Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 4

கோபம் ஆபத்தானது

கோபம் ஆபத்தானது

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே வந்த பிறகு, அவர்களுக்கு நிறைய பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுடைய முதல் மகன் பெயர் காயீன். அவன் விவசாயம் செய்தான். இரண்டாவது மகன் பெயர் ஆபேல். அவன் ஆடுகளை மேய்த்தான்.

ஒருநாள், காயீனும் ஆபேலும் யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள். காணிக்கை என்றால் என்ன தெரியுமா? அது கடவுளுக்குக் கொடுக்கிற ஒரு பரிசு. ஆபேல் கொடுத்த காணிக்கையைப் பார்த்து யெகோவா சந்தோஷப்பட்டார். ஆனால், காயீன் கொடுத்த காணிக்கை அவருக்குச் சந்தோஷத்தைத் தரவில்லை. அதனால், காயீனுக்குப் பயங்கர கோபம் வந்தது. ‘இப்படிக் கோபமாக இருந்தால், ஏதாவது தப்பு செய்துவிடுவாய்’ என்று காயீனை யெகோவா எச்சரித்தார். ஆனாலும், யெகோவாவின் பேச்சை காயீன் கேட்கவில்லை.

அவன் ஆபேலிடம், ‘வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்’ என்று சொன்னான். அவர்கள் இரண்டு பேரும் தனியாக இருந்த சமயத்தில் காயீன் தன் தம்பியை அடித்து கொன்றுபோட்டான். யெகோவா காயீனுக்கு என்ன தண்டனை கொடுத்தார்? காயீனை அவனுடைய குடும்பத்தை விட்டு ரொம்பத் தூரத்துக்குத் துரத்திவிட்டார். திரும்பி வரவே கூடாது என்று சொல்லிவிட்டார்.

இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நமக்குப் பிடிக்காத மாதிரி ஏதாவது நடக்கும்போது, நமக்குக் கோபம் கோபமாக வரலாம். நமக்குப் பயங்கர கோபம் வரும்போது அல்லது ‘இப்படிக் கோபப்படக் கூடாது’ என்று மற்றவர்கள் சொல்லும்போது உடனடியாக கோபத்தை அடக்க வேண்டும். அப்போதுதான், கோபத்தில் தவறு செய்துவிடாமல் இருப்போம்.

யெகோவாமேல் ஆபேல் ரொம்ப அன்பு வைத்திருந்தான். அவருக்குப் பிடித்த மாதிரி நடந்துகொண்டான். அதனால், ஆபேலை யெகோவா மறக்கவே மாட்டார். இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றும்போது, ஆபேலை மறுபடியும் உயிரோடு எழுப்புவார்.

‘முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.’—மத்தேயு 5:24