Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 19

எப்போதுமே யெகோவாவிடம் நெருங்கியிருங்கள்

எப்போதுமே யெகோவாவிடம் நெருங்கியிருங்கள்

1, 2. இன்று நமக்கு எங்கே பாதுகாப்பு கிடைக்கும்?

இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: நீங்கள் வெளியே நடந்துபோகிறீர்கள். திடீரென பலமான காற்று அடிக்கிறது. வானம் இருண்டுபோகிறது, மின்னல் மின்னுகிறது, இடி இடிக்கிறது. கடைசியில், மழை கொட்ட ஆரம்பிக்கிறது. ஒதுங்கிக்கொள்வதற்கு நீங்கள் இடம் தேடுகிறீர்கள். பாதுகாப்பான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும்போது உங்களுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!

2 நாம் இன்று அதேபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் இருக்கிறோம். உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போகின்றன. ‘எங்கே பாதுகாப்பு கிடைக்கும்?’ என்று நீங்கள் யோசிக்கலாம். பைபிளிலுள்ள ஒரு சங்கீதத்தை எழுதியவர் இப்படிச் சொன்னார்: “நான் யெகோவாவிடம், ‘நீங்கள் என் அடைக்கலம், என் கோட்டை, நான் நம்பியிருக்கிற கடவுள்’ என்று சொல்வேன்.” (சங்கீதம் 91:2) இன்று நம் பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவா உதவுவார். நமக்கு அருமையான எதிர்காலத்தையும் தருவார்.

3. யெகோவா நம் அடைக்கலமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

3 யெகோவா நம்மை எப்படிப் பாதுகாப்பார்? எப்படிப்பட்ட பிரச்சினையையும் சமாளிக்க அவர் நமக்கு உதவுவார். நமக்குக் கெடுதல் செய்ய நினைக்கிற எவரையும்விட அவர் அதிக சக்தியுள்ளவர். இப்போது நமக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்கூட, எதிர்காலத்தில் யெகோவா அதைச் சரிசெய்துவிடுவார் என்று நாம் உறுதியாக நம்பலாம். “எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யூதா 21) ஆனால், கஷ்ட காலங்களில் யெகோவாவின் உதவியைப் பெறுவதற்கு நாம் அவரிடம் எப்போதுமே நெருங்கியிருக்க வேண்டும். எப்படி?

கடவுளுடைய அன்புக்கு நன்றி காட்டுங்கள்

4, 5. யெகோவா எப்படி நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார்?

4 எப்போதுமே யெகோவாவிடம் நெருங்கியிருப்பதற்கு, அவர் நம்மேல் எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்காக யெகோவா செய்திருக்கிற எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்க வேண்டும். விதவிதமான செடிகொடிகளும் மிருகங்களும் உள்ள அழகான பூமியை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். சாப்பிடுவதற்கு ருசியான உணவுகளையும் குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீரையும்கூட அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய பெயரையும் அருமையான குணங்களையும் பற்றி பைபிளில் நமக்குச் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய பாச மகன் இயேசுவை மீட்புவிலையாக இந்தப் பூமிக்கு அனுப்புவதன் மூலம் நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார். (யோவான் 3:16) இப்படி, அவர் மீட்புவிலைக்கு ஏற்பாடு செய்ததால் நமக்கு அருமையான எதிர்காலம் கிடைக்கப்போகிறது.

5 யெகோவா பரலோகத்தில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்; மேசியாவை ராஜாவாகக் கொண்ட அந்த அரசாங்கம் நம்முடைய எல்லா வேதனைகளுக்கும் சீக்கிரத்தில் ஒரு முடிவுகட்டும். அது இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றும். அதன்பின் எல்லாருமே சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் என்றென்றுமாக வாழ்வோம். (சங்கீதம் 37:29) இன்னொரு விதத்திலும் யெகோவா நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார். அதாவது, இப்போதே சிறந்த விதத்தில் எப்படி வாழலாம் என்று சொல்லித் தந்திருக்கிறார். அதோடு, தன்னிடம் ஜெபம் செய்யும்படி அவர் நம்மை அழைக்கிறார். நம் ஜெபங்களைக் கேட்க அவர் எப்போதுமே தயாராக இருக்கிறார். நம் ஒவ்வொருவர் மீதும் யெகோவா அன்பு காட்டியிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

6. யெகோவா உங்கள்மேல் அன்பு காட்டியதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

6 யெகோவா உங்கள்மேல் அன்பு காட்டியதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவர் உங்களுக்காகச் செய்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருக்க வேண்டும். இன்று நிறைய பேர் நன்றி காட்டுவதில்லை. இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்திலும் அப்படிப்பட்ட நிலைமைதான் இருந்தது. ஒரு சமயத்தில், இயேசு பத்துத் தொழுநோயாளிகளைக் குணப்படுத்தினார். ஆனால், அவர்களில் ஒருவர்தான் அவருக்கு நன்றி சொன்னார். (லூக்கா 17:12-17) நாமும் அந்த நபரைப் போலத்தான் இருக்க விரும்புகிறோம். எப்போதும் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கவே ஆசைப்படுகிறோம்.

7. நாம் யெகோவாமேல் எந்தளவுக்கு அன்பு காட்ட வேண்டும்?

7 யெகோவாமேல் நாம் அன்பு காட்டவும் வேண்டும். யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டுமென்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 22:37-ஐ வாசியுங்கள்.) இதன் அர்த்தம் என்ன?

8, 9. நமக்கு யெகோவாமேல் அன்பு இருக்கிறது என்று எப்படிக் காட்டலாம்?

8 நமக்கு யெகோவாமேல் அன்பு இருக்கிறது என்று சொன்னால் மட்டும் போதுமா? போதாது. நாம் அவரை முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் நேசிப்பதை நம் செயலிலும் காட்ட வேண்டும். (மத்தேயு 7:16-20) நமக்குக் கடவுள்மேல் அன்பு இருந்தால் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. அதைச் செய்வது கஷ்டமா? இல்லை. ஏனென்றால், “அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.”1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.

9 நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது, சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்வோம். (ஏசாயா 48:17, 18) ஆனால், எப்போதுமே யெகோவாவிடம் நெருங்கியிருக்க எது நமக்கு உதவும்? அதைப் பற்றிப் பார்க்கலாம்.

தொடர்ந்து யெகோவாவிடம் நெருங்கிவாருங்கள்

10. நீங்கள் ஏன் யெகோவாவைப் பற்றித் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்?

10 நீங்கள் எப்படி யெகோவாவின் நண்பரானீர்கள்? நீங்கள் பைபிளைப் படித்து, யெகோவாவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்டு, அவரோடு நட்பை வளர்த்துக்கொண்டீர்கள். அந்த நட்பு, என்றுமே அணையாத நெருப்புபோல் இருக்க வேண்டும். நெருப்பு அணையாமல் இருப்பதற்கு எரிபொருள் அவசியம்; அதேபோல், யெகோவாவோடு இருக்கும் நட்பு எப்போதும் பலமாக இருப்பதற்கு நீங்கள் அவரைப் பற்றித் தொடர்ந்து கற்றுக்கொள்வது அவசியம்.—நீதிமொழிகள் 2:1-5.

நெருப்பு அணையாமல் இருக்க எரிபொருள் அவசியம்; அதேபோல், யெகோவாமேல் உங்களுக்கு இருக்கும் அன்பு தணியாமல் இருக்க எது அவசியம்?

11. பைபிளிலுள்ள விஷயங்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளும்போது நீங்கள் எப்படி உணருவீர்கள்?

11 நீங்கள் தொடர்ந்து பைபிளைப் படிக்கும்போது, உங்கள் மனதைத் தொடும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றி இயேசு விளக்கியபோது அவருடைய சீஷர்களில் இரண்டு பேர் எப்படி உணர்ந்தார்கள் என்று கவனியுங்கள். “வழியில் அவர் நம்மோடு பேசி, வேதவசனங்களை முழுமையாக விளக்கிக் காட்டியபோது, நம் இதயம் கொழுந்துவிட்டு எரிந்தது, இல்லையா?” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.—லூக்கா 24:32.

12, 13. (அ) கடவுள்மேல் நாம் வைத்திருக்கும் அன்பு என்ன ஆகலாம்? (ஆ) யெகோவாமேல் இருக்கும் அன்பு தணியாதபடி நாம் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?

12 வேதவசனங்களைப் புரிந்துகொண்டபோது சீஷர்கள் மனம் நெகிழ்ந்துபோனார்கள். நீங்களும் பைபிளைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது அப்படித்தான் உணர்ந்திருப்பீர்கள். அதனால், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவர்மேல் அன்பு காட்டவும் தூண்டப்பட்டிருப்பீர்கள். அந்த அன்பு தணிந்துபோகாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.—மத்தேயு 24:12.

13 நீங்கள் கடவுளுடைய நண்பராக ஆன பிறகு, அவரோடு உள்ள நட்பைப் பலமாக வைத்துக்கொள்ள எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும். அவரைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். பிறகு, அவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். (யோவான் 17:3) நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, ‘யெகோவாவைப் பற்றி இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறேன்? நான் ஏன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவர்மேல் அன்பு காட்ட வேண்டும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.—1 தீமோத்தேயு 4:15.

14. யெகோவாமேல் இருக்கும் அன்பு தணியாதபடி பார்த்துக்கொள்ள ஜெபம் எப்படி உதவும்?

14 உங்களுக்கு ஒரு நல்ல நண்பர் இருந்தால் அவரிடம் அடிக்கடி பேசுவீர்கள். அது உங்கள் நட்பைப் பலமாக வைத்துக்கொள்ள உதவும். அதேபோல், நாம் யெகோவாவிடம் அடிக்கடி பேசும்போது, அவர்மேல் இருக்கும் நம் அன்பு பலமாக இருக்கும். (1 தெசலோனிக்கேயர் 5:17-ஐ வாசியுங்கள்.) ஜெபம் என்பது நம் பரலோகத் தகப்பன் நமக்குக் கொடுத்திருக்கும் அருமையான பரிசு. நாம் எப்போதுமே நம் இதயத்திலிருந்து அவரிடம் பேச வேண்டும். (சங்கீதம் 62:8) நாம் ஜெபம் செய்யும்போது வார்த்தைகளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கக் கூடாது, மனதிலிருந்து பேச வேண்டும். ஆகவே, யெகோவாமேல் இருக்கும் அன்பு தணியாதபடி பார்த்துக்கொள்ள, நாம் தொடர்ந்து பைபிள் படிக்க வேண்டும், இதயத்திலிருந்து ஜெபம் செய்ய வேண்டும்.

யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள்

15, 16. பிரசங்க வேலையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

15 நாம் எப்போதுமே யெகோவாவிடம் நெருங்கியிருப்பதற்கு, பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசவும் வேண்டும். யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பெரிய பாக்கியம்! (லூக்கா 1:75) அது, உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் இயேசு கொடுத்திருக்கிற பொறுப்பும்கூட. நாம் ஒவ்வொருவருமே கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே அதைச் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா?—மத்தேயு 24:14; 28:19, 20.

16 பிரசங்க வேலையை அப்போஸ்தலன் பவுல் மிகவும் மதிப்புள்ளதாக நினைத்தார்; அதனால், அது ஒரு ‘பொக்கிஷம்’ என்று சொன்னார். (2 கொரிந்தியர் 4:7) யெகோவாவையும் அவருடைய நோக்கத்தையும் பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை. யெகோவாவுக்குச் சேவை செய்ய அது ஒரு வழி. நீங்கள் அவருக்காகச் செய்யும் எல்லாவற்றையும் அவர் மதிக்கிறார். (எபிரெயர் 6:10) பிரசங்க வேலை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும். ஏனென்றால், யெகோவாவிடம் நெருங்கிவரவும் முடிவில்லாத வாழ்வை அனுபவிக்கவும் அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவும். (1 கொரிந்தியர் 15:58-ஐ வாசியுங்கள்.) இதைவிட திருப்தியான வேலை வேறு ஏதாவது இருக்க முடியுமா?

17. பிரசங்க வேலையைச் செய்வது ஏன் மிகவும் அவசரம்?

17 பிரசங்க வேலையைச் செய்வது மிகவும் அவசரம். நாம் ‘கடவுளுடைய வார்த்தையை . . . அவசர உணர்வோடு பிரசங்கிக்க’ வேண்டும். (2 தீமோத்தேயு 4:2) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது! அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது!” முடிவு “கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” (செப்பனியா 1:14; ஆபகூக் 2:3) சீக்கிரத்தில், சாத்தானுடைய பொல்லாத உலகத்தை யெகோவா அழிக்கப்போகிறார். அதற்கு முன்பு, நாம் மக்களை எச்சரிக்க வேண்டும். அப்போதுதான், யெகோவாவை வணங்க அவர்களால் முடிவு எடுக்க முடியும்.

18. நாம் ஏன் உண்மைக் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்க வேண்டும்?

18 உண்மைக் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து நாம் யெகோவாவை வணங்க வேண்டும், இதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; சிலர் வழக்கமாகச் சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவதுபோல் நாமும் இருந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒன்றுகூடிவந்து ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்; நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 10:24, 25) எல்லா கூட்டங்களுக்கும் போக நாம் முழு முயற்சி எடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் கூட்டங்கள் நமக்கு வாய்ப்புத் தருகின்றன.

19. கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை நேசிக்க எது நமக்கு உதவும்?

19 நீங்கள் கூட்டங்களுக்குப் போகும்போது உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். யெகோவாவை வணங்க அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களைப் போலவே யெகோவாவை வணங்க முழு முயற்சி எடுக்கிற நிறைய சகோதர சகோதரிகளை நீங்கள் அங்கே சந்திப்பீர்கள். உங்களைப் போலவே அவர்களும் தவறு செய்யும் இயல்புள்ளவர்கள்தான். அப்படி அவர்கள் தவறு செய்யும்போது அவர்களை நீங்கள் மனதார மன்னிக்க வேண்டும். (கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.) உங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடைய நல்ல குணங்களை மட்டுமே பாருங்கள். அவர்களை நேசிக்கவும் யெகோவாவிடம் அதிகமதிகமாக நெருங்கிவரவும் அது உங்களுக்கு உதவும்.

உண்மையான வாழ்வு

20, 21. ‘உண்மையான வாழ்வு’ என்றால் என்ன?

20 யெகோவா தன்னுடைய நண்பர்கள் எல்லாரும் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்று விரும்புகிறார். எதிர்காலத்தில் நமக்குக் கிடைக்கப்போகும் வாழ்க்கை, இப்போது நாம் வாழும் வாழ்க்கையிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்று பைபிள் சொல்கிறது.

நீங்கள் ‘உண்மையான வாழ்வை’ பெற வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். நீங்கள் அதைப் பெறுவீர்களா?

21 எதிர்காலத்தில் நாம் 70, 80 வருஷங்களுக்கு மட்டுமல்ல, என்றென்றும் வாழப்போகிறோம். அதுவும், பரிபூரணமான ஆரோக்கியத்தோடும் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் அழகான பூஞ்சோலையில் “முடிவில்லாத வாழ்வை” அனுபவிக்கப்போகிறோம். அதைத்தான் பைபிள் ‘உண்மையான வாழ்வு’ என்று அழைக்கிறது. அந்த வாழ்வைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதை “உறுதியாகப் பிடித்துக்கொள்ள” நாம் எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 6:12, 19.

22. (அ) நாம் எப்படி ‘உண்மையான வாழ்வை உறுதியாகப் பிடித்துக்கொள்ள’ முடியும்? (ஆ) முடிவில்லாத வாழ்வைப் பெறும் தகுதி நமக்கு இருப்பதாக நாம் ஏன் நினைக்கக் கூடாது?

22 நாம் எப்படி ‘உண்மையான வாழ்வை உறுதியாகப் பிடித்துக்கொள்ள’ முடியும்? நாம் “நன்மை செய்கிறவர்களாகவும், நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாகவும்” இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 6:18) அப்படியென்றால், பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டுமென்று அர்த்தம். இருந்தாலும், சொந்த முயற்சியால் உண்மையான வாழ்வை நம்மால் பெற முடியாது. முடிவில்லாத வாழ்வைப் பெறும் தகுதி நமக்கு இருப்பதாக நாம் நினைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அது யெகோவா இலவசமாகக் கொடுக்கும் அன்பளிப்பு, அவருடைய உண்மை ஊழியர்களுக்கு அவர் காட்டும் ‘அளவற்ற கருணையின்’ ஒரு எடுத்துக்காட்டு. (ரோமர் 5:15) நம்முடைய பரலோகத் தகப்பன் இந்த அன்பளிப்பைத் தனக்கு உண்மையாக இருக்கும் ஊழியர்களுக்குக் கொடுக்கக் காத்திருக்கிறார்.

23. நீங்கள் ஏன் இப்போதே சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்?

23 ‘கடவுள் ஏற்றுக்கொள்கிற விதத்தில்தான் நான் அவரை வணங்குகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தால், உடனடியாக அவற்றைச் செய்யுங்கள். நாம் யெகோவாமேல் சார்ந்திருக்கும்போதும், அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க முழு முயற்சி எடுக்கும்போதும், யெகோவா நம் அடைக்கலமாக இருப்பார். சாத்தானுடைய பொல்லாத உலகத்தின் இந்தக் கடைசி நாட்களில் அவர் தனக்கு உண்மையாக இருக்கும் மக்களைப் பாதுகாப்பார். பிறகு, வாக்குக் கொடுத்தபடியே நம்மைப் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ வைப்பார். இப்போதே நீங்கள் சரியான தீர்மானங்களை எடுத்தால், எதிர்காலத்தில் உண்மையான வாழ்வை அனுபவிக்க முடியும்!