Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 50

யோசபாத்துக்கு யெகோவா உதவினார்

யோசபாத்துக்கு யெகோவா உதவினார்

யூதாவின் ராஜா யோசபாத், பாகாலின் பலிபீடங்களையும் சிலைகளையும் அந்தத் தேசத்திலிருந்து அழித்துப்போட்டார். மக்கள் யெகோவாவின் சட்டங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார். அதைக் கற்றுக்கொடுப்பதற்காக யூதாவிலுள்ள எல்லா இடங்களுக்கும் தன்னுடைய அதிகாரிகளையும் லேவியர்களையும் அனுப்பினார்.

யெகோவா தன் மக்களுக்குத் துணையாக இருக்கிறார் என்பது பக்கத்திலிருந்த எல்லா தேசத்து மக்களுக்கும் தெரிந்திருந்தது. அதனால், அவர்கள் யூதாவைத் தாக்க பயந்தார்கள். யோசபாத் ராஜாவுக்குப் பரிசுகளைக்கூட கொண்டுவந்து கொடுத்தார்கள். ஆனால், மோவாபியர்களும் அம்மோனியர்களும் சேயீர் பகுதியைச் சேர்ந்தவர்களும் யூதாவைத் தாக்க வந்தார்கள். அதனால், தனக்கு யெகோவாவின் உதவி வேண்டும் என்று யோசபாத் நினைத்தார். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எல்லாரையும் எருசலேமில் கூடிவரச் சொன்னார். அவர்கள் எல்லாருக்கும் முன்பாக, ‘யெகோவாவே, உங்களுடைய உதவி இல்லாமல் எங்களால் ஜெயிக்க முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள்’ என்று ஜெபம் செய்தார்.

அப்போது யெகோவா, ‘பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு உதவி செய்வேன். நீங்கள் போய் உங்கள் இடத்தில் அசையாமல் நின்றுகொண்டு, நான் எப்படிக் காப்பாற்றுகிறேன் என்று பாருங்கள்’ என்றார். யெகோவா அவர்களை எப்படிக் காப்பாற்றினார்?

அடுத்த நாள் காலையில், யோசபாத் பாடகர்களைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய படைக்கு முன்னால் அவர்களை நடந்து போகச் சொன்னார். அவர்கள் எருசலேமிலிருந்து தெக்கோவா என்ற இடத்திலிருந்த போர்க்களத்துக்குப் போனார்கள்.

அந்தப் பாடகர்கள் சந்தோஷமாக யெகோவாவைப் புகழ்ந்து சத்தமாகப் பாடினார்கள். அப்போது, யெகோவா தன்னுடைய மக்களுக்காகப் போர் செய்தார். அம்மோனியர்களையும் மோவாபியர்களையும் குழம்பிப்போக வைத்தார். அதனால், அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தார்கள். கடைசியில், ஒருவர்கூட தப்பிக்கவில்லை. ஆனால், யூதா மக்களையும் வீரர்களையும் குருமார்களையும் யெகோவா காப்பாற்றினார். பக்கத்து தேசங்களில் இருந்த எல்லாரும் இதைக் கேள்விப்பட்டார்கள். யெகோவா இன்னமும் தன்னுடைய மக்களைப் பாதுகாக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். யெகோவா தன் மக்களை எப்படிக் காப்பாற்றுகிறார்? பல வழிகளில் காப்பாற்றுகிறார். அப்படிச் செய்வதற்கு, மனிதர்களுடைய உதவி அவருக்குத் தேவையில்லை.

“நீங்கள் போர் செய்ய வேண்டியதில்லை. அணிவகுத்துப் போய் நில்லுங்கள், அசையாமல் அப்படியே நில்லுங்கள், யெகோவா உங்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்று பாருங்கள்.”—2 நாளாகமம் 20:17