Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 31

யோசுவாவும் கிபியோனியர்களும்

யோசுவாவும் கிபியோனியர்களும்

எரிகோவைப் பற்றிய செய்தி கானானில் இருந்த மற்ற தேசங்களுக்குப் பரவியது. அவற்றின் ராஜாக்கள் ஒன்றுசேர்ந்து இஸ்ரவேலர்களுக்கு எதிராகச் சண்டை போட முடிவு செய்தார்கள். ஆனால், கிபியோனியர்கள் வித்தியாசமான ஒரு திட்டத்தைப் போட்டார்கள். அவர்கள் கிழிந்துபோன பழைய உடைகளைப் போட்டுக்கொண்டு யோசுவாவிடம் வந்தார்கள். அவரிடம், ‘நாங்கள் ரொம்பத் தூரத்திலிருந்து வருகிறோம். யெகோவாவைப் பற்றியும், எகிப்திலும் மோவாபிலும் அவர் உங்களுக்கு உதவி செய்ததைப் பற்றியும் கேள்விப்பட்டோம். எங்களைத் தாக்க மாட்டீர்கள் என்று தயவுசெய்து சத்தியம் செய்து கொடுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்’ என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதை யோசுவா நம்பினார். அதனால், அவர்களைத் தாக்கப் போவதில்லை என்று சத்தியம் செய்தார். மூன்று நாட்களுக்குப் பிறகுதான், அவர்கள் ரொம்பத் தூரத்திலிருந்து வரவில்லை என்பது அவருக்குத் தெரியவந்தது. அவர்கள் கானானிலிருந்து வந்திருந்தார்கள். யோசுவா அவர்களிடம், ‘ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘எங்களுக்குப் பயமாக இருந்தது! உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்காகச் சண்டை போடுகிறார் என்று எங்களுக்குத் தெரியும். தயவுசெய்து எங்களைக் கொன்றுவிடாதீர்கள்!’ என்று சொன்னார்கள். அவர்களுக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்ததால் யோசுவா அவர்களை உயிரோடு விட்டுவிட்டார்.

இதையெல்லாம் கேள்விப்பட்டதும், கானானைச் சேர்ந்த ஐந்து ராஜாக்கள் தங்கள் படைகளோடு கிபியோனியர்களைத் தாக்க வந்தார்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காக யோசுவாவும் அவருடைய படைவீரர்களும் ராத்திரி முழுவதும் நடந்து போனார்கள். அடுத்தநாள் காலையிலேயே போர் செய்ய ஆரம்பித்தார்கள். கானானியர்கள் நாலாப்பக்கமும் சிதறி ஓடினார்கள். அவர்கள் ஓடிய பக்கமெல்லாம், யெகோவா அவர்கள்மேல் பெரிய பெரிய ஆலங்கட்டிகளை வானத்திலிருந்து விழ வைத்தார். பிறகு யோசுவா, சூரியனை அசையாமல் நிற்க வைக்கும்படி யெகோவாவிடம் கேட்டார். இதற்கு முன் சூரியன் இந்த மாதிரி நின்றதே இல்லையே. பிறகு ஏன் யோசுவா யெகோவாவிடம் இப்படிச் செய்யச் சொன்னார்? ஏனென்றால், யெகோவாமேல் யோசுவாவுக்கு நம்பிக்கை இருந்தது. அவர் கேட்டபடியே, ஒரு நாள் முழுவதும் சூரியன் அப்படியே நின்றது. கானானைச் சேர்ந்த ராஜாக்களையும் அவர்களுடைய படைகளையும் இஸ்ரவேலர்கள் தோற்கடிக்கும்வரை சூரியன் மறையவே இல்லை.

“நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும். இதற்கு மிஞ்சி சொல்லப்படும் எதுவும் பொல்லாதவனிடமிருந்தே வருகிறது.”—மத்தேயு 5:37