Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 18

எரிகிற முட்புதர்

எரிகிற முட்புதர்

மோசே மீதியான் நாட்டில் 40 வருஷங்கள் வாழ்ந்தார். அங்கே அவருக்குக் கல்யாணம் ஆனது, பிள்ளைகளும் பிறந்தார்கள். ஒருநாள் சீனாய் மலைக்குப் பக்கத்தில் அவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அதிசயமான ஒன்றைப் பார்த்தார். ஒரு முட்புதர் எரிந்துகொண்டிருந்தது, ஆனால் அது கருகவே இல்லை! என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக மோசே பக்கத்தில் போனார். அப்போது முட்புதரிலிருந்து ஒரு குரல், ‘மோசே! பக்கத்தில் வராதே. உன் செருப்பைக் கழற்று. நீ நிற்பது பரிசுத்தமான இடம்’ என்று சொன்னது. மோசேயிடம் பேசியது யார் தெரியுமா? யெகோவாதான் ஒரு தேவதூதர் மூலம் பேசினார்.

மோசே பயந்துபோய் தன் முகத்தை மூடிக்கொண்டார். அப்போது அந்தக் குரல், ‘நான் இஸ்ரவேலர்கள் படுகிற கஷ்டத்தைப் பார்த்தேன். எகிப்தியர்கள் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி ஒரு நல்ல தேசத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவேன். நீதான் அவர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வர வேண்டும்’ என்று சொன்னது. அதைக் கேட்டபோது மோசேக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்திருக்கும், இல்லையா?

‘உன்னை யார் அனுப்பியது என்று மக்கள் கேட்டால் நான் என்ன சொல்வது?’ என்று மோசே கேட்டார். அதற்குக் கடவுள், ‘ஆபிரகாமின் கடவுளும், ஈசாக்கின் கடவுளும், யாக்கோபின் கடவுளுமான யெகோவாதான் என்னை அனுப்பினார் என்று சொல்’ என்றார். அதற்கு மோசே, ‘நான் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை என்றால் என்ன செய்வது?’ என்று கேட்டார். மோசேக்குத் தான் துணையாக இருப்பதைக் காட்டுவதற்காக யெகோவா சில அடையாளங்களைக் கொடுத்தார். முதலில், மோசேயிடம் அவருடைய கோலைக் கீழே போடச் சொன்னார். அந்தக் கோல் பாம்பாக மாறியது! மோசே அதன் வாலைப் பிடித்தபோது அது மறுபடியும் கோலாக மாறியது. ‘இதை அவர்களுக்குச் செய்து காட்டு. அப்போது நான்தான் உன்னை அனுப்பினேன் என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள்’ என்று யெகோவா சொன்னார்.

பிறகு மோசே, ‘எனக்குச் சரியாகப் பேசத் தெரியாது’ என்று சொன்னார். அதற்கு யெகோவா, ‘நீ என்ன பேச வேண்டும் என்று நான் உனக்குச் சொல்லிக்கொடுப்பேன். உனக்கு உதவி செய்ய உன் அண்ணன் ஆரோனை உன்னோடு அனுப்புவேன்’ என்று சொன்னார். யெகோவா தன்னோடு இருப்பதை மோசே புரிந்துகொண்டார். அதனால், தன் மனைவியையும் மகன்களையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குப் போனார்.

“எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன பேச வேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.”—மத்தேயு 10:19