Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 38

யெகோவா சிம்சோனுக்குப் பலம் தருகிறார்

யெகோவா சிம்சோனுக்குப் பலம் தருகிறார்

இஸ்ரவேலர்களில் நிறைய பேர் மறுபடியும் சிலைகளை வணங்க ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களுடைய தேசத்தை பெலிஸ்தியர்களின் கையில் யெகோவா விட்டுவிட்டார். ஆனால், இஸ்ரவேலர்களில் சிலர் யெகோவாமேல் அன்பு வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மனோவா. அவருக்கும் அவருடைய மனைவிக்கும் பிள்ளைகளே இல்லை. ஒருநாள், யெகோவா ஒரு தேவதூதரை மனோவாவின் மனைவியிடம் அனுப்பினார். அந்தத் தேவதூதர், ‘உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் பெலிஸ்தியர்களின் கையிலிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவான். அவன் ஒரு நசரேயனாக இருப்பான்’ என்று அவளிடம் சொன்னார். நசரேயர்கள் யார் தெரியுமா? அவர்கள் யெகோவாவின் விசேஷ ஊழியர்கள். அவர்கள் தங்களுடைய தலைமுடியை வெட்டவே கூடாது.

தேவதூதர் சொன்ன மாதிரியே, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மனோவா அந்தக் குழந்தைக்கு சிம்சோன் என்று பெயர் வைத்தார். சிம்சோன் வளர்ந்த பிறகு, யெகோவா அவரைப் பெரிய பலசாலியாக ஆக்கினார். வெறும் கையால் ஒரு சிங்கத்தையே அவர் கொன்றுபோட்டார். ஒருசமயம், அவர் தனி ஆளாக நின்று 30 பெலிஸ்தியர்களைக் கொன்றுபோட்டார். பெலிஸ்தியர்கள் அவரை வெறுத்தார்கள். அவரைக் கொல்வதற்கு வழி தேடினார்கள். ஒருநாள் ராத்திரி, காசா நகரத்தில் சிம்சோன் தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் அவரைப் பிடித்து, கொன்றுபோடுவதற்காக அவர்கள் காசா நகரத்தின் வாசலுக்குப் போய் ராத்திரி முழுவதும் காத்திருந்தார்கள். ஆனால், சிம்சோன் நடுராத்திரியில் எழுந்து நகரத்தின் வாசலுக்குப் போனார். வாசல் கதவை அப்படியே சுவரிலிருந்து பெயர்த்து எடுத்தார். அதைத் தன் தோள்களில் தூக்கிக்கொண்டு எப்ரோனுக்குப் பக்கத்தில் இருந்த மலையின் உச்சிக்குப் போனார்.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு, பெலிஸ்தியர்கள் சிம்சோனின் காதலியான தெலீலாளிடம் போனார்கள். அவளிடம், ‘நாங்கள் சிம்சோனைப் பிடித்து சிறையில் தள்ள வேண்டும். அவனுக்கு எப்படி இவ்வளவு பலம் வந்தது என்று கண்டுபிடித்துச் சொல். நாங்கள் உனக்கு நிறைய வெள்ளிக் காசுகள் தருகிறோம்’ என்றார்கள். தெலீலாள் காசுக்கு ஆசைப்பட்டதால், அதற்கு ஒத்துக்கொண்டாள். தனக்கு எப்படி இவ்வளவு பலம் கிடைத்தது என்பதை சிம்சோன் முதலில் சொல்லவில்லை. ஆனால், அவள் விடாமல் நச்சரித்துக்கொண்டே இருந்தாள். கடைசியில், சிம்சோன் அந்த ரகசியத்தைச் சொல்லிவிட்டார். ‘நான் ஒரு நசரேயன். அதனால், என்னுடைய தலைமுடியை இதுவரை வெட்டியதே இல்லை. முடியை வெட்டிவிட்டால் என்னுடைய பலமெல்லாம் போய்விடும்’ என்று சொன்னார். சிம்சோன் இதைச் சொன்னது பெரிய தப்புதானே?

தெலீலாள் உடனே பெலிஸ்தியர்களிடம், ‘அவனுடைய பலத்தின் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்!’ என்று சொன்னாள். சிம்சோனை தன்னுடைய மடியில் தூங்க வைத்தாள். ஒரு ஆளை வைத்து அவருடைய தலைமுடியை வெட்டினாள். பிறகு, ‘சிம்சோன், பெலிஸ்தியர்கள் வந்துவிட்டார்கள்!’ என்று கத்தினாள். உடனே, சிம்சோன் எழுந்தார். ஆனால், அவருடைய பலமெல்லாம் போயிருந்தது. பெலிஸ்தியர்கள் அவரைப் பிடித்து, குருடாக்கி, சிறையில் போட்டார்கள்.

ஒருநாள், ஆயிரக்கணக்கான பெலிஸ்தியர்கள் தங்களுடைய கடவுளான தாகோனின் கோயிலில் கூடியிருந்தார்கள். ‘நம்முடைய தெய்வம் சிம்சோனை நம் கையில் கொடுத்துவிட்டது. சிம்சோனை வெளியே கொண்டுவாருங்கள். அவனை வைத்து வேடிக்கை பார்க்கலாம்’ என்று கத்தினார்கள். இரண்டு தூண்களுக்கு நடுவில் நிற்க வைத்து அவரைக் கேலி செய்தார்கள். அப்போது சிம்சோன், ‘யெகோவாவே, இந்த ஒரு தடவை மட்டும் எனக்குப் பலம் கொடுங்கள்’ என்று கடவுளிடம் கெஞ்சினார். அந்தச் சமயத்திற்குள், சிம்சோனின் தலைமுடி மறுபடியும் நன்றாக வளர்ந்திருந்தது. அவர் முழு பலத்தோடு அந்தத் தூண்களைத் தள்ளினார். அப்போது, அந்தக் கோயில் அப்படியே இடிந்து விழுந்தது. அங்கே இருந்த எல்லாரும் செத்துப்போனார்கள். சிம்சோனும் செத்துப்போனார்.

“என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.”—பிலிப்பியர் 4:13