Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 66

எஸ்றா திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுத்தார்

எஸ்றா திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுத்தார்

இஸ்ரவேலர்களில் நிறைய பேர் எருசலேமுக்குத் திரும்பிப் போய் கிட்டத்தட்ட 70 வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால், சிலர் இன்னும் பெர்சிய பேரரசைச் சேர்ந்த பல இடங்களில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் எஸ்றா என்ற குருவும் ஒருவர். அவர் யெகோவாவின் திருச்சட்டத்தை மக்களுக்குக் கற்றுக்கொடுப்பவர். எருசலேமில் இருந்தவர்கள் திருச்சட்டத்தின்படி நடக்கவில்லை என்று அவர் கேள்விப்பட்டார். அதனால் அங்கே போய் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தார். அவரிடம் பெர்சிய ராஜாவான அர்தசஷ்டா, ‘மக்களுக்குத் திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுக்க கடவுள் உனக்கு ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். அதனால் நீ போகலாம். யாரெல்லாம் உன்னோடு வர விரும்புகிறார்களோ, அவர்களையும் கூட்டிக்கொண்டு போகலாம்’ என்று சொன்னார். எருசலேமுக்குத் திரும்பிப் போக விரும்பிய எல்லாரையும் எஸ்றா போய்ப் பார்த்தார். அவர்கள் ரொம்பத் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் தங்களுக்குப் பாதுகாப்பு தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு கிளம்பினார்கள்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் எருசலேமுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கிருந்த அதிகாரிகள் எஸ்றாவிடம் வந்து, ‘இஸ்ரவேலர்கள் யெகோவா பேச்சைக் கேட்காமல், பொய்க் கடவுள்களை வணங்குகிற பெண்களைக் கல்யாணம் செய்திருக்கிறார்கள்’ என்றார்கள். எஸ்றா என்ன செய்தார்? அவர் மக்கள் முன்னால் முட்டிபோட்டு, ‘யெகோவாவே, எங்களுக்காக நீங்கள் நிறைய நல்ல காரியங்களைச் செய்திருக்கிறீர்கள். ஆனால், நாங்கள் பாவம் செய்துவிட்டோம்’ என்று ஜெபம் செய்தார். அதைக் கேட்டு மக்கள் மனம் திருந்தினார்கள். ஆனால், சரியானதைச் செய்ய அவர்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டது. அதற்காக, பெரியோர்களையும் நீதிபதிகளையும் எஸ்றா தேர்ந்தெடுத்தார். அடுத்த மூன்று மாதங்களில், யெகோவாவை வணங்காதவர்களை ஊரைவிட்டே அனுப்பிவிட்டார்கள்.

இப்போது பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன. அந்த சமயத்திற்குள், எருசலேமைச் சுற்றியிருந்த மதில்சுவர்கள் திரும்பவும் கட்டிமுடிக்கப்பட்டன. திருச்சட்டத்தை வாசித்துக் காட்டுவதற்காக, எஸ்றா எல்லாரையும் ஒரு பொது இடத்துக்குக் கூடிவரச் சொன்னார். புத்தகத்தை எஸ்றா திறந்தபோது, எல்லாரும் எழுந்து நின்றார்கள். அவர் யெகோவாவைப் புகழ்ந்தார். அப்போது அதை ஏற்றுக்கொண்டதைக் காட்டுவதற்காக அவர்கள் தங்களுடைய கைகளைத் தூக்கினார்கள். பிறகு, எஸ்றா திருச்சட்டத்தை வாசித்து, அர்த்தம் சொன்னார். மக்கள் அதைக் கவனமாகக் கேட்டார்கள். தாங்கள் யெகோவாவைவிட்டு மறுபடியும் விலகிப்போனதை ஒத்துக்கொண்டு, அதற்காக அழுதார்கள். அடுத்த நாள், இன்னும் நிறைய விஷயங்களைத் திருச்சட்டத்திலிருந்து அவர்களுக்கு வாசித்துக்காட்டினார். சீக்கிரத்தில், கூடாரப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். உடனடியாக, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

அவர்கள் சந்தோஷமாக அந்த ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடினார்கள். நல்ல விளைச்சலைத் தந்ததற்காக யெகோவாவுக்கு நன்றியும் சொன்னார்கள். யோசுவாவின் காலத்துக்குப் பிறகு, இப்படியொரு கூடாரப் பண்டிகை நடக்கவே இல்லை. பண்டிகைக்குப் பிறகு, மக்கள் எல்லாரும் கூடிவந்து ஜெபம் செய்தார்கள். ‘யெகோவாவே, அடிமைகளாக இருந்த எங்களை நீங்கள் விடுதலை செய்தீர்கள், பாலைவனத்தில் எங்களுக்கு உணவு கொடுத்தீர்கள், இந்த அழகான தேசத்தையும் தந்தீர்கள். ஆனால், நாங்கள் திரும்பத் திரும்ப உங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனோம். எங்களை எச்சரிப்பதற்காகத் தீர்க்கதரிசிகளை அனுப்பினீர்கள், ஆனால் அவர்கள் சொன்னதை நாங்கள் கேட்கவில்லை. அப்போதும், எங்களிடம் பொறுமையாக இருந்தீர்கள். ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினீர்கள். இனி உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்று இப்போது சத்தியம் செய்கிறோம்’ என்று சொன்னார்கள். அதை எழுதியும் கொடுத்தார்கள். அதிகாரிகளும், லேவியர்களும், குருமார்களும் அதில் முத்திரை போட்டார்கள்.

“கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!”—லூக்கா 11:28