Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 39

இஸ்ரவேலின் முதல் ராஜா

இஸ்ரவேலின் முதல் ராஜா

யெகோவா இஸ்ரவேலர்களை வழிநடத்த நியாயாதிபதிகளைக் கொடுத்திருந்தார். ஆனால், அந்த மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் சாமுவேலிடம், ‘எங்களைச் சுற்றியிருக்கிற எல்லா தேசங்களிலும் ராஜாக்கள் இருக்கிறார்கள். எங்களுக்கும் ஒரு ராஜா வேண்டும்’ என்று கேட்டார்கள். இப்படிக் கேட்பது தவறு என்று சாமுவேல் நினைத்தார். அதனால், அதைப் பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போது யெகோவா சாமுவேலிடம், ‘அவர்கள் உன்னை ஒதுக்கித்தள்ளவில்லை. என்னைத்தான் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். அவர்கள் கேட்டபடியே அவர்களுக்கு ஒரு ராஜாவைத் தருவேன். ஆனால், அந்த ராஜா அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை வற்புறுத்திக் கேட்பார் என்று சொல்’ என்றார். அப்படிச் சொல்லியும் அந்த மக்கள், ‘பரவாயில்லை, எங்களுக்கு ராஜா வேண்டும்’ என்று கேட்டார்கள்.

சவுல் என்பவர்தான் முதல் ராஜாவாக இருப்பார் என்று சாமுவேலிடம் யெகோவா சொன்னார். சாமுவேலைப் பார்க்க ராமா என்ற நகரத்துக்கு சவுல் போயிருந்தார். அப்போது, சாமுவேல் சவுலின் தலையில் எண்ணெய் ஊற்றி அவரை ராஜாவாக அபிஷேகம் செய்தார்.

பிறகு, புதிய ராஜாவைக் காட்டுவதற்காக இஸ்ரவேலர்கள் எல்லாரையும் சாமுவேல் ஒன்றுகூட்டினார். ஆனால், எங்கே தேடியும் சவுலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன் தெரியுமா? அவர் மூட்டைமுடிச்சுகளின் நடுவில் ஒளிந்துகொண்டிருந்தார். கடைசியில் அவர்கள் சவுலைக் கண்டுபிடித்து, மக்கள் நடுவில் நிற்க வைத்தார்கள். மற்ற எல்லாரையும்விட சவுல் ரொம்ப உயரமாக இருந்தார். ரொம்ப அழகாகவும் இருந்தார். அப்போது சாமுவேல், ‘இதோ பாருங்கள்! இவர்தான் யெகோவா தேர்ந்தெடுத்த ராஜா’ என்று சொன்னார். அப்போது மக்கள், ‘ராஜா வாழ்க!’ என்று வாழ்த்தினார்கள்.

ஆரம்பத்தில், சாமுவேல் பேச்சை சவுல் ராஜா கேட்டார், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். ஆனால், கொஞ்ச காலத்தில் மாறிவிட்டார். ஒரு சமயம் யெகோவாவின் தீர்க்கதரிசியான சாமுவேல், பலி கொடுப்பதற்கு தான் வரும்வரை காத்திருக்கும்படி சவுலிடம் சொன்னார். ஏனென்றால், சவுல் ராஜா கடவுளுக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஆனால், சொன்ன சமயத்தில் சாமுவேல் வரவில்லை. அதனால், சவுலே பலிகளைக் கொடுத்துவிட்டார். அதைப் பார்த்தபோது சாமுவேல் என்ன சொன்னார்? ‘நீ யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனது பெரிய தப்பு’ என்று சொன்னார். இதற்குப் பிறகாவது, சவுல் திருந்தினாரா?

ஒருசமயம் அமலேக்கியர்களோடு போர் செய்ய சவுல் போயிருந்தார். அவர்கள் எல்லாரையும் கொன்றுபோட வேண்டும் என்று சாமுவேல் அவரிடம் சொல்லியிருந்தார். ஆனால், அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாகைக் கொல்ல வேண்டாம் என்று சவுல் முடிவு செய்தார். அப்போது யெகோவா சாமுவேலிடம், ‘சவுல் என் பேச்சைக் கேட்பதே இல்லை, அவன் என்னை விட்டுவிட்டான்’ என்று சொன்னார். அதைக் கேட்டு சாமுவேல் ரொம்பக் கவலைப்பட்டார். அவர் சவுலிடம், ‘நீ யெகோவா பேச்சைக் கேட்கவில்லை. அதனால், அவர் வேறொரு ராஜாவைத் தேர்ந்தெடுப்பார்’ என்றார். சாமுவேல் அங்கிருந்து போவதற்காகத் திரும்பியபோது, சவுல் அவரைச் சட்டென்று இழுத்தார். அப்போது, சாமுவேல் போட்டிருந்த அங்கியின் ஓரம் கிழிந்துவிட்டது. உடனே சாமுவேல் சவுலிடம், ‘யெகோவா உன்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிவிட்டார்’ என்று சொன்னார். தன்மேல் அன்பு காட்டி, தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற ஒருவரிடம் அந்த ஆட்சியைக் கொடுப்பதற்கு யெகோவா முடிவு செய்திருந்தார்.

“பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்.”—1 சாமுவேல் 15:22