Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 15

யோசேப்பை யெகோவா மறக்கவே இல்லை

யோசேப்பை யெகோவா மறக்கவே இல்லை

யோசேப்பு சிறையில் இருந்தபோது எகிப்தின் ராஜா, அதாவது பார்வோன் கனவுகளைக் கண்டான். அந்தக் கனவுகளுக்கு யாராலும் அர்த்தம் சொல்ல முடியவில்லை. யோசேப்பால் அர்த்தம் சொல்ல முடியும் என்று பார்வோனிடம் அவனுடைய வேலைக்காரன் ஒருவன் சொன்னான். உடனே, யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வர பார்வோன் ஆள் அனுப்பினான்.

பார்வோன் அவரிடம், ‘என் கனவுகளுக்கு உன்னால் அர்த்தம் சொல்ல முடியுமா?’ என்று கேட்டான். யோசேப்பு பார்வோனிடம், ‘ஏழு வருஷங்களுக்கு எகிப்தில் நிறைய உணவு இருக்கும், அதற்குப் பிறகு ஏழு வருஷங்களுக்கு பஞ்சம் இருக்கும். அதனால், புத்திசாலியான ஒருவரைத் தேர்ந்தெடுத்து உணவை சேர்த்துவையுங்கள். அப்போதுதான் உங்கள் மக்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட மாட்டார்கள்’ என்று சொன்னார். அதற்கு பார்வோன், ‘நான் உன்னையே தேர்ந்தெடுக்கிறேன். எகிப்தில் நீதான் எனக்கு அடுத்த பதவியில் இருப்பாய்’ என்றான். பார்வோனின் கனவுகளுக்கு யோசேப்பால் எப்படி அர்த்தம் சொல்ல முடிந்தது? யெகோவாதான் உதவி செய்தார்.

அடுத்த ஏழு வருஷங்களுக்கு யோசேப்பு உணவைச் சேர்த்துவைத்தார். பிறகு, யோசேப்பு சொன்ன மாதிரியே பூமி முழுவதும் பஞ்சம் வந்தது. உணவு வாங்க மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் யோசேப்பிடம் வந்தார்கள். அவருடைய அப்பா யாக்கோபு எகிப்தில் உணவு இருப்பதாகக் கேள்விப்பட்டார். அதனால், உணவு வாங்க தன் மகன்களில் 10 பேரை அனுப்பினார்.

யாக்கோபின் மகன்கள் யோசேப்பிடம் போனார்கள். யோசேப்பு உடனடியாக அவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். ஆனால், அவருடைய அண்ணன்களுக்கு இவர்தான் யோசேப்பு என்று தெரியவில்லை. அவர்கள் யோசேப்புக்கு முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள். யோசேப்பு சின்ன வயதில் கண்ட கனவு இப்போது நிஜமானது. தன் அண்ணன்கள் முன்பு போலவே இருக்கிறார்களா அல்லது மாறிவிட்டார்களா என்று யோசேப்பு தெரிந்துகொள்ள நினைத்தார். அதனால் அவர்களிடம், ‘நீங்கள் உளவு பார்க்கிறவர்கள். எங்கள் நாட்டில் எந்தெந்த இடங்களைத் தாக்கலாம் என்று பார்க்க வந்திருக்கிறீர்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘இல்லை, நாங்கள் கானானிலிருந்து வந்திருக்கிறோம். எங்கள் அப்பாவுக்கு மொத்தம் 12 மகன்கள். ஒரு தம்பி இறந்துவிட்டான், கடைசி தம்பி அப்பாவோடு இருக்கிறான்’ என்றார்கள். அதற்கு யோசேப்பு, ‘உங்கள் கடைசி தம்பியைக் கூட்டிக்கொண்டு வாருங்கள், அப்போதுதான் உங்களை நம்புவேன்’ என்றார். அதனால் அவர்கள் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.

வீட்டில் உணவு தீர்ந்தபோது, யாக்கோபு தன் மகன்களை மறுபடியும் எகிப்துக்கு அனுப்பினார். இந்தத் தடவை கடைசி தம்பி பென்யமீனையும் கூட்டிக்கொண்டு போனார்கள். தன் அண்ணன்களைச் சோதிப்பதற்காக, யோசேப்பு பென்யமீனின் உணவு பையில் ஒரு வெள்ளிக் கோப்பையை ஒளித்துவைத்தார். பிறகு அவர்கள் அதைத் திருடிவிட்டதாக பழி போட்டார். யோசேப்பின் வேலைக்காரர்கள் அந்தக் கோப்பையை பென்யமீனின் பையில் கண்டுபிடித்தார்கள். அதைப் பார்த்தபோது அவருடைய சகோதரர்களுக்குப் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. பென்யமீனுக்குப் பதிலாக தங்களுக்குத் தண்டனை கொடுக்கும்படி யோசேப்பிடம் கெஞ்சினார்கள்.

அண்ணன்கள் இப்போது மாறிவிட்டார்கள் என்று யோசேப்பு புரிந்துகொண்டார். இனியும் அவரால் உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால் சத்தமாக அழுதுகொண்டே, ‘நான்தான் உங்கள் சகோதரன் யோசேப்பு. என் அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என்று கேட்டார். அவருடைய சகோதரர்களுக்கு ஒரே ஆச்சரியம். பிறகு யோசேப்பு, ‘நீங்கள் எனக்குச் செய்ததை நினைத்து வருத்தப்படாதீர்கள். உங்களைக் காப்பாற்ற கடவுள்தான் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார். இப்போது உடனே போய் அப்பாவைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்’ என்றார்.

அவர்கள் இந்த நல்ல விஷயத்தைச் சொல்லி அப்பாவை எகிப்துக்குக் கூட்டிக்கொண்டு வருவதற்காக வீட்டுக்குப் போனார்கள். பல வருஷங்களுக்குப் பிறகு, யோசேப்பும் அவருடைய அப்பாவும் ஒன்றுசேர்ந்தார்கள்.

“மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”—மத்தேயு 6:15