Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 5

ஸ்கூலில் யாராவது என்னை வம்புக்கு இழுத்தால் என்ன செய்யலாம்?

ஸ்கூலில் யாராவது என்னை வம்புக்கு இழுத்தால் என்ன செய்யலாம்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நிலைமை சரியாகலாம் அல்லது மோசமாகலாம்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதைக் கற்பனை செய்து பாருங்கள்: தாமசுக்கு இன்று ஸ்கூலுக்கு போகவே பிடிக்கவில்லை. இன்று மட்டும் இல்லை, என்றுமே ஸ்கூலுக்கு போக பிடிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னால், அவனோடு படிக்கும் மாணவர்கள் அவனைப் பற்றி மோசமான வதந்திகளைப் பரப்பினார்கள். பிறகு, பட்டப் பெயர் வைத்து அவனைக் கூப்பிட்டார்கள். சில சமயங்களில், அவனுடைய கையில் இருக்கும் புத்தகங்களை யாராவது தட்டிவிட்டு அது ஏதோ தெரியாமல் நடந்ததுபோல் செய்துவிடுவார்கள். அல்லது கூட்டத்தில் இருக்கும் ஒருவன் அவனைத் தள்ளிவிடுவான். தாமஸ் திரும்பிப் பார்க்கும்போது யார் அவனைத் தள்ளிவிட்டது என்று அவனால் கண்டுபிடிக்க முடியாது. நேற்று, நிலைமை இன்னும் மோசமாகியது. இன்டர்நெட்டில் அவனுக்கு ஒரு மிரட்டல் வந்தது...

நீங்கள் தாமசுடைய இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

நன்றாக யோசியுங்கள்!

உங்களுக்கும் பலம் இருக்கிறது! ஆனால், வம்புக்கு இழுக்கிறவர்களை சண்டை போடாமலேயே உங்களால் சமாளிக்க முடியும். எப்படி?

  • அமைதியாக இருங்கள். “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 29:11) நீங்கள் அமைதியாக இருந்தால், அல்லது பார்ப்பதற்காவது அமைதியாகத் தெரிந்தால், உங்களை வம்புக்கு இழுக்கிறவர்களுடைய ஆர்வம் குறையலாம்.

  • பழிக்குப் பழி வாங்காதீர்கள். “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:17) பழிக்குப் பழி வாங்கினால் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

  • பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர்கள். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:3) பிரச்சினை செய்கிறவர்களிடம் முடிந்தளவு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாதீர்கள். உங்களை வம்புக்கு இழுப்பது மாதிரியான சூழ்நிலைகளைத் தவிர்த்திடுங்கள்.

  • அவர்கள் எதிர்பார்க்காத ஒன்றைச் சொல்ல முயற்சி செய்யுங்கள். “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:1) நீங்கள் ஏதாவது நகைச்சுவையாகச் சொல்ல முயற்சி செய்யலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ரொம்ப குண்டாக இருப்பதாக உங்களை வம்புக்கு இழுக்கிறவன் சொன்னால், “ஆமா, என்னோட எடைய கொஞ்சம் குறைக்கணும்னு நினைக்கிறேன்” என்று சாதாரணமாகச் சொல்லுங்கள்.

  • அங்கிருந்து போய்விடுங்கள். 19 வயது நோரா இப்படிச் சொல்கிறாள்: ‘அமைதியா இருக்குறது, நீங்க பக்குவமுள்ளவங்கனும் உங்கள வம்புக்கு இழுக்கிறவங்களவிட நீங்க பலசாலினும் காட்டும். வம்பு இழுக்கிறவனுக்கு இல்லாத சுய கட்டுப்பாடு உங்களுக்கு இருக்குன்னு காட்டும்.’—2 தீமோத்தேயு 2:24.

  • தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். தங்களைப் பற்றி யார் குறைவாக நினைத்துக்கொள்கிறார்கள் என்றும், யார் பதிலுக்குச் சண்டை போட மாட்டார்கள் என்றும், வம்புக்கு இழுக்கிறவர்களால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், உங்களை எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்துவிட்டால் அவர்களில் நிறைய பேர் உங்களைவிட்டு போய்விடுவார்கள்.

  • யாரிடமாவது சொல்லுங்கள். ஸ்கூல் டீச்சராக இருந்த ஒருவர் சொல்கிறார்: “‘உங்களை யாராவது வம்புக்கு இழுத்தா, என்கிட்ட வந்து சொல்லுங்க’னு சொல்வேன். அப்படி செய்றதுதான் சரியா இருக்கும். அப்போதான், அந்த பசங்க மத்த பசங்கள வம்புக்கு இழுக்காம பார்த்துக்க முடியும்.”

வம்புக்கு இழுக்கிறவனிடம் இல்லாத பலத்தை, தன்னம்பிக்கை உங்களுக்குக் கொடுக்கும்