Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 73

மேசியா வரப்போவதை யோவான் அறிவிக்கிறார்

மேசியா வரப்போவதை யோவான் அறிவிக்கிறார்

சகரியா-எலிசபெத்தின் மகன் யோவான், வளர்ந்த பிறகு ஒரு தீர்க்கதரிசியாக ஆனார். மேசியா வரப்போவதைப் பற்றி எல்லாருக்கும் சொல்ல யோவானை யெகோவா பயன்படுத்தினார். அவர் ஜெபக்கூடங்களிலும் நகரங்களிலும் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, வனாந்தரத்தில் கற்றுக்கொடுத்தார். யோவான் சொல்வதைக் கேட்க மக்கள் எருசலேமிலிருந்தும் யூதேயாவின் எல்லா இடங்களிலிருந்தும் வந்தார்கள். கெட்டது செய்வதை நிறுத்தினால்தான் கடவுளைச் சந்தோஷப்படுத்த முடியும் என்று அவர் கற்றுக்கொடுத்தார். அவர் சொன்னதைக் கேட்டு நிறைய பேர் திருந்தினார்கள். அவர்களுக்கு யோர்தான் ஆற்றில் அவர் ஞானஸ்நானம் கொடுத்தார்.

யோவான் ரொம்ப எளிமையாக வாழ்ந்தார். ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார். வெட்டுக்கிளிகளையும் காட்டுத் தேனையும் சாப்பிட்டார். யோவானைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்கள் ரொம்ப ஆர்வமாக இருந்தார்கள். பெருமை பிடித்த பரிசேயர்களும் சதுசேயர்களும்கூட அவரைப் பார்க்க வந்தார்கள். யோவான் அவர்களிடம், ‘நீங்கள் கெட்டது செய்வதை விட்டுவிட்டு திருந்த வேண்டும். ஆபிரகாமின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு, மற்றவர்களைவிட உங்களைப் பெரிய ஆட்களாக நினைத்துக்கொள்ளாதீர்கள். ஆபிரகாமின் பிள்ளைகளாக இருப்பதால் மட்டும் நீங்கள் கடவுளுடைய பிள்ளைகளாகிவிட முடியாது’ என்று சொன்னார்.

நிறைய பேர் யோவானிடம் வந்து, ‘கடவுளைப் பிரியப்படுத்த நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘உங்களிடம் இரண்டு சட்டைகள் இருந்தால், அதில் ஒன்றை இல்லாதவர்களுக்குக் கொடுங்கள்’ என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் தெரியுமா? மற்றவர்களிடம் அன்பு காட்டினால்தான் கடவுளைப் பிரியப்படுத்த முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார்.

வரி வசூல் செய்கிறவர்களிடம் அவர், ‘நேர்மையாக இருங்கள், யாரையும் ஏமாற்றாதீர்கள்’ என்று சொன்னார். படைவீரர்களிடம் அவர், ‘லஞ்சம் வாங்காதீர்கள், பொய் சொல்லாதீர்கள்’ என்று சொன்னார்.

குருமார்களும் லேவியர்களும்கூட யோவானிடம் வந்து, ‘நீ யார்? எல்லாரும் உன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு யோவான், ‘வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகப் பேசுவார். மக்கள் யெகோவாவிடம் திரும்பி வர வழிகாட்டுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசி என்னைப் பற்றித்தான் சொன்னார்’ என்றார்.

யோவான் சொல்லிக்கொடுத்த விஷயங்கள் மக்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. யோவான்தான் மேசியாவாக இருப்பாரோ என்று நிறைய பேர் யோசித்தார்கள். ஆனால் அவர், ‘என்னைவிட பெரியவர் ஒருவர் வருகிறார். அவருடைய செருப்புகளைக் கழற்றுவதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன், அவர் கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் கொடுப்பார்’ என்று சொன்னார்.

“அவர் ஒரு சாட்சியாக வந்தார்; எல்லா விதமான மக்களும் தன் மூலம் அந்த ஒளியில் நம்பிக்கை வைப்பதற்காக அந்த ஒளியைப் பற்றிச் சாட்சி கொடுக்க வந்தார்.”—யோவான் 1:7