Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 8

செக்ஸ் தாக்குதலைப் பற்றி என்ன தெரிந்திருக்க வேண்டும்?

செக்ஸ் தாக்குதலைப் பற்றி என்ன தெரிந்திருக்க வேண்டும்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான பேர் கற்பழிக்கப்படுகிறார்கள் அல்லது செக்ஸ் ரீதியில் தாக்கப்படுகிறார்கள். அதில், இளம் பிள்ளைகள்தான் முக்கிய குறி!

நீங்கள் என்ன செய்வீர்கள்?

என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்வதற்கு முன்பே ஏனெட் என்ற பெண்ணைத் தாக்கியவன் அவளைத் தரையில் தள்ளினான். “அவன் என்னை எதுவும் செய்யாம இருக்கிறதுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சேன். சத்தமா கத்துறதுக்கு முயற்சி செஞ்சேன், ஆனா, முடியல. அவனை தள்ளுனேன், உதைச்சேன், குத்துனேன், பிறாண்டுனேன். அப்போ, என்னை கத்தியால குத்துனத உணர முடிஞ்சது. அப்போ, எனக்கு பலமே இல்லாம போயிடுச்சு, என்னால கொஞ்சம்கூட நகர முடியல” என்று ஏனெட் சொல்கிறாள்.

நீங்கள் இந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

நன்றாக யோசியுங்கள்!

ராத்திரியில் வெளியே போகும்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தாலும், கெட்ட விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ‘ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகம் போதாது. ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச் செயலும் நேரிடவேண்டும்’ என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 9:11.

ஏனெட் என்ற இளம் பெண்ணைப் போல, முன்பின் தெரியாதவர்களால் சிலர் செக்ஸ் ரீதியில் தாக்கப்படுகிறார்கள். மற்றவர்கள், தெரிந்தவராலோ குடும்பத்தில் இருக்கிறவராலோ தாக்கப்படுகிறார்கள். நட்டாலிக்கு வெறும் 10 வயது இருக்கும்போது, பக்கத்து வீட்டு டீனேஜ் பையன் அவளிடம் தவறாக நடந்துகொண்டான். “எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு, அவமானமா இருந்துச்சு. அதனால, முதல்ல யார்கிட்டயும் சொல்லல” என்று நட்டாலி சொல்கிறாள்.

உங்கள்மீது எந்தத் தவறும் இல்லை

நடந்ததைப் பற்றி ஏனெட் இன்னும் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள். “அன்னைக்கு ராத்திரி நடந்ததை பத்தி திரும்ப திரும்ப நினைச்சு பார்த்தேன். அவனை தடுக்குறதுக்கு இன்னும் போராடி இருக்கணும்னு தோணுது. ஆனா, அவன் என்னை குத்துனதுக்கு அப்புறம், பயத்துல உறைஞ்சிட்டேன், என்னால ஒண்ணுமே செய்ய முடியல. ஆனா, கண்டிப்பா ஏதாவது செஞ்சிருக்கணும்னு தோணுது” என்று அவள் சொல்கிறாள்.

நட்டாலியும் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள். “நான் அவனை ரொம்ப நம்பியிருக்க கூடாது. வெளிய விளையாடுறப்போ நானும் தங்கச்சியும் எப்பவும் ஒண்ணாதான் இருக்கணும்னு அப்பா அம்மா சொல்லியிருந்தாங்க, நான்தான் அவங்க சொன்னதை கேட்கல. பக்கத்து வீட்டு பையன் தப்பா நடந்துக்கிறதுக்கு நானே வாய்ப்பு கொடுத்துட்டேன்னு தோணுது. இந்த விஷயம் என் குடும்பத்தை பாதிச்சது. அவங்களோட வேதனைக்கு நான்தான் காரணம்னு நினைக்கிறேன். இதை நினைச்சு நினைச்சு நான் ரொம்ப வேதனைப்பட்டுக்கிட்டு இருக்கேன்” என்று அவள் சொல்கிறாள்.

நீங்களும் ஏனெட் போல, நட்டாலி போல உணர்ந்தால், ஒரு முக்கியமான விஷயத்தை ஞாபகம் வையுங்கள். கற்பழிக்கப்பட்டவர்கள் யாருமே அதற்கு இணங்கிப்போவது கிடையாது. சிலர் இதைச் சாதாரணமாக நினைக்கிறார்கள். ஏனென்றால், ஆண்கள் அப்படி நடந்துகொள்வது சகஜம் என்றும் கற்பழிக்கப்படுகிறவர்களின் சம்மதத்தோடுதான் இது நடக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால், ஒருவரைக் கற்பழிப்பதற்கு யாரும் எந்தக் காரணமும் சொல்ல முடியாது. இந்த மாதிரியான கொடூரமான காரியத்துக்கு நீங்கள் பலியாகியிருந்தால், உங்கள்மீது எந்தத் தவறும் இல்லை!

இது படிப்பதற்குச் சுலபமாக இருந்தாலும், நம்புவதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கலாம்! சிலர், நடந்ததைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் குற்ற உணர்ச்சியாலும் தவறான எண்ணங்களாலும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், பேசாமல் அமைதியாக இருந்தால், யாருக்கு லாபம்? உங்களுக்கா அல்லது தப்பு செய்தவனுக்கா? நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.

இதைப் பற்றி பேசுங்கள்

நீதிமானாகிய யோபு பயங்கர வேதனையில் இருந்தபோது, “என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்” என்று சொன்னதாக பைபிள் சொல்கிறது. (யோபு 10:1) நீங்களும் யோபுவைப் போல மற்றவர்களிடம் பேசினால், பிரயோஜனமாக இருக்கும். நம்பிக்கைக்குரியவரிடம் பேசுவது, நடந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளவும், தாங்க முடியாத வேதனையிலிருந்து வெளியே வரவும் உதவி செய்யும்.

உங்கள் உணர்ச்சிகளை மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியாத சமயத்தில், அதைப் பற்றி யாரிடமாவது பேசலாம், இல்லையா?

மற்றவர்களிடம் பேசுவது எவ்வளவு பிரயோஜனமாக இருந்தது என்பதைப் பற்றி ஏனெட் இப்படிச் சொல்கிறாள்: “இதை பத்தி என்னோட நெருக்கமான ஃப்ரெண்ட்கிட்ட பேசினேன். சபை மூப்பர்கள் சிலர்கிட்ட பேசச்சொல்லி அவங்க சொன்னாங்க. மூப்பர்கள்கிட்ட பேசுனதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன். நிறைய சந்தர்ப்பங்கள்ல, மூப்பர்கள் என்கிட்ட பேசினாங்க. நடந்ததுக்கு நான் காரணம் இல்லன்னு, எதுக்குமே நான் காரணம் இல்லன்னு சொன்னாங்க. இதை கேட்கணும்னுதான் நான் விரும்புனேன்!”

அந்தப் பையன் மோசமாக நடந்துகொண்டதைப் பற்றி தன்னுடைய அப்பா அம்மாவிடம் நட்டாலி சொன்னாள். “அவங்க எனக்கு பக்கபலமா இருந்தாங்க. நடந்ததை பத்தி மனசுவிட்டு பேச சொன்னாங்க. அப்படி பேசுனது, வேதனையிலயே மூழ்கிடாம இருக்கவும், மனசுக்குள்ள வெறுப்ப வைச்சுக்காம இருக்கவும் உதவியா இருந்துச்சு” என்று சொல்கிறாள்.

ஜெபம் செய்ததும் நட்டாலிக்கு ஆறுதலாக இருந்தது. “கடவுள்கிட்ட பேசுனது உதவியா இருந்துச்சு. முக்கியமா, இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லமுடியாதுனு நினைச்சப்போ, ஜெபம் செஞ்சது எனக்கு ஆறுதலா இருந்துச்சு. ஜெபம் செய்றப்போ, என்னால மனசுவிட்டு பேச முடியுது. உண்மையிலயே மன அமைதியும் சமாதானமும் கிடைக்குது” என்று சொல்கிறாள்.

“குணமாக்க ஒரு காலமுண்டு” என்பதை நீங்களும் புரிந்துகொள்வீர்கள். (பிரசங்கி 3:3) உடல் ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும் உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள். எல்லாவற்றையும்விட, எல்லா விதமான ஆறுதலின் கடவுளாகிய யெகோவாவை நம்பியிருங்கள்.—2 கொரிந்தியர் 1:3, 4.

டேட்டிங் செய்யும் வயது உங்களுக்கு இருந்தால்...

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், தவறான காரியத்தைச் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டால், “இதெல்லாம் என்கிட்ட வைச்சுக்காத!” என்றோ, “முதல்ல கையை எடு!” என்றோ உறுதியாகச் சொல்லுங்கள். உங்கள் காதலனை இழந்துவிடுவீர்கள் என்ற பயத்தில் அமைதியாக இருந்துவிடாதீர்கள். நீங்கள் இப்படிச் சொல்லியதற்காக உங்கள் காதலன் உங்களை விட்டுப் பிரிந்தால், அவன் உங்களுக்குத் தகுதியானவன் இல்லை. உங்களுடைய உடலையும் ஒழுக்க தராதரங்களையும் மதிக்கிற ஆள்தான் உங்களுக்குத் தேவை.

செக்ஸ் தாக்குதலைப் பற்றி...

“ஸ்கூல்ல, பசங்க என் ப்ராவை பின்னாடி பிடிச்சு இழுப்பாங்க, அசிங்கமா பேசுவாங்க. நான் அவங்ககூட செக்ஸ் வைச்சிக்கிட்டா எவ்ளோ நல்லா இருக்கும்னு சொல்வாங்க.”—கொரெட்டா.

இந்தப் பையன்கள் என்ன செய்தார்கள் என்று நினைக்கிறீர்கள்?

  1. கிண்டல் செய்தார்கள்

  2. சரசமாடினார்கள்

  3. செக்ஸ் ரீதியில் தாக்கினார்கள்

“பஸ்சில, ஒரு பையன் அசிங்கமா பேசிட்டு, என்னை இழுக்க ஆரம்பிச்சான். நான் அவன் கையை தட்டிவிட்டுட்டு அவனை தள்ளி நிக்க சொன்னேன். அப்போ, அவன் என்னை ஏதோ பைத்தியக்காரி மாதிரி பார்த்தான்.”—கேன்டிஸ்.

கேன்டிசை இந்தப் பையன் என்ன செய்தான்?

  1. கிண்டல் செய்தான்

  2. சரசமாடினான்

  3. செக்ஸ் ரீதியில் தாக்கினான்

“போன வருஷம், ஒரு பையன் என்னை பிடிச்சிருக்குனு சொல்லிக்கிட்டே இருந்தான். என்னோட வெளியில போக ஆசைப்படுறதாவும் சொன்னான். நான் முடியாதுனு சொல்லிக்கிட்டே இருந்தேன். சில சமயம், என் கையை தடவுவான். அப்படிச் செய்யாதேனு சொன்னாலும் கேட்க மாட்டான். என்னோட ஷூ லேசை கட்டுறதுக்கு கீழ குனிஞ்சப்போ பின்னாடி தட்டுனான்.”—பெத்தனி.

இந்தப் பையன் என்ன செய்தான்?

  1. கிண்டல் செய்தான்

  2. சரசமாடினான்

  3. செக்ஸ் ரீதியில் தாக்கினான்

இந்த எல்லா கேள்விகளுக்கும் 3-வது பதில்தான் சரியானது!

சரசமாடுவது மற்றும் கிண்டல் செய்வதிலிருந்து செக்ஸ் தாக்குதல் எப்படி வித்தியாசப்படுகிறது?

செக்ஸ் தாக்குதல், ஒருவர் மட்டுமே செய்வது. பாதிக்கப்பட்டவர் மறுத்தாலும், தொடர்ந்து செய்யப்படுகிறது.

செக்ஸ் தாக்குதல் ரொம்ப மோசமானது. இது செக்ஸ் கொடுமையில் போய் முடியலாம்.