Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 42

தைரியமும் உண்மையுமுள்ள யோனத்தான்

தைரியமும் உண்மையுமுள்ள யோனத்தான்

சவுல் ராஜாவின் முதல் மகன் பெயர் யோனத்தான். அவர் ஒரு மாவீரர், தைரியசாலி. அவர் கழுகைவிட வேகமானவர், சிங்கத்தைவிட பலமானவர் என்று தாவீது சொன்னார். ஒருநாள், பெலிஸ்திய வீரர்கள் சிலர் ஒரு மலைமேல் நிற்பதை யோனத்தான் பார்த்தார். உடனே, தன்னுடைய ஆயுதங்களைச் சுமக்கிற ஆளிடம், ‘யெகோவா நமக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தால் நாம் அவர்களைத் தாக்கலாம். பெலிஸ்தியர்கள் நம்மை மேலே வரச் சொல்லிக் கூப்பிட்டால் நாம் போய் தாக்குவோம். அதுதான் யெகோவா தருகிற அடையாளம்’ என்று சொன்னார். பெலிஸ்தியர்கள் அவர்களிடம், ‘மேலே வந்து சண்டை போடுங்கள்’ என்று கத்தினார்கள். உடனே, அவர்கள் இரண்டு பேரும் மலைமேல் ஏறிப் போய் 20 வீரர்களைத் தோற்கடித்தார்கள்.

யோனத்தான் சவுலின் முதல் மகனாக இருந்ததால், அவர்தான் அடுத்த ராஜாவாக ஆகியிருக்க வேண்டும். ஆனால், யெகோவா தாவீதைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது யோனத்தானுக்குத் தெரியும். அதற்காக அவர் பொறாமைப்படவில்லை. யோனத்தானும் தாவீதும் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, பாதுகாக்க வேண்டும் என்று இரண்டு பேரும் சத்தியம் செய்துகொண்டார்கள். தான் தாவீதின் நண்பன் என்பதைக் காட்டுவதற்காக யோனத்தான் தன்னுடைய அங்கியையும், வாளையும், வில்லையும், இடுப்புக்கச்சையையும் தாவீதுக்குக் கொடுத்தார்.

சவுலிடமிருந்து தாவீது தப்பித்து ஓடிய சமயத்தில், யோனத்தான் தாவீதிடம் போய், ‘தைரியமாக இரு. யெகோவா உன்னைத்தான் ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். என் அப்பாவுக்குக்கூட அது தெரியும்’ என்று சொன்னார். யோனத்தான் மாதிரி ஒரு நல்ல நண்பன் உனக்கு வேண்டுமா?

தன் உயிரைக்கூட பெரிதாக நினைக்காமல் யோனத்தான், தன் நண்பனுக்கு பல தடவை உதவி செய்தார். சவுல் ராஜா, தாவீதைக் கொல்ல நினைப்பது யோனத்தானுக்குத் தெரியும். அதனால் அவர் தன் அப்பாவிடம், ‘தாவீது எந்தத் தப்பும் செய்யவில்லை. ஏன் அவனைக் கொல்ல நினைக்கிறீர்கள்? அது பெரிய பாவம்’ என்று சொன்னார். அதைக் கேட்டு சவுல் ராஜா யோனத்தான்மேல் ரொம்பக் கோபப்பட்டார். சில வருஷங்களுக்குப் பிறகு சவுலும் யோனத்தானும் ஒரு போரில் இறந்துபோனார்கள்.

யோனத்தான் இறந்த பிறகு, அவருடைய மகன் மேவிபோசேத்தை தாவீது தேடினார். அவனைக் கண்டுபிடித்ததும், ‘உன் அப்பா எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அதனால், வாழ்நாள் முழுவதும் நான் உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வேன். நீ என்னுடைய அரண்மனையில் தங்கி, என்னோடு சேர்ந்து சாப்பிடுவாய்’ என்று சொன்னார். தன்னுடைய நண்பர் யோனத்தானை தாவீது மறக்கவே இல்லை.

“நான் உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் . . . ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை.”—யோவான் 15:12, 13