Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 68

எலிசபெத்துக்குக் குழந்தை பிறக்கிறது

எலிசபெத்துக்குக் குழந்தை பிறக்கிறது

எருசலேமின் மதில்சுவர்கள் கட்டிமுடிக்கப்பட்டு இப்போது 400 வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டது. சகரியா என்ற ஆலய குருவும் அவருடைய மனைவி எலிசபெத்தும் எருசலேமுக்குப் பக்கத்தில் வாழ்ந்தார்கள். அவர்களுக்குக் கல்யாணமாகி நிறைய வருஷங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. ஒருநாள் சகரியா ஆலயத்தில் தூபம் காட்டிக்கொண்டிருந்தபோது காபிரியேல் என்ற தேவதூதர் அவர்முன் வந்தார். சகரியா பயந்துபோனார். காபிரியேல் அவரிடம், ‘பயப்படாதே, யெகோவா சொன்ன நல்ல செய்தியை உன்னிடம் சொல்ல வந்திருக்கிறேன். உன் மனைவி எலிசபெத்துக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அவனுக்கு நீ யோவான் என்று பெயர் வைக்க வேண்டும். ஒரு விசேஷ வேலையைச் செய்வதற்காக யோவானை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்’ என்று சொன்னார். சகரியா அவரிடம், ‘இதை நான் எப்படி நம்புவது? எனக்கும் என் மனைவிக்கும் வயதாகிவிட்டதே, எங்களுக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?’ என்று கேட்டார். அதற்கு காபிரியேல் தூதர், ‘இந்தச் செய்தியைச் சொல்ல கடவுள்தான் என்னை அனுப்பினார். நீ என்னை நம்பாததால் குழந்தை பிறக்கும்வரை உன்னால் பேச முடியாது’ என்று சொன்னார்.

ரொம்ப நேரம் ஆகியும் சகரியா வெளியே வரவில்லை. அவர் வெளியே வந்ததும் அங்கே காத்துக்கொண்டிருந்த மக்கள் உள்ளே என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள விரும்பினார்கள். ஆனால் அவரால் பேச முடியவில்லை. சைகை காட்டத்தான் முடிந்தது. அப்போது, கடவுளிடமிருந்து சகரியாவுக்கு ஏதோ செய்தி கிடைத்திருக்கிறது என்று மக்கள் புரிந்துகொண்டார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்தத் தேவதூதர் சொன்ன மாதிரியே எலிசபெத் கர்ப்பமானாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவளுடைய நண்பர்களும் சொந்தக்காரர்களும் குழந்தையைப் பார்க்க வந்தார்கள். அவளைப் பார்த்து ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள். அப்போது எலிசபெத், ‘இவன் பெயர் யோவான்’ என்று சொன்னாள். அதற்கு அவர்கள், ‘உன் குடும்பத்தில் யாருக்கும் யோவான் என்ற பெயர் இல்லையே. அவனுடைய அப்பா பெயரையே அவனுக்கும் வை’ என்று சொன்னார்கள். ஆனால் சகரியா, ‘இவன் பெயர் யோவான்’ என்று எழுதிக் காட்டினார். அந்த நிமிஷமே சகரியாவினால் பேச முடிந்தது. அந்தக் குழந்தையைப் பற்றி யூதேயா முழுவதும் மக்கள் பேசிக்கொண்டார்கள். ‘இந்தக் குழந்தை வளர்ந்த பிறகு எப்படிப்பட்ட ஆளாக ஆவானோ?’ என்று நினைத்துக்கொண்டார்கள்.

பிறகு சகரியாவுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது. ‘யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும். நம்மைக் காப்பாற்றுவதற்காக ஒரு மீட்பரை, ஒரு மேசியாவை அனுப்புவதாக ஆபிரகாமுக்கு அவர் வாக்குக் கொடுத்தார். யோவான் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பான். மேசியாவுக்காக வழியைத் தயார்படுத்துவான்’ என்று தீர்க்கதரிசனம் சொன்னார்.

எலிசபெத்தின் சொந்தக்காரப் பெண்ணான மரியாளுக்கும் இதே போல ஒரு அதிசயம் நடந்தது. அடுத்த கதையில் அதைப் பற்றிப் படிக்கலாம்.

“மனுஷர்களால் இது முடியாது, ஆனால் கடவுளால் எல்லாமே செய்ய முடியும்.”—மத்தேயு 19:26