Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 28

பிலேயாமின் கழுதை பேசுகிறது

பிலேயாமின் கழுதை பேசுகிறது

இஸ்ரவேலர்கள் கிட்டத்தட்ட 40 வருஷங்கள் வனாந்தரத்தில் இருந்தார்கள். பலமான நிறைய நகரங்களை அவர்கள் பிடித்திருந்தார்கள். இப்போது, அவர்கள் யோர்தான் ஆற்றுக்கு கிழக்கே இருக்கிற மோவாப் சமவெளியில் கூடாரம் போட்டிருந்தார்கள். கடவுள் வாக்குக் கொடுத்த தேசத்துக்குள் அவர்கள் போக வேண்டிய சமயம் அது. மோவாபின் ராஜாவான பாலாக் தன்னுடைய தேசத்தை இஸ்ரவேலர்கள் பிடித்துவிடுவார்களோ என்று பயந்தான். அதனால், அவர்களைச் சபிப்பதற்காக பிலேயாம் என்பவனை மோவாபுக்கு வரச் சொன்னான்.

ஆனால் யெகோவா பிலேயாமிடம், ‘நீ இஸ்ரவேலர்களைச் சபிக்கக் கூடாது’ என்று சொன்னார். அதனால் பிலேயாம் மோவாபுக்கு வர மாட்டேன் என்று முதலில் சொன்னான். பாலாக் ராஜா இரண்டாவது தடவை அவனைக் கூப்பிட்டான். பிலேயாம் எதைக் கேட்டாலும் அவனுக்குத் தருவதாகச் சத்தியம் செய்தான். ஆனாலும், பிலேயாம் போகவில்லை. பிறகு கடவுள் அவனிடம், ‘நீ போகலாம். ஆனால், நான் சொல்வதைத்தான் நீ சொல்ல வேண்டும்’ என்று சொன்னார்.

பிலேயாம் தன்னுடைய கழுதைமேல் ஏறி, தெற்கில் இருந்த மோவாபுக்குக் கிளம்பினான். இஸ்ரவேலர்களைச் சபிக்கக் கூடாது என்று யெகோவா சொல்லியிருந்தாலும், அவர்களைச் சபிக்க வேண்டும் என்று பிலேயாம் நினைத்திருந்தான். யெகோவாவின் தூதர் மூன்று தடவை வழியில் தோன்றினார். பிலேயாமினால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அவனுடைய கழுதையால் அவரைப் பார்க்க முடிந்தது. முதலில், அந்தக் கழுதை வழியை விட்டு விலகி ஒரு வயலுக்குள் போனது. பிறகு, ஒரு கற்சுவரை உரசிக்கொண்டு போனது. அதனால் பிலேயாமின் கால் நசுங்கியது. கடைசியில், அந்தக் கழுதை சாலை நடுவில் படுத்துக்கொண்டது. ஒவ்வொரு தடவையும், பிலேயாம் அந்தக் கழுதையைத் தடியால் அடித்தான்.

மூன்றாவது தடவை அடித்தபோது, யெகோவா அந்தக் கழுதையைப் பேச வைத்தார். அது பிலேயாமிடம், ‘ஏன் என்னை இப்படி அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டது. அதற்கு பிலேயாம், ‘நீ என்னை முட்டாளாக்குகிறாய். என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால், உன்னை வெட்டிப் போட்டிருப்பேன்’ என்று சொன்னான். அப்போது அந்தக் கழுதை, ‘நீங்கள் இத்தனை வருஷமாக என்மேல் சவாரி செய்கிறீர்களே, எப்போதாவது இப்படிச் செய்திருக்கிறேனா?’ என்று கேட்டது.

அப்போது யெகோவா, பிலேயாமின் கண்களுக்கு அந்தத் தேவதூதர் தெரியும்படி செய்தார். ‘இஸ்ரவேலர்களைச் சபிக்கக் கூடாது என்று யெகோவா உன்னிடம் சொன்னார், இல்லையா?’ என்று அந்தத் தேவதூதர் கேட்டார். அதற்கு பிலேயாம், ‘நான் தப்பு செய்துவிட்டேன். நான் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுகிறேன்’ என்று சொன்னான். அப்போது அந்தத் தேவதூதர், ‘நீ மோவாபுக்குப் போகலாம். ஆனால், யெகோவா சொல்வதைத்தான் நீ சொல்ல வேண்டும்’ என்று சொன்னார்.

பிலேயாம் பாடம் கற்றுக்கொண்டானா? இல்லை. இஸ்ரவேலர்களைச் சபிக்க பிலேயாம் மூன்று தடவை முயற்சி செய்தான். ஆனால், மூன்று தடவையும் அவன் இஸ்ரவேலர்களை ஆசீர்வதிக்கும்படி யெகோவா செய்தார். கடைசியில், இஸ்ரவேலர்கள் மோவாபைத் தாக்கினார்கள். அப்போது, பிலேயாம் செத்துப்போனான். பிலேயாம் ஆரம்பத்திலேயே யெகோவா பேச்சைக் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

“எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.”—லூக்கா 12:15