனதில் என்ன கேள்விகள் வரலாம்?

13 பண்டிகைகள் கொண்டாடுவதை நிறுத்திவிட நீங்கள் முடிவு செய்யும்போது உங்கள் மனதில் இதுபோல் நிறைய கேள்விகள் வரலாம்: நான் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை என்று என்னோடு வேலை செய்கிறவர்கள் கேட்டால் என்ன சொல்வது? யாராவது எனக்கு கிறிஸ்மஸ் பரிசு கொடுத்தால் என்ன செய்வது? நான் ஒரு பண்டிகையைக் கொண்டாட வேண்டுமென்று என் கணவன்/மனைவி எதிர்பார்த்தால் என்ன செய்வது? பண்டிகையை அல்லது பிறந்த நாளைக் கொண்டாட முடியவில்லையே என்று என் பிள்ளைகள் ஏங்காமல் இருக்க நான் என்ன செய்வது?

14, 15. பண்டிகையின்போது யாராவது உங்களுக்கு வாழ்த்து சொன்னால் அல்லது பரிசு கொடுத்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

14 ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் விவேகமாகப் பேசுவதும் நடந்துகொள்வதும் முக்கியம். உதாரணத்துக்கு, பண்டிகை நாளில் யாராவது உங்களுக்கு வாழ்த்து சொல்லும்போது நீங்கள் அதை அசட்டை செய்வதற்குப் பதிலாக, “நன்றி” என்று சொல்லலாம். ஆனால், நீங்கள் ஏன் ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்று யாராவது தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் அதை விளக்கிச் சொல்லலாம். ஒருவேளை அவரிடம், “மற்றவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக இருக்கவும் பரிசுகள் கொடுக்கவும் எனக்குக்கூட பிடிக்கும்; ஆனால், பண்டிகை நாட்களில் மட்டும் நான் அப்படிச் செய்வதில்லை” என்று சொல்லலாம். எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் அன்பாகவும் சாதுரியமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ளுங்கள். “உங்கள் பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பீர்கள்” என்று பைபிள் சொல்கிறது.—கொலோசெயர் 4:6.

15 யாராவது உங்களுக்கு ஒரு பரிசு கொடுத்தால் என்ன செய்வது? ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் பைபிள் சொல்வதில்லை. ஆனால், நாம் என்ன செய்தாலும் நல்ல மனசாட்சியைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று அது சொல்கிறது. (1 தீமோத்தேயு 1:18, 19) உங்களுக்குப் பரிசைக் கொடுக்கும் நபருக்கு, நீங்கள் அந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்பது தெரியாமல் இருக்கலாம். அல்லது அவர் உங்களிடம், “நீங்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனாலும் உங்களுக்கு இதைக் கொடுக்க ஆசைப்படுகிறேன்” என்று சொல்லலாம். எப்படியிருந்தாலும் சரி, அந்தப் பரிசை வாங்கிக்கொள்வதா வேண்டாமா என்று நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் சரி, நல்ல மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள். யெகோவாவோடு உள்ள பந்தத்துக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்களும் உங்கள் குடும்பமும்

யெகோவாவை வணங்குகிறவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்

16. உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் பண்டிகைகளைக் கொண்டாட விரும்பினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

16 உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஒரு பண்டிகையைக் கொண்டாட விரும்பினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களோடு சண்டை போடாதீர்கள். சொந்தமாக முடிவு எடுக்கும் உரிமை அவர்களுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவை அவர்கள் மதிக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்ப்பீர்களோ அப்படியே அவர்கள் எடுக்கும் முடிவை நீங்களும் மதியுங்கள். அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள். (மத்தேயு 7:12-ஐ வாசியுங்கள்.) ஆனால், பண்டிகை நாளில் நீங்கள் அவர்களோடு நேரம் செலவிட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முதலில், சரியான முடிவு எடுக்க உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அந்தச் சூழ்நிலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள், அது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் எப்போதுமே யெகோவாவுக்குப் பிரியமாக நடக்க விரும்புகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

17. மற்றவர்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் பார்த்து உங்கள் பிள்ளைகள் ஏங்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

17 மற்றவர்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் பார்த்து உங்கள் பிள்ளைகள் ஏங்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? அவ்வப்போது, அவர்களுக்கென்று விசேஷமாக ஏதாவது ஏற்பாடு செய்யலாம். பரிசுகளைக் கொடுத்தும் அவர்களை ஆச்சரியப்படுத்தலாம். நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு உங்கள் நேரமும் அன்பும்தான்.

கடவுள் விரும்புகிறபடி அவரை வணங்குங்கள்

18. நாம் ஏன் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்?

18 யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு, பொய் மதத்தையும் அதோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களையும் பண்டிகைகளையும் நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும். அதேசமயத்தில், கடவுள் விரும்புகிறபடி அவரை வணங்க வேண்டும். எப்படி? அதற்கு ஒரு வழி, கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதாகும். (எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.) கூட்டங்கள் உண்மை வணக்கத்தின் மிக முக்கியமான அம்சம். (சங்கீதம் 22:22; 122:1) நாம் ஒன்றாகக் கூடிவரும்போது ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த முடியும்.—ரோமர் 1:12.

19. பைபிளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட உண்மைகளை ஏன் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்?

19 கடவுள் விரும்புகிறபடி அவரை வணங்குவதற்கான இன்னொரு வழி, பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வதாகும். உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து நிறைய பேர் வேதனைப்படுகிறார்கள். அப்படி வேதனைப்படுகிற சிலரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். கடவுள் கொண்டுவரப்போகும் அருமையான எதிர்காலத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும், பைபிளிலுள்ள உண்மைகளை மற்றவர்களிடம் சொல்லும்போதும், பொய் மதத்தின் பாகமாக இருக்கவோ அதன் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ உங்களுக்குள் இருக்கும் ஆசை அடியோடு மறைந்துவிடும். சரியான வழியில் யெகோவாவை வணங்க நீங்கள் முடிவு எடுக்கும்போது நிச்சயம் சந்தோஷமாக இருப்பீர்கள். அதோடு, உங்கள் முயற்சியை யெகோவா மிக அதிகமாக ஆசீர்வதிப்பார்.—மல்கியா 3:10.