Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 48

விதவையின் மகன் உயிரோடு வருகிறான்

விதவையின் மகன் உயிரோடு வருகிறான்

இஸ்ரவேலில் பஞ்சம் இருந்த சமயத்தில் யெகோவா எலியாவிடம், ‘சாறிபாத் நகரத்துக்குப் போ. அங்கே இருக்கிற ஒரு விதவை உனக்கு உணவு கொடுப்பாள்’ என்றார். அந்த நகரத்தின் வாசலில், ஒரு ஏழை விதவை விறகு பொறுக்குவதை எலியா பார்த்தார். குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று அவளிடம் கேட்டார். தண்ணீர் கொண்டுவர அவள் போனபோது, எலியா அவளைக் கூப்பிட்டு, ‘தயவுசெய்து கொஞ்சம் ரொட்டியும் கொண்டுவாருங்கள்’ என்று சொன்னார். அதற்கு அந்த விதவை, ‘உங்களுக்குக் கொடுக்க என்னிடம் ரொட்டி இல்லை. என் மகனுக்கும் எனக்கும் சமைக்கிற அளவுக்குக் கொஞ்சம் மாவும் எண்ணெயும்தான் இருக்கிறது’ என்று சொன்னாள். அப்போது எலியா, ‘நீங்கள் எனக்கு ஒரு சின்ன ரொட்டியைச் செய்து கொண்டுவாருங்கள். மறுபடியும் மழை பெய்யும்வரை, உங்களுடைய மாவும் எண்ணெயும் குறையவே குறையாது என்று யெகோவா சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்’ என்றார்.

அதனால், அந்த விதவை தன் வீட்டுக்குப் போய் யெகோவாவின் தீர்க்கதரிசிக்காக ரொட்டி செய்தாள். யெகோவா சொன்ன மாதிரியே, பஞ்சம் முடியும்வரை அவளுக்கும் அவளுடைய மகனுக்கும் உணவு இருந்தது. அவளுடைய ஜாடியில் மாவும் எண்ணெயும் குறையவே இல்லை.

அதற்குப் பிறகு, ஒரு சோகமான சம்பவம் நடந்தது. அந்த விதவையின் குட்டிப் பையன் ரொம்ப உடம்பு சரியில்லாமல் போய் இறந்துவிட்டான். அவள் எலியாவிடம் உதவி கேட்டுக் கெஞ்சினாள். எலியா அந்தப் பையனை அவள் கையிலிருந்து வாங்கி, அவளுடைய வீட்டின் மாடியிலிருந்த ஒரு அறைக்குத் தூக்கிக்கொண்டு போனார். அவனைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, ‘யெகோவாவே, தயவுசெய்து இந்தப் பிள்ளைக்கு உயிர் கொடுங்கள்’ என்று ஜெபம் செய்தார். யெகோவா அவனுக்கு உயிர் கொடுத்தால் அது ஒரு பெரிய அற்புதம்தான்! ஏனென்றால், நமக்குத் தெரிந்தவரை இறந்தவர்கள் யாருமே அதற்குமுன் உயிரோடு வந்ததில்லை. அதுவும் அந்த விதவையும் அவளுடைய மகனும் இஸ்ரவேலர்கள்கூட இல்லை.

ஆனால் அந்தப் பையனுக்கு உயிர் வந்தது. அவன் மூச்சுவிட ஆரம்பித்தான். எலியா அந்த விதவையிடம், ‘பாருங்கள்! உங்கள் மகன் உயிரோடு இருக்கிறான்!’ என்று சொன்னார். அவளுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் எலியாவிடம், ‘நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய ஊழியர்தான். யெகோவா சொல்வதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் என்று நான் தெரிந்துகொண்டேன்’ என்று சொன்னாள்.

“அண்டங்காக்கைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, அவற்றுக்குச் சேமிப்புக் கிடங்கும் இல்லை, களஞ்சியமும் இல்லை; ஆனாலும், கடவுள் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா?”—லூக்கா 12:24