Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 10

லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்

லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்

லோத்து தன்னுடைய சித்தப்பா ஆபிரகாமுடன் கானான் தேசத்தில் வாழ்ந்தார். காலம் போகப் போக, ஆபிரகாமிடமும் லோத்துவிடமும் நிறைய கால்நடைகள் சேர்ந்துவிட்டன. அதனால், அவர்களுக்கு இடம் போதவில்லை. அப்போது ஆபிரகாம் லோத்துவிடம், ‘நாம் எல்லாரும் இனிமேல் ஒரே இடத்தில் தங்க முடியாது. நீ எந்தப் பக்கம் போக ஆசைப்படுகிறாயோ, அந்தப் பக்கம் போ. நான் வேறு பக்கம் போகிறேன்’ என்று சொன்னார். ஆபிரகாம் மற்றவர்கள்மேல் ரொம்ப அக்கறையாக நடந்துகொண்டார், இல்லையா?

சோதோம் என்ற நகரத்துக்குப் பக்கத்தில் இருந்த இடத்தை லோத்து பார்த்தார். அது ரொம்ப அழகாக இருந்தது. ஏராளமான தண்ணீர் இருந்தது, அந்த இடத்தில் பச்சைப் பசேல் என்று புல்வெளிகளும் இருந்தன. அதனால் லோத்து தன்னுடைய குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு அந்த இடத்துக்குப் போனார்.

சோதோம் மக்களும், பக்கத்து நகரமான கொமோராவில் வாழ்ந்த மக்களும் ரொம்ப கெட்டவர்களாக இருந்தார்கள். அதனால், யெகோவா அந்த நகரங்களை அழிக்க முடிவு செய்தார். ஆனால், லோத்துவையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்ற நினைத்தார். அதனால், அவர்களை எச்சரிப்பதற்காக இரண்டு தேவதூதர்களை அனுப்பினார். அந்தத் தேவதூதர்கள் அவர்களிடம், ‘சீக்கிரம்! இந்த ஊரை விட்டு உடனே போங்கள். யெகோவா இந்த ஊரை அழிக்கப் போகிறார்’ என்று சொன்னார்கள்.

ஆனால், லோத்து உடனே புறப்படாமல் தாமதித்துக்கொண்டிருந்தார். அதனால், அந்தத் தேவதூதர்கள் லோத்துவின் கையையும் அவருடைய மனைவியின் கையையும் இரண்டு மகள்களின் கையையும் பிடித்து வேகவேகமாக ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். பிறகு, ‘ஓடுங்கள்! இங்கிருந்து தப்பித்து ஓடுங்கள்! திரும்பிப் பார்க்காதீர்கள். அப்படித் திரும்பிப் பார்த்தால், செத்துப்போவீர்கள்!’ என்று அவர்களிடம் சொன்னார்கள்.

அவர்கள் சோவார் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்ததும், சோதோம், கொமோராமேல் யெகோவா நெருப்பையும் கந்தகத்தையும் கொட்டினார். இரண்டு நகரங்களும் அடியோடு அழிந்தன. லோத்துவின் மனைவி யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் திரும்பிப் பார்த்தாள். அதனால், உப்புச் சிலையாக ஆனாள்! லோத்துவும் அவருடைய மகள்களும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் தப்பித்தார்கள். லோத்துவின் மனைவி யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதை நினைத்து அவர்கள் ரொம்பக் கவலைப்பட்டிருப்பார்கள். யெகோவாவின் பேச்சைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.

“லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்.”—லூக்கா 17:32