Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 34

மீதியானியர்களை கிதியோன் தோற்கடிக்கிறார்

மீதியானியர்களை கிதியோன் தோற்கடிக்கிறார்

கொஞ்ச காலம் கழித்து, இஸ்ரவேலர்கள் திரும்பவும் யெகோவாவை விட்டுவிட்டு, பொய் கடவுள்களை வணங்க ஆரம்பித்தார்கள். அந்தச் சமயத்தில், மீதியானியர்கள் இஸ்ரவேலர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களுடைய மிருகங்களைத் திருடினார்கள், பயிர்களை அழித்தார்கள். இப்படியே ஏழு வருஷங்களுக்கு நடந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க இஸ்ரவேலர்கள் குகைகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள். தங்களைக் காப்பாற்றும்படி யெகோவாவிடம் கெஞ்சினார்கள். அதனால், கிதியோன் என்ற இளம் மனிதரிடம் ஒரு தேவதூதரை யெகோவா அனுப்பினார். அந்தத் தேவதூதர், ‘மாவீரனே, யெகோவா உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்’ என்று கிதியோனிடம் சொன்னார். அதற்கு கிதியோன், ‘நான் ரொம்ப சாதாரண ஆள். நான் எப்படி இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும்?’ என்று கேட்டார்.

யெகோவா தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதை கிதியோன் எப்படித் தெரிந்துகொள்வார்? அவர் ஒரு கம்பளித் தோலைத் தரையில் போட்டு, ‘யெகோவாவே, காலையில் இந்தக் கம்பளித் தோல் மட்டும் பனியில் நனைந்திருக்க வேண்டும், ஆனால் தரை காய்ந்திருக்க வேண்டும். இப்படி நடந்தால், நான் இஸ்ரவேலைக் காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று தெரிந்துகொள்வேன்’ என்றார். அடுத்த நாள் காலையில், அந்தக் கம்பளித் தோல் நன்றாக நனைந்திருந்தது, ஆனால் தரை காய்ந்திருந்தது! கிதியோன் திரும்பவும் கடவுளிடம், ‘நாளைக்கு கம்பளித் தோல் மட்டும் காய்ந்திருக்க வேண்டும், ஆனால் தரை நனைந்திருக்க வேண்டும்’ என்று கேட்டார். அதேபோல் நடந்தது. அதைப் பார்த்த பிறகு, யெகோவா தன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று கிதியோன் நம்பினார். மீதியானியர்களோடு போர் செய்ய தன் வீரர்களை வர வைத்தார்.

அப்போது யெகோவா கிதியோனிடம், ‘நான் இஸ்ரவேலர்களுக்கு வெற்றி தருவேன். ஆனால், இப்போது உன்னுடன் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால், உங்களுடைய பலத்தால்தான் ஜெயித்தீர்கள் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீர்கள். உன்னுடைய வீரர்களில் யாரெல்லாம் பயப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் வீட்டுக்குப் போகச் சொல்’ என்றார். அதனால், 22,000 வீரர்கள் வீட்டுக்குப் போனார்கள், 10,000 பேர் மட்டும் மீதியிருந்தார்கள். யெகோவா கிதியோனிடம், ‘இப்போதும் உன்னோடு நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒரு ஓடைக்குக் கூட்டிக்கொண்டு போய் தண்ணீர் குடிக்கச் சொல். எதிரி வருகிறானா என்று கவனித்துக்கொண்டே தண்ணீர் குடிக்கிறவர்களை மட்டும் உன்னோடு வைத்துக்கொள்’ என்று சொன்னார். 300 பேர் மட்டும்தான் தண்ணீர் குடிக்கும்போதும் கவனமாக இருந்தார்கள். 1,35,000 மீதியானிய வீரர்களை இந்தக் கொஞ்ச ஆட்கள் தோற்கடிப்பார்கள் என்று யெகோவா சொன்னார்.

அன்று ராத்திரி யெகோவா, ‘மீதியானியர்களைத் தாக்க இதுதான் சரியான நேரம்!’ என்று கிதியோனிடம் சொன்னார். கிதியோன் தன் ஆட்களிடம் ஊதுகொம்புகளையும் பெரிய ஜாடிகளையும் கொடுத்தார். அந்த ஜாடிகளுக்குள் தீப்பந்தங்கள் இருந்தன. அவர் அந்த ஆட்களிடம், ‘நான் செய்வதைப் பார்த்து, நீங்களும் அப்படியே செய்யுங்கள்’ என்றார். கிதியோன் தன்னுடைய ஊதுகொம்பை ஊதி, ஜாடியை உடைத்து, தீப்பந்தத்தை அசைத்தார். அதோடு, ‘இது யெகோவாவின் போர், கிதியோனின் போர்!’ என்று கத்தினார். அவருடன் இருந்த 300 பேரும் அதேபோல் செய்தார்கள். மீதியானியர்கள் பயந்துபோய் நாலாப்பக்கமும் தலைதெறிக்க ஓடினார்கள். அந்தக் குழப்பத்தில், ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தார்கள். இந்தத் தடவையும் எதிரிகளை ஜெயிக்க இஸ்ரவேலர்களுக்கு யெகோவா உதவினார்.

“இயல்புக்கு மிஞ்சிய சக்தி எங்களுடையது அல்ல, அது கடவுளுடையது.”—2 கொரிந்தியர் 4:7