Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 25

கடவுளை வணங்குவதற்காக ஒரு கூடாரம்

கடவுளை வணங்குவதற்காக ஒரு கூடாரம்

மோசே சீனாய் மலையில் இருந்தபோது, ஒரு விசேஷ கூடாரத்தைக் கட்டும்படி யெகோவா அவரிடம் சொன்னார். அதுதான் வழிபாட்டுக் கூடாரம். இஸ்ரவேலர்கள் தன்னை வணங்குவதற்காக அதைக் கட்டச் சொன்னார். அவர்கள் எங்கே போனாலும், அந்தக் கூடாரத்தைக் கையோடு எடுத்துக்கொண்டு போக முடியும்.

யெகோவா மோசேயிடம், “கூடாரத்தைக் கட்டுவதற்குத் தங்களால் முடிந்த உதவியைச் செய்யும்படி மக்களிடம் சொல்” என்றார். அதனால், தங்கம், வெள்ளி, செம்பு, விலைமதிப்புள்ள கற்கள், நகைகள் ஆகியவற்றை இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள். கம்பளி, நாரிழை, தோல்கள் ஆகியவற்றையும் இன்னும் நிறைய பொருள்களையும் கொடுத்தார்கள். ‘போதும்! இனிமேல் கொண்டு வராதீர்கள்’ என்று மோசே சொல்லும் அளவுக்கு ஏராளமாகக் கொடுத்தார்கள்.

திறமையுள்ள நிறைய ஆண்களும் பெண்களும் அந்தக் கூடாரத்தைக் கட்ட உதவினார்கள். வேலையை நன்றாகச் செய்ய யெகோவா அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்தார். அதனால் அவர்களில் சிலர் நூல் நூற்றார்கள், துணி நெய்தார்கள், எம்பிராய்டரிகூட போட்டார்கள். சிலர் கற்களைப் பதித்தார்கள், தங்கத்தில் பொருள்களைச் செய்தார்கள், மர வேலைகளைச் செய்ய உதவினார்கள்.

யெகோவா சொன்னபடியே அந்தக் கூடாரத்தைக் கட்டினார்கள். அந்தக் கூடாரத்தை, பரிசுத்த அறை, மகா பரிசுத்த அறை என இரண்டாகப் பிரிப்பதற்காக அழகான திரைச்சீலையைச் செய்தார்கள். மகா பரிசுத்த அறையில், வேல மரத்தாலும் தங்கத்தாலும் செய்யப்பட்ட ஒப்பந்தப் பெட்டி இருந்தது. பரிசுத்த அறையில், தங்கக் குத்துவிளக்கு, மேஜை, தூபப் பொருள்களை எரிப்பதற்குத் தூபபீடம் ஆகியவை இருந்தன. ஒரு செம்புத் தொட்டியும் பெரிய பலிபீடமும் பிரகாரத்தில் இருந்தன. யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதாக இஸ்ரவேலர்கள் கொடுத்த வாக்கை ஒப்பந்தப் பெட்டி அவர்களுக்கு ஞாபகப்படுத்தியது. ஒப்பந்தம் என்றால் என்ன தெரியுமா? அது ஒரு முக்கியமான வாக்குறுதி அல்லது சத்தியம்.

அந்தக் கூடாரத்தில் குருமார்களாகச் சேவை செய்வதற்கு ஆரோனையும் அவருடைய மகன்களையும் யெகோவா தேர்ந்தெடுத்தார். அந்தக் கூடாரத்தை அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, யெகோவாவுக்கு அங்கே பலிகளைக் கொடுக்க வேண்டும். மகா பரிசுத்த அறைக்குள் போக தலைமைக் குருவான ஆரோனுக்கு மட்டும்தான் அனுமதி இருந்தது. அவர் வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும்தான் அந்த அறைக்குள் போவார். தன்னுடைய பாவங்களுக்காகவும் தன் குடும்பத்தாருடைய பாவங்களுக்காகவும் இஸ்ரவேலர்கள் எல்லாருடைய பாவங்களுக்காகவும் பலி கொடுப்பதற்காக அங்கே போவார்.

எகிப்திலிருந்து கிளம்பி ஒரு வருஷத்துக்குப் பிறகு இஸ்ரவேலர்கள் அந்தக் கூடாரத்தைக் கட்டி முடித்தார்கள். இப்போது, யெகோவாவை வணங்க அவர்களுக்கு ஒரு இடம் இருந்தது.

அந்தக் கூடாரத்தைப் பார்த்து யெகோவா ரொம்பச் சந்தோஷப்பட்டார். அதன்மேல் ஒரு மேகத்தை நிற்க வைத்தார். கூடாரத்துக்கு மேல் அந்த மேகம் நிற்கிற வரைக்கும் இஸ்ரவேலர்கள் ஒரே இடத்தில் இருப்பார்கள். அந்த மேகம் மேலே எழும்புவதைப் பார்க்கும்போது அந்த இடத்திலிருந்து கிளம்ப வேண்டும் என்று புரிந்துகொள்வார்கள். உடனே, அந்தக் கூடாரத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டு அந்த மேகம் காட்டுகிற வழியில் போவார்கள்.

“சிம்மாசனத்திலிருந்து வந்த உரத்த குரல் ஒன்று, ‘இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுளே அவர்களோடு இருப்பார்’ . . . என்று சொல்வதைக் கேட்டேன்.”—வெளிப்படுத்துதல் 21:3, 4