Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 2

முதல் ஆணும் பெண்ணும்

முதல் ஆணும் பெண்ணும்

ஏதேன் என்ற இடத்தில் யெகோவா ஒரு தோட்டத்தை உருவாக்கினார். அந்தத் தோட்டம் முழுவதும் நிறைய பூக்களும் மரங்களும் மிருகங்களும் இருந்தன. பிறகு, முதல் மனிதனைக் கடவுள் படைத்தார். அவன் பெயர் ஆதாம். கடவுள் அவனை மண்ணிலிருந்து உருவாக்கி, அவனுடைய மூக்கில் மூச்சுக் காற்றை ஊதினார். அப்போது என்ன நடந்தது தெரியுமா? அவனுக்கு உயிர் வந்தது! ஏதேன் தோட்டத்தைக் கவனித்துக்கொள்ளும் வேலையை யெகோவா ஆதாமுக்குக் கொடுத்தார். அங்கே இருந்த எல்லா மிருகங்களுக்கும் பெயர் வைக்கச் சொன்னார்.

ஆதாமுக்கு யெகோவா ஒரு முக்கியமான கட்டளையைக் கொடுத்தார். அதாவது, ‘நீ இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் சாப்பிடலாம். ஆனால், ஒரேவொரு மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் நீ செத்துவிடுவாய்’ என்று சொன்னார்.

பிறகு, ‘ஆதாமுக்கு ஒரு துணையை உண்டாக்கப் போகிறேன்’ என்று யெகோவா சொன்னார். அதற்காக, ஆதாமை நன்றாகத் தூங்க வைத்தார். அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, ஆதாமுக்கு ஒரு மனைவியை உண்டாக்கினார். அவள் பெயர் ஏவாள். இப்படித்தான் முதல் குடும்பம் உருவானது. ஏவாளைப் பார்த்தபோது ஆதாமுக்கு எப்படி இருந்தது? அவனுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. ‘ஆஹா! என்னை மாதிரியே இருக்கிறாளே! என் எலும்பிலிருந்து யெகோவா எவ்வளவு அழகாகப் படைத்திருக்கிறார்!’ என்று சொன்னான்.

யெகோவா அவர்களிடம், ‘நீங்கள் குழந்தைகளைப் பெற்று இந்தப் பூமியை மனிதர்களால் நிரப்புங்கள்’ என்றார். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்த முழு பூமியையும் ஏதேன் தோட்டம் மாதிரி ஒரு பூஞ்சோலையாக மாற்ற வேண்டும் என்று யெகோவா ஆசைப்பட்டார். ஆனால், அவர் நினைத்த மாதிரி நடக்கவில்லை. ஏன்? அதைப் பற்றி அடுத்த பாடத்தில் படிக்கலாம்.

“கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்.”—மத்தேயு 19:4