Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 69

காபிரியேல் மரியாளைச் சந்திக்கிறார்

காபிரியேல் மரியாளைச் சந்திக்கிறார்

எலிசபெத்துக்கு மரியாள் என்ற சொந்தக்காரப் பெண் இருந்தாள். அந்த இளம் பெண் கலிலேயாவில் இருந்த நாசரேத் என்ற நகரத்தில் வாழ்ந்தாள். மர வேலை செய்த யோசேப்புக்கும் மரியாளுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. எலிசபெத் கர்ப்பமாகி ஆறு மாதங்கள் ஆனபோது, மரியாளிடம் காபிரியேல் தூதர் வந்தார். அவர் மரியாளிடம், ‘மரியாளே, வாழ்த்துக்கள். யெகோவாவின் ஆசீர்வாதம் உனக்குக் கிடைத்திருக்கிறது’ என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று மரியாளுக்குப் புரியவில்லை. பிறகு காபிரியேல் அவளிடம், ‘நீ கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும். அவர் ராஜாவாக ஆட்சி செய்வார். அவருடைய ஆட்சி என்றென்றும் இருக்கும்’ என்று சொன்னார்.

மரியாள் அவரிடம், ‘நான் ஒரு கன்னிப் பெண். எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?’ என்று கேட்டாள். அதற்கு காபிரியேல், ‘யெகோவாவினால் முடியாதது எதுவுமே இல்லை. கடவுளுடைய சக்தி உன்மேல் வரும். நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். உன்னுடைய சொந்தக்காரப் பெண் எலிசபெத்தும் வயதான காலத்தில் கர்ப்பமாக இருக்கிறாள்’ என்று சொன்னார். அதற்கு மரியாள், ‘நான் யெகோவாவின் அடிமைப் பெண். நீங்கள் சொல்வது போலவே நடக்கட்டும்’ என்று சொன்னாள்.

எலிசபெத்தைப் பார்க்க மலையிலிருந்த ஒரு நகரத்துக்கு மரியாள் போனாள். அவளுக்கு மரியாள் வாழ்த்து சொன்னபோது எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது. அப்போது, எலிசபெத் கடவுளுடைய சக்தியால் நிறைந்து, ‘மரியாளே, யெகோவா உன்னை ஆசீர்வதித்திருக்கிறார். மேசியாவின் அம்மா என் வீட்டுக்கு வந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்’ என்று சொன்னாள். அதற்கு மரியாள், ‘யெகோவாவை மனதார புகழ்கிறேன்’ என்றாள். மரியாள் மூன்று மாதங்களுக்கு எலிசபெத்தோடு தங்கியிருந்தாள். பிறகு, நாசரேத்தில் இருந்த தன் வீட்டுக்குக் கிளம்பிப் போனாள்.

மரியாள் கர்ப்பமாக இருப்பது யோசேப்புக்குத் தெரிந்ததும், அவளைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்று நினைத்தார். ஆனால், ஒரு தேவதூதர் அவருடைய கனவில் வந்து, ‘மரியாளைக் கல்யாணம் செய்ய பயப்படாதே. அவள் எந்தத் தப்பும் செய்யவில்லை’ என்று சொன்னார். அதனால், மரியாளைக் கல்யாணம் செய்துகொள்ள யோசேப்பு முடிவு செய்தார்.

“வானத்திலும் பூமியிலும் . . . யெகோவா தனக்குப் பிரியமான எல்லாவற்றையும் செய்கிறார்.”—சங்கீதம் 135:6