Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 40

தாவீதும் கோலியாத்தும்

தாவீதும் கோலியாத்தும்

யெகோவா சாமுவேலிடம், ‘நீ ஈசாயின் வீட்டுக்குப் போ. அவனுடைய மகன்களில் ஒருவன்தான் இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக இருப்பான்’ என்றார். அதனால், ஈசாயின் வீட்டுக்கு சாமுவேல் போனார். ஈசாயின் முதல் மகனைப் பார்த்தபோது, ‘யெகோவா இவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்’ என்று நினைத்தார். ஆனால், அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று யெகோவா சொன்னார். அதோடு, ‘நான் ஒருவரின் தோற்றத்தைப் பார்ப்பது இல்லை, குணத்தைத்தான் பார்க்கிறேன்’ என்றார்.

ஈசாய் தன்னுடைய மற்ற ஆறு மகன்களையும் சாமுவேலிடம் கூட்டிக்கொண்டு வந்தார். ஆனால் சாமுவேல், ‘இவர்கள் யாரையும் யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை. உனக்கு வேறு மகன்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டார். அதற்கு ஈசாய், ‘கடைசிப் பையன் இருக்கிறான். அவன் பெயர் தாவீது. அவன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்’ என்று சொன்னார். தாவீது உள்ளே வந்தவுடன் யெகோவா சாமுவேலிடம், ‘இவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்!’ என்று சொன்னார். அப்போது சாமுவேல், தாவீதின் தலையில் எண்ணெய் ஊற்றி, இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக அபிஷேகம் செய்தார்.

கொஞ்ச காலத்துக்குப் பின், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போனார்கள். பெலிஸ்திய படையில் கோலியாத் என்ற வீரன் இருந்தான். அவன் ராட்சதன் மாதிரி இருந்தான். தினமும் வந்து இஸ்ரவேலர்களைக் கிண்டல் செய்தான். ‘என்னோடு சண்டை போட ஒருவனை அனுப்புங்கள். அவன் ஜெயித்தால், நாங்கள் உங்களுக்கு அடிமைகள். நான் ஜெயித்தால், நீங்கள் எங்களுக்கு அடிமைகள்’ என்று கத்தினான்.

தாவீதின் அண்ணன்கள் இஸ்ரவேல் படையில் வீரர்களாக இருந்தார்கள். அதனால், அவர்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு, இஸ்ரவேல் வீரர்களின் முகாமுக்கு தாவீது வந்தான். கோலியாத் சொன்னது அவனுடைய காதில் விழுந்தது. அதனால், ‘நான் அவனோடு சண்டை போடுகிறேன்’ என்று சொன்னான். அதற்கு சவுல் ராஜா, ‘நீ சின்னப் பையன். உன்னால் எப்படி முடியும்?’ என்று கேட்டார். அப்போது தாவீது, ‘யெகோவா எனக்கு உதவி செய்வார்’ என்று சொன்னான்.

தாவீதுக்கு சவுல் தன்னுடைய போர் உடையைக் கொடுத்தார். ஆனால் தாவீது, ‘இதைப் போட்டுக்கொண்டு என்னால் சண்டை போட முடியாது’ என்று சொன்னான். பிறகு, தன்னுடைய கவணை எடுத்துக்கொண்டு ஒரு ஓடைக்குப் போனான். ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து, பையில் போட்டான். பிறகு, கோலியாத்தை நோக்கி ஓடினான். கோலியாத் அவனிடம், ‘பொடியனே, இங்கே வா! உன்னைக் கொன்று பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகப் போடுகிறேன்’ என்று கத்தினான். ஆனால், தாவீது பயப்படவில்லை. அவன் கோலியாத்திடம், ‘நீ வாளையும் ஈட்டியையும் எடுத்துக்கொண்டு வருகிறாய். ஆனால், நான் யெகோவாவின் பெயரில் வருகிறேன். நீ எங்களோடு சண்டை போடவில்லை, கடவுளோடு சண்டை போடுகிறாய். உன்னுடைய வாளையும் ஈட்டியையும்விட யெகோவா ரொம்பச் சக்தியுள்ளவர் என்பதை எல்லாரும் தெரிந்துகொள்வார்கள். உங்கள் எல்லாரையும் தோற்கடிக்க அவர் எங்களுக்கு உதவி செய்வார்’ என்று சொன்னான்.

தாவீது ஒரு கூழாங்கல்லைத் தன் கவணில் வைத்து, வேகமாகச் சுழற்றி வீசினான். யெகோவா உதவி செய்ததால், அது நேராக கோலியாத்தின் நெற்றியில் பதிந்தது. அவன் செத்துப்போய் கீழே விழுந்தான். உடனே, பெலிஸ்தியர்கள் தப்பித்து ஓடினார்கள். தாவீது மாதிரி நீயும் யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருக்கிறாயா?

“மனுஷர்களால் இது முடியாது; ஆனால் கடவுளால் முடியும்; ஏனென்றால், கடவுளால் எல்லாமே செய்ய முடியும்.”—மாற்கு 10:27