Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 4

என் தவறுகளை எப்படிச் சரி செய்யலாம்?

என் தவறுகளை எப்படிச் சரி செய்யலாம்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

உங்களுடைய தவறுகளை ஒத்துக்கொண்டால் நீங்கள் இன்னும் பொறுப்பான, நம்பகமான ஆளாக ஆவீர்கள்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதைக் கற்பனை செய்து பாருங்கள்: நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்தபோது, டிம் என்ற பையன் வீசிய பந்து பக்கத்து வீட்டுக்காரருடைய காரின் மேல் விழுந்து, கண்ணாடி உடைந்துவிட்டது.

நீங்கள் டிம்முடைய இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

நன்றாக யோசியுங்கள்!

நீங்கள் மூன்று விஷயங்களைச் செய்யலாம்:

  1. ஓடிவிடலாம்.

  2. வேறொருவர்மீது பழி போடலாம்.

  3. நடந்ததை காரின் சொந்தக்காரரிடம் சொல்லிவிட்டு, சேதத்திற்கான பணத்தைத் தருவதாக ஒத்துக்கொள்ளலாம்.

முதல் விஷயத்தைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் ஒருவேளை ஆசைப்படலாம். ஆனால், கண்ணாடியை உடைத்திருந்தாலும் சரி, வேறு ஏதாவது தவறு செய்திருந்தாலும் சரி, அதை ஒத்துக்கொள்வதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன.

தவறுகளை ஒத்துக்கொள்ள 3 காரணங்கள்

  1. தவறை ஒத்துக்கொள்வதுதான் சரியானது.

    “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே நாங்கள் விரும்புகிறோம்” என்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 13:18.

  2. தவறை ஒத்துக்கொண்டால் மற்றவர்கள் உங்களை மன்னிப்பார்கள்.

    “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 28:13.

  3. மிக முக்கியமாக, கடவுள் சந்தோஷப்படுவார்.

    “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. —நீதிமொழிகள் 3:32.

அமெரிக்காவில் இருக்கிற 20 வயதுள்ள கரீனா, காரை வேகமாக ஓட்டிக்கொண்டு போனதால், அவளுக்கு அபராதச் சீட்டு கொடுக்கப்பட்டது. அதை அவளுடைய அப்பாவிடமிருந்து மறைக்க வேண்டும் என்று அவள் முயற்சி செய்தாள். ஆனால், ரொம்ப நாளைக்கு அதை மறைக்க முடியவில்லை. “ஒரு வருஷத்துக்கு அப்புறம், என்னோட அப்பா அதை பார்த்துட்டார். பயங்கர பிரச்சினை ஆயிடுச்சு!” என்று கரீனா சொல்கிறார்.

இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? “தப்பை மூடிமறைச்சா பிரச்சினை பெருசாதான் ஆகும். என்னைக்காவது ஒரு நாள் அதோட விளைவுகளை சந்திச்சே ஆகணும்!” என்று கரீனா சொல்கிறாள்.

தவறுகளிலிருந்து எப்படிப் பாடம் கற்றுக்கொள்வது?

“நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:2) நாம் பார்த்தபடி, தவறுகளை ஒத்துக்கொள்வது, அதுவும் உடனடியாக ஒத்துக்கொள்வது, மனத்தாழ்மைக்கும் முதிர்ச்சிக்கும் அடையாளமாக இருக்கிறது.

அடுத்ததாக, நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வெரா என்ற பெண் இப்படிச் சொல்கிறாள்: “நான் செய்ற ஒவ்வொரு தப்புல இருந்தும் பாடம் கத்துக்கணும்னு நினைப்பேன். அப்படி செஞ்சா, நல்ல குணங்களை வளர்த்துக்கவும், அடுத்த தடவை அதே விஷயத்தை வேற வழியில சமாளிக்கவும் முடியும்.” இப்போது, நீங்கள் எப்படி அதைச் செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்.

உங்களுடைய அப்பாவின் வண்டியை ஓட்டிவிட்டு அதைச் சேதப்படுத்தி விடுகிறீர்கள். இப்போது என்ன செய்வீர்கள்?

  • அப்பா அதை கவனிக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டு அதைப் பற்றி வாயே திறக்காமல் இருப்பீர்களா?

  • என்ன நடந்தது என்று உங்கள் அப்பாவிடம் அப்படியே சொல்வீர்களா?

  • என்ன நடந்தது என்று உங்கள் அப்பாவிடம் சொல்லிவிட்டு பழியை இன்னொருவர்மீது போட்டுவிடுவீர்களா?

சரியாகப் படிக்காததால் பரீட்சையில் ஃபெயில் ஆகி விடுகிறீர்கள். இப்போது என்ன செய்வீர்கள்?

  • கேள்வி கஷ்டமாக இருந்தது என்று சொல்வீர்களா?

  • ஃபெயில் ஆனதற்கு நீங்கள்தான் காரணம் என்று ஒத்துக்கொள்வீர்களா?

  • டீச்சருக்கு உங்களைப் பிடிக்காததால்தான் ஃபெயில் ஆனதாகச் சொல்வீர்களா?

நீங்கள் செய்த தவறுகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது, பின்னால் வருகிறவற்றைப் பார்ப்பதற்கு உதவும் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே கார் ஓட்டுவதுபோல் இருக்கும்

நாம் ஏற்கெனவே சிந்தித்த சூழ்நிலைகளை மறுபடியும் கவனியுங்கள். நீங்கள் உங்களை உங்கள் அப்பாவாகவும் டீச்சராகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். தவறுகளை உடனே ஒத்துக்கொண்டால் உங்கள் அப்பாவும் டீச்சரும் உங்களைப் பற்றி எப்படி உணர்வார்கள்? தவறுகளை மூடிமறைத்தால் அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

போன வருடத்தில் நீங்கள் செய்த ஒரு தவறைப் பற்றி யோசித்துப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

என்ன தவறு செய்தீர்கள்? அதை எப்படிச் சமாளித்தீர்கள்?

  • அதை மூடிமறைத்துவிட்டேன்.

  • இன்னொருவர்மீது பழி போட்டுவிட்டேன்.

  • அதை உடனே ஒத்துக்கொண்டேன்.

செய்த தவறை ஒத்துக்கொள்ளாத காரணத்தால், பின்பு அதைப் பற்றி எப்படி உணர்ந்தீர்கள்?

  • நல்ல வேளை, தப்பித்துவிட்டேன் என்று சந்தோஷப்பட்டேன்.

  • உண்மையைச் சொல்லவில்லை என்ற குற்ற உணர்வு எனக்கு இருந்தது.

இந்தச் சூழ்நிலையை வேறு எப்படிச் சமாளித்திருக்கலாம்?

நீங்கள் செய்த தவறிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிலர் ஏன் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வதில்லை?

உங்களுடைய தவறுகளை மூடிமறைக்க நீங்கள் எப்போதும் முயற்சி செய்தால், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஆனால், அந்தத் தவறுகளை ஒத்துக்கொண்டால் அவர்கள் உங்களைப் பற்றி எப்படி உணர்வார்கள்?—லூக்கா 16:10.