Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 6

கூடப்படிக்கிற மாணவர்களின் தொல்லையை எப்படிச் சமாளிக்கலாம்?

கூடப்படிக்கிற மாணவர்களின் தொல்லையை எப்படிச் சமாளிக்கலாம்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

நீங்கள் யார் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கும்போது, மற்றவர்கள் உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் வாழ்க்கை உங்கள் கையிலேயே இருக்கும்!

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதைக் கற்பனை செய்து பாருங்கள்: கூடப்படிக்கிற இரண்டு பேர் வருவதைப் பார்க்கும்போது, ப்ரையனுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. அவனை சிகரெட் பிடிக்க வைப்பதற்காக இந்த வாரத்திலேயே இரண்டு தடவை அவர்கள் முயற்சி செய்துவிட்டார்கள். இது மூன்றாவது தடவை!

முதல் பையன் சொல்கிறான்:

“மறுபடியும் தனியா இருக்க போல? ஒரு ஃப்ரெண்ட்டை உனக்கு அறிமுகப்படுத்துறேன்.”

கண் அடித்துக்கொண்டே, “ஃப்ரெண்ட்” என்ற வார்த்தையை அழுத்திச் சொல்கிறான். அதோடு, பாக்கெட்டிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து ப்ரையனுக்குக் கொடுக்கிறான்.

அவனுடைய விரல்களுக்கு நடுவில் சிகரெட் இருப்பதை ப்ரையன் பார்க்கிறான். அப்போது, ப்ரையனுக்கு பயம் இன்னும் அதிகமாகிறது.

“சாரி, ஏற்கெனவே உன்கிட்ட சொல்லியிருக்கேன், நான் இப்படியெல்லாம்...” என்று ப்ரையன் சொல்கிறான்.

இரண்டாவது பையன் சொல்கிறான்: “இப்படி கோழையா இருக்க கூடாது!”

ப்ரையன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “நான் ஒண்ணும் கோழை இல்ல” என்கிறான்.

இரண்டாவது பையன் ப்ரையனுடைய தோலில் கையைப் போட்டுக்கொண்டு, “சும்மா, எடுத்துக்கோ” என்று மெதுவாகச் சொல்கிறான்.

முதல் பையன், சிகரெட்டை ப்ரையனுடைய முகத்துக்குப் பக்கத்தில் கொண்டுபோய், “யார்கிட்டயும் சொல்ல மாட்டோம். இது யாருக்கும் தெரிய போறதில்ல” என்று முணுமுணுக்கிறான்.

நீங்கள் ப்ரையனுடைய இடத்தில் இருந்தால், என்ன செய்வீர்கள்?

நன்றாக யோசியுங்கள்!

தாங்கள் செய்வதை ப்ரையனுடைய நண்பர்கள் உண்மையிலேயே யோசித்துப் பார்த்திருக்கிறார்களா? சொந்தமாகத் தீர்மானம் எடுத்திருக்கிறார்களா? இல்லை! மற்றவர்கள் சொன்னதைத்தான் செய்திருக்கிறார்கள். மற்றவர்கள் ஒதுக்கிவிடக் கூடாது என்பதற்காக தாங்கள் எடுக்க வேண்டிய தீர்மானத்தை மற்றவர்களிடம் விட்டுவிட்டார்கள்.

உங்களுக்கும் இதே போன்ற சூழ்நிலை வந்தால், என்ன தீர்மானம் எடுப்பீர்கள், கூடப்படிக்கிற மாணவர்களின் தொல்லையை எப்படிச் சமாளிப்பீர்கள்?

  1.  

    “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 22:3.

    பிரச்சினையை நீங்கள் பெரும்பாலும் முன்கூட்டியே எதிர்பார்க்கலாம். உதாரணத்துக்கு, கூடப்படிக்கிறவர்கள் கூட்டமாக இருப்பதையும் சிகரெட் பிடிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். அந்தச் சமயத்தில், பிரச்சினை வரும் என்று எதிர்பார்த்தால் உங்களால் சமாளிக்க முடியும்.

  2.  

    “நல்மனசாட்சி உள்ளவர்களாக இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 3:16.

    ‘மத்தவங்கள மாதிரி செஞ்சா காலப்போக்குல நான் எப்படி உணர்வேன்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். உங்களோடு இருக்கிறவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், பிற்பாடு நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக உங்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுத்து விடுவீர்களா?—யாத்திராகமம் 23:2.

  3.  

    “ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங் கொண்டு துணிகரமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:16.

    என்றைக்காவது ஒரு நாள், நாம் தீர்மானம் எடுத்தே ஆக வேண்டும், அதன் விளைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும். சரியான தீர்மானம் எடுத்த யோசேப்பு, யோபு, இயேசுவைப் பற்றி பைபிள் சொல்கிறது. தவறான தீர்மானம் எடுத்த காயீன், ஏசா, யூதாசைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. இப்போது, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

‘இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொள்ளுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (தானியேல் 1:8) விளைவுகளை யோசித்துப் பார்த்து, மனதளவில் தயாராக இருங்கள். அப்போது, உங்கள் தீர்மானத்தைச் சொல்வது, எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருக்கும். அது நிறைய நன்மைகளையும் தரும்.

கவலைப்படாதீர்கள்! கூடப்படிக்கிறவர்களிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை. முடியாது என்று உறுதியாகச் சொன்னால் மட்டும் போதும். உங்களுடைய முடிவை யாராலும் மாற்ற முடியாது என்பதைத் தெளிவாகக் காட்ட, நீங்கள் இப்படிச் சொல்லலாம்:

  • “இதுல எல்லாம் என்னை சேர்க்காதீங்க”

  • “நான் இந்த மாதிரியெல்லாம் செய்ய மாட்டேன்!”

  • “உனக்கு என்னை பத்தி நல்லா தெரியும்தானே!”

உடனடியாக, அதுவும் உறுதியாகச் சொல்லுங்கள். அப்படிச் செய்தால், வம்புக்கு இழுக்கிறவர்கள் உங்களைவிட்டு எவ்வளவு சீக்கிரமாகப் பின்வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்!

யாராவது கிண்டல் செய்தால்...

உங்களோடு படிக்கிறவர்களுடைய தொல்லைகளுக்கு நீங்கள் இணங்கிவிட்டால் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ரோபோட் போல் ஆகிவிடுவீர்கள்

கூடப்படிக்கிறவர்கள் கிண்டல் செய்தால் என்ன செய்வது? “இதுல என்ன தப்பு? நீ என்ன கோழையா?” என்று கேட்டால் என்ன செய்வது? இந்த மாதிரி பேசுவது, கூடப்படிக்கிறவர்களிடமிருந்து வரும் ஒரு தொல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு நீங்கள் எப்படிப் பதில் சொல்லலாம்? குறைந்தபட்சம் இரண்டு வழிகள் இருக்கின்றன.

  • அவர்கள் கிண்டலாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். (“நீ சொன்னது சரிதான், எனக்குப் பயமாதான் இருக்கு!” என்று சொன்ன பிறகு காரணத்தைச் சொல்லுங்கள்.)

  • அவர்களுக்குப் பதில் சொல்லுங்கள். மறுப்பதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு, ஏதாவது புத்திசாலித்தனமாகச் சொல்லுங்கள். (“நீயா சிகரெட் பிடிக்கிற!”)

கூடப்படிக்கிறவர்கள் தொடர்ந்து கிண்டல் செய்தால், அந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள்! அங்கேயே ரொம்ப நேரம் இருந்தால், அவர்கள் இன்னும் அதிகமாகக் கிண்டல் செய்வார்கள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அந்த இடத்திலிருந்து போவதன் மூலம், அவர்கள் உங்களை மாற்ற நீங்கள் அனுமதிக்கவில்லை என்பதைக் காட்டலாம்.

கூடப்படிக்கிறவர்களிடமிருந்து வரும் தொல்லையிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்யலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் சொல்லலாம். அந்தச் சூழ்நிலையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். எப்படியிருந்தாலும், முடிவு உங்கள் கையில்தான்!—யோசுவா 24:15.