Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 9

ஒரு மகன் பிறக்கிறான்!

ஒரு மகன் பிறக்கிறான்!

ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் கல்யாணமாகி நிறைய வருஷங்கள் ஆகிவிட்டன. அவர்கள் ஊர் நகரத்தில் இருந்த வசதியான வீட்டை விட்டுவிட்டு கூடாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும், சாராள் குறை சொல்லவில்லை. ஏனென்றால், யெகோவா சொல்வது எல்லாமே தங்களுடைய நல்லதுக்குத்தான் என்று சாராள் நம்பினாள்.

சாராள் தனக்கு எப்படியாவது ஒரு குழந்தை வேண்டுமென்று ஆசைப்பட்டாள். அதனால் ஆபிரகாமிடம், ‘என் வேலைக்காரி ஆகாருக்கு உங்கள் மூலமாக ஒரு குழந்தை பிறந்தால், அதை என் குழந்தையாக நினைத்துக்கொள்வேன்’ என்று சொன்னாள். சீக்கிரத்தில், ஆகாருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் இஸ்மவேல்.

பல வருஷங்களுக்குப் பிறகு, ஆபிரகாமையும் சாராளையும் மூன்று பேர் சந்தித்தார்கள். அந்தச் சமயத்தில், ஆபிரகாமுக்கு 99 வயது, சாராளுக்கு 89 வயது. ஆபிரகாம் அந்த மூன்று பேரையும் ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சொன்னார், அவர்களுக்குச் சாப்பாடு கொண்டுவருவதாகவும் சொன்னார். அவர்கள் யார் தெரியுமா? அவர்கள் தேவதூதர்கள்! அவர்கள் ஆபிரகாமிடம், ‘அடுத்த வருஷம் இந்தச் சமயத்தில் உங்களுக்கு ஒரு மகன் இருப்பான்’ என்று சொன்னார்கள். சாராள் இதையெல்லாம் கூடாரத்துக்குள் இருந்து கேட்டுக்கொண்டிருந்தாள். ‘கிழவியாக இருக்கிற எனக்குப் போய் குழந்தை பிறக்குமா?’ என்று நினைத்து சிரித்துக்கொண்டாள்.

யெகோவாவின் தூதர் சொன்னபடியே, அடுத்த வருஷம் சாராளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது! ஆபிரகாம் அந்தக் குழந்தைக்கு ஈசாக்கு என்று பெயர் வைத்தார். ஈசாக்கு என்றால் “சிரிப்பு” என்று அர்த்தம்.

ஈசாக்கு சுமார் ஐந்து வயது பையனாக இருந்தபோது, இஸ்மவேல் அவனைக் கேலி செய்ததை சாராள் கவனித்தாள். தன்னுடைய மகனைக் பாதுகாக்க வேண்டும் என்று சாராள் நினைத்தாள். அதனால் ஆபிரகாமிடம், ஆகாரையும் இஸ்மவேலையும் வீட்டை விட்டு அனுப்பிவிடச் சொன்னாள். ஆபிரகாமுக்கு அதைக் கேட்டபோது கஷ்டமாக இருந்தது. ஆனால், யெகோவாவும் ஈசாக்கைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் ஆபிரகாமிடம், ‘சாராள் பேச்சைக் கேள். நான் இஸ்மவேலை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன். ஆனால், ஈசாக்கு மூலம்தான் நான் கொடுத்த வாக்கு நிறைவேறும்’ என்று சொன்னார்.

‘விசுவாசத்தால்தான் சாராள்கூட, வயதானவளாக இருந்தாலும் கர்ப்பமானாள். ஏனென்றால், வாக்குறுதி கொடுத்தவர் உண்மையுள்ளவர் என்று அவள் நம்பினாள்.’—எபிரெயர் 11:11