Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 46

கர்மேல் மலையில் ஒரு சோதனை

கர்மேல் மலையில் ஒரு சோதனை

பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் ராஜாக்களில் பலர் கெட்டவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஆகாப் ராஜாதான் படுமோசமானவர். அவர் பாகாலை வணங்கிய ஒரு கெட்ட பெண்ணைக் கல்யாணம் செய்தார். அவள் பெயர் யேசபேல். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மக்கள் எல்லாரையும் பாகாலை வணங்க வைத்தார்கள். யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்து யெகோவா என்ன செய்தார்? ஆகாபிடம் ஒரு செய்தி சொல்ல எலியா தீர்க்கதரிசியை அனுப்பினார்.

ஆகாப் ராஜா மிக மோசமாக நடந்துகொள்வதால், இஸ்ரவேலில் மழை பெய்யாது என்று எலியா அவரிடம் சொன்னார். மூன்று வருஷங்களுக்கும் மேலாக, பயிர்கள் வளரவில்லை, மக்கள் பசியில் வாடினார்கள். மறுபடியும் எலியாவை ஆகாபிடம் யெகோவா அனுப்பினார். ஆகாப் ராஜா எலியாவைப் பார்த்ததும், ‘தொல்லை கொடுப்பவனே, இவ்வளவு கஷ்டமும் உன்னால்தான் வந்தது’ என்றார். அதற்கு எலியா, ‘இந்தப் பஞ்சம் என்னால் வரவில்லை. நீங்கள் பாகாலை வணங்கியதால்தான் வந்தது. உண்மையான கடவுள் யார் என்று பார்ப்பதற்கு நாம் ஒரு சோதனை செய்யலாம். மக்களையும் பாகால் தீர்க்கதரிசிகளையும் கர்மேல் மலைக்கு வரச் சொல்லுங்கள்’ என்றார்.

கர்மேல் மலையில் மக்கள் கூடிவந்தார்கள். அப்போது எலியா, ‘யெகோவாதான் உண்மைக் கடவுள் என்றால், அவரை வணங்குங்கள். பாகால்தான் கடவுள் என்றால் அவனை வணங்குங்கள். என்ன செய்யப் போகிறீர்கள் என்று இப்போது முடிவு எடுங்கள். நான் ஒரு சவால் விடுகிறேன். பாகால் தீர்க்கதரிசிகள் 450 பேரும் ஒரு பலியைத் தயார் செய்து, தங்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்ளட்டும். நான் ஒரு பலியைத் தயார் செய்து யெகோவாவிடம் வேண்டிக்கொள்வேன். நெருப்பை அனுப்பி பதில் தருகிறவர்தான் உண்மையான கடவுள்’ என்றார். மக்களும் ஒத்துக்கொண்டார்கள்.

பாகால் தீர்க்கதரிசிகள் ஒரு பலியைத் தயார் செய்தார்கள். நாள் முழுவதும், ‘பாகாலே, பதில் கொடு!’ என்று வேண்டினார்கள். பாகால் பதிலே தரவில்லை. அதனால், எலியா அவர்களிடம், ‘இன்னும் சத்தமாகக் கூப்பிடுங்கள். அவன் ஒருவேளை தூங்கிக்கொண்டிருப்பான், யாராவது அவனை எழுப்ப வேண்டியிருக்கும்’ என்று கேலி செய்தார். சாயங்காலம்வரை அவர்கள் கத்திக்கொண்டே இருந்தார்கள். ஆனால், எந்தப் பதிலும் வரவில்லை.

அடுத்து, எலியா பலிபீடத்தின்மேல் பலியை வைத்து, அதன்மேல் தண்ணீர் ஊற்றினார். பிறகு, ‘யெகோவாவே, நீங்கள்தான் உண்மையான கடவுள் என்பதை இந்த மக்களுக்குக் காட்டுங்கள்’ என்று ஜெபம் செய்தார். உடனே, யெகோவா வானத்திலிருந்து நெருப்பை அனுப்பி, அந்தப் பலியை எரித்துப்போட்டார். அப்போது மக்கள், ‘யெகோவாதான் உண்மையான கடவுள்!’ என்று சத்தமாகச் சொன்னார்கள். எலியா அவர்களிடம், ‘பாகால் தீர்க்கதரிசிகளைப் பிடியுங்கள், ஒருவரைக்கூட தப்பிக்க விடாதீர்கள்!’ என்றார். அன்றைக்கு, பாகால் தீர்க்கதரிசிகள் 450 பேரும் கொல்லப்பட்டார்கள்.

கடல்மேல் ஒரு சின்ன மேகத்தைப் பார்த்ததும் எலியா ஆகாபிடம், ‘பயங்கர மழை பெய்யப்போகிறது. உங்கள் ரதத்தைத் தயார்படுத்தி, வீட்டுக்குப் போங்கள்’ என்றார். அப்போது, வானம் இருட்டிக்கொண்டு வந்தது, காற்று அடித்தது, பயங்கரமாக மழை பெய்ய ஆரம்பித்தது. கடைசியில், பஞ்சத்துக்கு முடிவு வந்தது. ஆகாப் முடிந்தவரை வேகமாக ரதத்தை ஓட்டினார். யெகோவா உதவி செய்ததால், எலியா அந்த ரதத்தையே முந்திக்கொண்டு ஓடினார். எலியாவின் கஷ்டங்கள் எல்லாம் இதோடு முடிந்துவிட்டதா? அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

“யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.”—சங்கீதம் 83:18