Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 62

பெரிய மரத்தைப் போன்ற ஒரு ராஜ்யம்

பெரிய மரத்தைப் போன்ற ஒரு ராஜ்யம்

ஒருநாள் ராத்திரி நேபுகாத்நேச்சார் பயங்கரமான ஒரு கனவைப் பார்த்து பயந்துபோனான். எல்லா ஞானிகளையும் கூப்பிட்டு அந்தக் கனவுக்கு அர்த்தம் கேட்டான். ஆனால், யாராலும் அர்த்தம் சொல்ல முடியவில்லை. கடைசியாக தானியேலிடம் பேசினான்.

நேபுகாத்நேச்சார் தானியேலிடம் அந்தக் கனவைச் சொன்னான்: ‘கனவில் நான் ஒரு மரத்தைப் பார்த்தேன். அது வானத்தையே தொடும் அளவுக்கு ரொம்ப உயரமாக வளர்ந்தது. பூமியில், எங்கிருந்து பார்த்தாலும் அது தெரியும். அதில் அழகான இலைகளும் நிறைய பழங்களும் இருந்தன. மிருகங்கள் அதன் நிழலில் தங்கின. அதன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டின. பிறகு, ஒரு தேவதூதர் வானத்திலிருந்து வந்து பயங்கர சத்தமாக, “இந்த மரத்தையும் இதன் கிளைகளையும் வெட்டிப் போடுங்கள். ஆனால் இதன் அடிப்பகுதியை மட்டும் அப்படியே விட்டுவிடுங்கள். இரும்பிலும் செம்பிலும் இதற்கு வளையங்களைப் போடுங்கள். இந்த மரத்துக்கு இருந்த மனித இதயம் எடுக்கப்பட்டு மிருக இதயம் கொடுக்கப்படும். ஏழு காலங்களுக்கு இப்படியே விடப்படும். அப்போது, கடவுள் மட்டும்தான் ராஜா என்றும், அவர் தன்னுடைய விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஆட்சியைக் கொடுப்பார் என்றும் எல்லா மக்களும் புரிந்துகொள்வார்கள் என்றார்.”’

யெகோவா தானியேலுக்கு அந்தக் கனவின் அர்த்தத்தைத் தெரியப்படுத்தினார். அதைப் புரிந்துகொண்டதும் தானியேல் பயந்துபோனார். அவர், ‘ராஜாவே, இந்தக் கனவு உங்கள் எதிரிகளைப் பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இது உங்களைப் பற்றிய கனவு. வெட்டப்பட்ட அந்தப் பெரிய மரம் நீங்கள்தான். நீங்கள் ஆட்சியை இழந்துவிடுவீர்கள், காட்டு மிருகம்போல வெளியில் புற்களைச் சாப்பிடுவீர்கள். ஆனால், அந்தத் தேவதூதர் மரத்தின் அடிப்பகுதியை விட்டுவைக்க சொன்னதால், நீங்கள் மறுபடியும் ராஜாவாக ஆவீர்கள்’ என்று சொன்னார்.

ஒரு வருஷம் கழித்து, நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அழகை ரசித்துக்கொண்டே அரண்மனையின் மொட்டைமாடியில் நடந்துகொண்டிருந்தான். ‘நான் கட்டிய இந்த நகரம் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. நான் எவ்வளவு பெரிய ஆள்!’ என்று சொன்னான். அவன் இப்படிச் சொல்லி முடிப்பதற்குள், ‘நேபுகாத்நேச்சாரே! உன்னுடைய ஆட்சியை நீ இழந்துவிட்டாய்’ என்று வானத்திலிருந்து ஒரு குரல் சொன்னது.

உடனே, நேபுகாத்நேச்சார் பைத்தியமாகி ஒரு மிருகம் போல ஆனான். அரண்மனையிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்ந்தான். அவனுடைய முடி கழுகின் இறகுகளைப் போல நீளமாக வளர்ந்தது. நகங்கள் பறவைகளின் நகங்களைப் போல ஆனது.

ஏழு வருஷங்கள் கழித்து, நேபுகாத்நேச்சார் மறுபடியும் பழைய நிலைமைக்கு வந்தான். யெகோவா அவனை பாபிலோனின் ராஜாவாக ஆக்கினார். பிறகு அவன், ‘பரலோகத்தின் ராஜாவான யெகோவாவை நான் போற்றிப் புகழ்கிறேன். யெகோவா மட்டும்தான் ராஜா என்பதை இப்போது புரிந்துகொண்டேன். பெருமைபிடித்த ஆட்களை அவர் தலைகுனிய வைப்பார், தன்னுடைய விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஆட்சியைக் கொடுப்பார்’ என்று சொன்னான்.

“அகம்பாவம் வந்தால் அழிவு வரும். ஆணவம் வந்தால் அடிசறுக்கும்.”—நீதிமொழிகள் 16:18