Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 63

சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகள்

சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகள்

கொஞ்சக் காலம் கழித்து, பெல்ஷாத்சார் பாபிலோனின் ராஜாவானான். ஒருநாள் ராத்திரி, தேசத்தில் இருந்த மிக முக்கியமான ஆட்களில் ஆயிரம் பேருக்கு விருந்து வைத்தான். யெகோவாவின் ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் எடுத்துவந்திருந்த தங்கக் கோப்பைகளைக் கொண்டுவரும்படி வேலைக்காரர்களிடம் சொன்னான். பெல்ஷாத்சாரும் அவனுடைய விருந்தாளிகளும் அந்தக் கோப்பைகளில் குடித்து, தங்கள் கடவுள்களைப் புகழ்ந்தார்கள். திடீரென்று, ஒரு மனித கை தோன்றி, அந்தச் சாப்பாட்டு அறையின் சுவரில் புரியாத சில வார்த்தைகளை எழுதியது.

பெல்ஷாத்சார் பயந்து நடுங்கினான். உடனே, தன் மந்திரவாதிகளைக் கூப்பிட்டு, ‘இந்த வார்த்தைகளுக்கு யார் அர்த்தம் சொல்கிறாரோ, அவரை பாபிலோனில் மூன்றாவது முக்கியப் பதவியில் வைப்பேன்’ என்று சத்தியம் செய்தான். அவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், யாராலும் அர்த்தம் சொல்ல முடியவில்லை. அப்போது ராணி உள்ளே வந்து, ‘தானியேல் என்ற ஒருவர் இருக்கிறார். அவர்தான் நேபுகாத்நேச்சாருடைய கனவுகளுக்கும் விடுகதைகளுக்கும் அர்த்தம் சொன்னவர். இந்த வார்த்தைகளுக்கு அவரால் அர்த்தம் சொல்ல முடியும்’ என்று சொன்னாள்.

ராஜாவிடம் தானியேல் வந்தார். அவரிடம் பெல்ஷாத்சார், ‘இந்த வார்த்தைகளை வாசித்து, அர்த்தம் சொன்னால், உனக்குத் தங்கச் சங்கிலி போட்டு, பாபிலோனில் மூன்றாவது முக்கியப் பதவியில் வைப்பேன்’ என்றான். அதற்கு தானியேல், ‘எனக்குப் பரிசுகள் எதுவும் வேண்டாம், ஆனால் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்கிறேன். உங்கள் அப்பா நேபுகாத்நேச்சார், பெருமை பிடித்தவராக இருந்தார். அவரை யெகோவா தாழ்த்தினார். அவருக்கு நடந்தது எல்லாமே உங்களுக்குத் தெரியும். ஆனாலும், யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுத்துவந்த தங்கக் கோப்பைகளில் திராட்சமதுவைக் குடித்து கடவுளை அவமானப்படுத்தினீர்கள். அதனால் கடவுள், “மெனே, மெனே, தெக்கேல், பார்சின்” என்ற இந்த வார்த்தைகளை எழுதியிருக்கிறார். மேதியர்களும் பெர்சியர்களும் பாபிலோனைப் பிடிப்பார்கள். இனி நீங்கள் ராஜாவாக இருக்க மாட்டீர்கள் என்பதுதான் இதன் அர்த்தம்’ என்று சொன்னார்.

பாபிலோனை யாராலும் பிடிக்க முடியாது என்று நிறைய பேர் நினைத்தார்கள். ஏனென்றால், அந்த நகரத்தைச் சுற்றி உறுதியான மதில்சுவர்களும், ஆழமான ஆறும் இருந்தன. ஆனால், அந்த ராத்திரியே மேதியர்களும் பெர்சியர்களும் நகரத்தைத் தாக்கினார்கள். பெர்சிய ராஜாவான கோரேஸ், அந்த ஆற்றின் தண்ணீரை வேறு பக்கமாகத் திருப்பிவிட்டார். அதனால், அவருடைய வீரர்கள் நடந்தே அந்த ஆற்றைக் கடந்து நகரத்தின் வாசலுக்குப் போனார்கள். அங்கே போனபோது, நகரத்தின் கதவுகள் திறந்தே கிடந்தன! அவர்கள் உள்ளே புகுந்து, நகரத்தைப் பிடித்து, ராஜாவைக் கொன்றுபோட்டார்கள். பிறகு, கோரேஸ் பாபிலோனின் ராஜாவானார்.

ஒரு வருஷத்துக்குள், கோரேஸ் ஒரு அறிவிப்பு செய்தார். ‘எருசலேமில் இருக்கிற தன்னுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி யெகோவா என்னிடம் சொல்லியிருக்கிறார். அவருடைய மக்களில் யாராவது அங்கே போய் உதவி செய்ய விரும்பினால் போகலாம்’ என்று சொன்னார். யெகோவா சொன்னபடியே, எருசலேம் அழிந்து 70 வருஷங்களுக்குப் பிறகு நிறைய யூதர்கள் திரும்பவும் அங்கே போனார்கள். ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் எடுத்துவந்திருந்த தங்கக் கோப்பைகளையும் வெள்ளிக் கோப்பைகளையும் மற்ற பாத்திரங்களையும் கோரேஸ் அவர்களிடம் கொடுத்து அனுப்பினார். கோரேசைப் பயன்படுத்தி யெகோவா தன்னுடைய மக்களுக்கு எப்படி உதவி செய்தார் என்று பார்த்தாயா?

“அவள் விழுந்துவிட்டாள்! மகா பாபிலோன் விழுந்துவிட்டாள்! அவள் பேய்களின் குடியிருப்பாக . . . ஆகிவிட்டாள்!”—வெளிப்படுத்துதல் 18:2