Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 12

யாக்கோபுக்குச் சொத்து கிடைக்கிறது

யாக்கோபுக்குச் சொத்து கிடைக்கிறது

ரெபெக்காளைக் கல்யாணம் செய்தபோது ஈசாக்குக்கு 40 வயது. அவள்மீது அவர் ரொம்பப் பாசமாக இருந்தார். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

பெரியவன் பெயர் ஏசா. சின்னவன் பெயர் யாக்கோபு. ஏசாவுக்கு வெளியே சுற்றுவது ரொம்பப் பிடிக்கும். மிருகங்களை வேட்டையாடுவதில் கெட்டிக்காரன். ஆனால் யாக்கோபுக்கு வீட்டில் இருப்பது ரொம்பப் பிடிக்கும்.

அந்தக் காலத்தில், அப்பா இறந்த பிறகு அவருடைய நிலங்களிலும் பணத்திலும் ஒரு பெரிய பங்கு மூத்த மகனுக்குக் கிடைத்தது. அதைத்தான் சொத்து என்று சொல்வார்கள். ஈசாக்கின் குடும்பத்தைப் பொறுத்தவரை, ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த வாக்குகளும் அவர்களுடைய சொத்து போல இருந்தது. அந்த வாக்குகளைப் பற்றி ஏசா பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால், யாக்கோபு அதை ரொம்ப முக்கியமாக நினைத்தார்.

ஒருநாள் ஏசா ரொம்ப நேரம் வேட்டையாடிவிட்டு பயங்கர களைப்பாக வீட்டுக்கு வந்தான். அப்போது யாக்கோபு ருசியான உணவைச் சமைத்துக்கொண்டிருந்தார். வாசனை ஏசாவின் மூக்கைத் துளைத்தது. உடனே, ‘எனக்கு பசிக்கிறது, அந்தச் சிவப்புக் கூழை கொஞ்சம் கொடு’ என்று யாக்கோபிடம் கேட்டான். அதற்கு யாக்கோபு, ‘நான் உனக்குக் கூழ் தருகிறேன். ஆனால், முதலில் உன்னுடைய சொத்தைத் தருவதாக எனக்குச் சத்தியம் செய்து கொடு’ என்று கேட்டார். அதற்கு ஏசா, ‘அந்தச் சொத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்? அதை நீயே வைத்துக்கொள். எனக்கு இப்போது சாப்பாடு கொடு’ என்று சொன்னான். ஏசா செய்தது சரியா, நீ என்ன நினைக்கிறாய்? அவன் செய்தது தவறு. ஒரு கிண்ணம் கூழுக்கு ஆசைப்பட்டு ரொம்ப முக்கியமான ஒன்றை ஏசா கொடுத்துவிட்டான்.

ஈசாக்குக்கு இப்போது வயதாகிவிட்டது. அவருடைய மூத்த மகனுக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்தது. ஆனால், சின்ன மகனான யாக்கோபுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்க ரெபெக்காள் உதவி செய்தாள். விஷயம் தெரிந்தபோது ஏசாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. அதனால், தன்னுடைய தம்பியைக் கொல்ல திட்டம் போட்டான். ஈசாக்கும் ரெபெக்காளும் யாக்கோபைக் காப்பாற்ற நினைத்தார்கள். அதனால் யாக்கோபிடம், ‘நீ உன்னுடைய மாமா லாபான் வீட்டுக்குப் போ. ஏசாவின் கோபம் தீரும்வரை நீ அங்கேயே தங்கியிரு’ என்று சொன்னார்கள். அப்பா-அம்மா சொன்னதைக் கேட்டு யாக்கோபும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கே ஓடிப்போனார்.

“ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் சம்பாதித்தாலும் தன் உயிரை இழந்துவிட்டால் என்ன பிரயோஜனம்? உயிருக்கு ஈடாக ஒருவரால் எதைக் கொடுக்க முடியும்?”—மாற்கு 8:36, 37