Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 13

யாக்கோபும் ஏசாவும் சமாதானமாகிறார்கள்

யாக்கோபும் ஏசாவும் சமாதானமாகிறார்கள்

‘ஆபிரகாமையும் ஈசாக்கையும் பாதுகாத்தது போல உன்னையும் பாதுகாப்பேன்’ என்று யாக்கோபிடம் யெகோவா சொன்னார். யாக்கோபு, ஆரான் என்ற இடத்துக்குப் போய் குடியிருந்தார். அங்கே அவர் கல்யாணம் செய்துகொண்டார். அவருக்கு நிறைய பிள்ளைகள் பிறந்தார்கள். அவர் பெரிய பணக்காரராக ஆனார்.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு, யெகோவா யாக்கோபிடம், ‘நீ உன்னுடைய சொந்த ஊருக்குப் போ’ என்று சொன்னார். அதனால், யாக்கோபும் அவருடைய குடும்பத்தாரும் ரொம்பத் தூரத்தில் இருக்கிற அந்த ஊருக்குக் கிளம்பினார்கள். போகிற வழியில் யாக்கோபின் ஆட்கள் அவரிடம் வந்து, ‘உங்கள் அண்ணன் ஏசா வந்துகொண்டிருக்கிறார். அவரோடு 400 பேர் வருகிறார்கள்’ என்று சொன்னார்கள். தன்னையும் தன்னுடைய குடும்பத்தாரையும் ஏசா ஏதாவது செய்துவிடுவானோ என்று யாக்கோபு பயந்தார். அதனால் யெகோவாவிடம், ‘என்னுடைய அண்ணனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று ஜெபம் செய்தார். அடுத்த நாள், ஏசாவுக்கு நிறைய செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் மாடுகளையும் ஒட்டகங்களையும் கழுதைகளையும் பரிசாக அனுப்பி வைத்தார்.

அன்று ராத்திரி யாக்கோபு தனியாக இருந்தபோது ஒரு தேவதூதரைப் பார்த்தார். அந்தத் தேவதூதர் அவரோடு போராட ஆரம்பித்தார். அவர்கள் இரண்டு பேரும் காலைவரை போராடினார்கள். யாக்கோபுக்கு அடிபட்டாலும் அவர் அந்தத் தேவதூதரை விடவே இல்லை. ‘என்னை விடு, நான் போக வேண்டும்’ என்று அந்தத் தேவதூதர் சொன்னார். அதற்கு யாக்கோபு, ‘என்னை ஆசீர்வதித்தால்தான் நான் உங்களைப் போக விடுவேன்’ என்று சொன்னார்.

கடைசியில், யாக்கோபை அந்தத் தேவதூதர் ஆசீர்வதித்தார். ஏசா தனக்குக் கெடுதல் செய்ய யெகோவா விடமாட்டார் என்று யாக்கோபுக்கு இப்போது புரிந்தது.

அன்று காலையில் ஏசாவும் அவனுடைய 400 ஆட்களும் தூரத்தில் வருவதை யாக்கோபு பார்த்தார். உடனே, தன்னுடைய குடும்பத்தாருக்கு முன்னால் நடந்து போய் ஏசாவுக்கு முன் ஏழு தடவை மண்டிபோட்டு தலைவணங்கினார். யாக்கோபைப் பார்த்ததும் ஏசா ஓடிவந்து அவரைக் கட்டிப்பிடித்தான். இரண்டு பேரும் கண்ணீர்விட்டு அழுதார்கள். பிறகு அவர்கள் சமாதானமானார்கள். இந்தப் பிரச்சினையை யாக்கோபு சரிசெய்த விதத்தைப் பார்த்தபோது யெகோவாவுக்கு எப்படி இருந்திருக்கும்? நீ என்ன நினைக்கிறாய்?

பிறகு ஏசா தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனான். யாக்கோபு தொடர்ந்து பயணம் செய்தார். யாக்கோபுக்கு மொத்தம் 12 மகன்கள். அவர்களுடைய பெயர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, தாண், நப்தலி, காத், ஆசேர், இசக்கார், செபுலோன், யோசேப்பு, பென்யமீன். யாக்கோபின் மகன்களில் ஒருவரான யோசேப்பைப் பயன்படுத்தி யெகோவா தன்னுடைய மக்களைக் காப்பாற்றினார். எப்படி? நாம் பார்க்கலாம்.

“உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தகப்பனுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.”—மத்தேயு 5:44, 45