Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 71

இயேசுவை யெகோவா காப்பாற்றினார்

இயேசுவை யெகோவா காப்பாற்றினார்

இஸ்ரவேலுக்குக் கிழக்கே ஒரு தேசம் இருந்தது. அங்கே வாழ்ந்த மக்கள் நட்சத்திரங்கள் தங்களுக்கு வழிகாட்டும் என்று நம்பினார்கள். ஒருநாள் ராத்திரி, அந்தத் தேசத்தைச் சேர்ந்த சில ஆட்கள் வானத்தில் பிரகாசமான ஒன்று நகர்ந்துபோவதைப் பார்த்தார்கள். அது பார்ப்பதற்கு நட்சத்திரத்தைப் போல் இருந்தது. அது போகிற வழியில் அவர்களும் போனார்கள். அந்த நட்சத்திரம் அவர்களை எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு போனது. அந்த ஆட்கள் அங்கிருந்த மக்களிடம், ‘யூதர்களுக்கு ராஜாவாகப் போகிற குழந்தை எங்கே? அவரைப் பார்த்து தலைவணங்க வந்திருக்கிறோம்’ என்று சொன்னார்கள்.

புதிய ராஜாவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் எருசலேமின் ராஜா ஏரோது பயந்துபோனான். அவன் முதன்மை குருமார்களிடம், ‘அந்த ராஜா எங்கே பிறப்பார்?’ என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘அவர் பெத்லகேமில் பிறப்பார் என்று தீர்க்கதரிசிகள் சொல்லியிருக்கிறார்கள்’ என்று சொன்னார்கள். அதனால், ஏரோது கிழக்கிலிருந்து வந்த ஆட்களைக் கூப்பிட்டு, ‘பெத்லகேமுக்குப் போய் அந்தப் பிள்ளையைக் கண்டுபிடியுங்கள். திரும்பி வந்து அந்தப் பிள்ளை இருக்கிற இடத்தை எனக்குச் சொல்லுங்கள். நானும் போய்த் தலைவணங்க வேண்டும்’ என்று சொன்னான். ஆனால், அது சுத்தப் பொய்.

மறுபடியும் அந்த நட்சத்திரம் நகர ஆரம்பித்தது. அந்த ஆட்களும் அது போகிற வழியிலேயே போனார்கள். கடைசியில், அந்த நட்சத்திரம் பெத்லகேமில் ஒரு வீட்டின் மேல் நின்றது. அந்த வீட்டுக்குள் அவர்கள் போனபோது, இயேசு தன்னுடைய அம்மா மரியாளுடன் இருப்பதைப் பார்த்தார்கள். அவர் முன்னால் அவர்கள் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள். தங்கம், சாம்பிராணி, வெள்ளைப்போளம் போன்ற பரிசுகளையும் கொடுத்தார்கள். இயேசுவைக் கண்டுபிடிக்க யெகோவாதான் அவர்களை அனுப்பினாரா? இல்லை.

யெகோவா அன்று ராத்திரி யோசேப்பின் கனவில் பேசினார். ‘ஏரோது இயேசுவைக் கொல்லப் பார்க்கிறான். உன்னுடைய மனைவியையும் மகனையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிவிடு. நான் திரும்பிவரச் சொல்லும்வரை அங்கேயே தங்கியிரு’ என்று சொன்னார். உடனே, யோசேப்பு தன் மனைவி மகனோடு எகிப்துக்குப் போனார்.

ஏரோதுவைப் பார்க்கத் திரும்பிப் போகக் கூடாது என்று கிழக்கிலிருந்து வந்த ஆட்களிடம் யெகோவா சொல்லியிருந்தார். அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்று தெரிந்ததும் ஏரோதுவுக்குப் பயங்கர கோபம் வந்தது. இயேசுவை அவனால் கண்டுபிடிக்க முடியாததால், பெத்லகேமில் இயேசுவின் வயதில் இருந்த எல்லா ஆண் பிள்ளைகளையும் கொல்லும்படி கட்டளை போட்டான். ஆனால் இயேசு, ரொம்பத் தூரத்தில் இருந்த எகிப்தில் பத்திரமாக இருந்தார்.

கொஞ்சக் காலத்தில், ஏரோது இறந்துபோனான். யெகோவா யோசேப்பிடம், ‘இப்போது நீ திரும்பிப் போகலாம்’ என்று சொன்னார். யோசேப்பும் மரியாளும் இயேசுவும் இஸ்ரவேலுக்குத் திரும்பிப் போய் நாசரேத் என்ற நகரத்தில் வாழ்ந்தார்கள்.

“அதுபோலவே, என் வாயிலிருந்து வருகிற வார்த்தையும் இருக்கும் . . . எதற்காக அதைச் சொன்னேனோ அதைக் கண்டிப்பாகச் செய்து முடிக்கும்.”—ஏசாயா 55:11