Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 64

சிங்கக் குகையில் தானியேல்

சிங்கக் குகையில் தானியேல்

பாபிலோனை ஆட்சி செய்த இன்னொரு ராஜாதான் மேதியாவைச் சேர்ந்த தரியு. தானியேல் மற்றவர்களைவிட திறமைசாலியாக இருந்ததை அவன் பார்த்தான். அதனால், தன்னுடைய தேசத்தில் இருந்த மிக முக்கியமான ஆட்களுக்கு தானியேலை அதிகாரியாக வைத்தான். அவர்கள் தானியேலைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவரை எப்படியாவது ஒழித்துக்கட்ட நினைத்தார்கள். அவர் தினமும் மூன்று தடவை யெகோவாவிடம் ஜெபம் செய்வது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தரியுவிடம் போய், ‘ராஜாவே, மக்கள் உங்களைத் தவிர வேறு யாரிடமும் வேண்டிக்கொள்ளக் கூடாது என்று ஒரு சட்டம் போட வேண்டும். இந்தச் சட்டத்தை யாராவது மீறினால், அவர்களைச் சிங்கக் குகையில் போட வேண்டும்’ என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது தரியுவுக்குப் பிடித்திருந்தது. அதனால், அவன் அந்தச் சட்டத்தில் கையெழுத்து போட்டான்.

தானியேல் அந்தப் புதிய சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக, தன்னுடைய வீட்டுக்குப் போனார். திறந்த ஜன்னல் முன்னால் முட்டிபோட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அவர்மேல் பொறாமைப்பட்ட ஆட்கள் அவருடைய வீட்டுக்குள் நுழைந்து, அவர் ஜெபம் செய்வதைப் பார்த்தார்கள். அவர்கள் தரியுவிடம் ஓடிப்போய், ‘தானியேல் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை. அவர் தன்னுடைய கடவுளிடம் தினமும் மூன்று தடவை ஜெபம் செய்கிறார்’ என்று சொன்னார்கள். தரியுவுக்கு தானியேலை ரொம்பப் பிடிக்கும். அவரைக் கொல்ல அவன் விரும்பவில்லை. அதனால், தானியேலை எப்படியாவது காப்பாற்றுவதற்காக சாயங்காலம்வரை முயற்சி செய்தான். ஆனால், ராஜா ஒரு சட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டால், அவரால்கூட அதை மாற்ற முடியாது. வேறு வழியில்லாமல், தானியேலைப் பயங்கரமான சிங்கங்கள் இருக்கிற குகைக்குள் போடச் சொல்லி தன் ஆட்களிடம் சொன்னான்.

அன்று ராத்திரி, தானியேலை நினைத்து தரியுவுக்கு ரொம்பக் கவலையாக இருந்தது. அவனால் தூங்கவே முடியவில்லை. காலையில், அவன் சிங்கக் குகைக்கு ஓடிப்போய், ‘தானியேலே, உன் கடவுள் உன்னைக் காப்பாற்றினாரா?’ என்று கேட்டான்.

குகைக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது. அது தானியேலின் குரல்தான்! ‘யெகோவாவின் தூதர் இந்தச் சிங்கங்களின் வாயை அடைத்துவிட்டார். அவை என்னை ஒன்றுமே செய்யவில்லை’ என்று தரியுவிடம் சொன்னார். தரியுவுக்கு ஒரே சந்தோஷம்! தானியேலைச் சிங்கக் குகையிலிருந்து தூக்கிவிடும்படி உத்தரவு போட்டான். அவர் உடலில் சின்னக் கீறல்கூட இல்லை. அப்போது ராஜா, ‘தானியேல்மேல் பழி போட்ட ஆட்களை இந்தக் குகைக்குள் போடுங்கள்’ என்று கட்டளை போட்டான். அவர்களைக் குகைக்குள் போட்டபோது, சிங்கங்கள் அவர்களைக் கடித்துத் தின்றன.

தரியு தன்னுடைய மக்கள் எல்லாருக்கும் இந்தக் கட்டளையைப் போட்டார்: ‘தானியேலின் கடவுளுக்கு எல்லாரும் பயப்பட வேண்டும். அவர் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்.’

தானியேல் மாதிரி நீயும் யெகோவாவிடம் தினமும் ஜெபம் செய்கிறாயா?

“கடவுள்பக்தி உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுதலை செய்ய . . . யெகோவா அறிந்திருக்கிறார்.”—2 பேதுரு 2:9