Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 75

இயேசுவை பிசாசு சோதிக்கிறான்

இயேசுவை பிசாசு சோதிக்கிறான்

இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு, கடவுளுடைய சக்தி அவரை வனாந்தரத்துக்குப் போக வைத்தது. அவர் 40 நாட்களுக்கு எதுவுமே சாப்பிடவில்லை. அதனால் அவருக்குப் பயங்கரமாகப் பசி எடுத்தது. அப்போது, இயேசுவுக்கு ஆசை காட்டுவதற்காக பிசாசு அங்கே வந்தான். அவரிடம், ‘நீ உண்மையிலேயே கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாக மாற்று’ என்று சொன்னான். ஆனால் இயேசு, ‘நாம் உயிர் வாழ்வதற்கு உணவைவிட முக்கியமான ஒன்று தேவை. யெகோவா சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் நாம் கேட்க வேண்டும் என்று எழுதியிருக்கிறதே’ என்று பிசாசிடம் சொன்னார். வேத வசனத்தில் இருப்பதைத்தான் இயேசு எடுத்துச் சொன்னார்.

அடுத்ததாக, ‘நீ உண்மையிலேயே கடவுளுடைய மகனாக இருந்தால், ஆலயத்தின் மிக உயரமான இடத்திலிருந்து கீழே குதி. உன்னைப் பிடித்துக்கொள்ள கடவுள் தன் தூதர்களை அனுப்புவார் என்று எழுதியிருக்கிறது’ என்று பிசாசு சொன்னான். இதற்கும் இயேசு வேத வசனத்தை வைத்தே பதில் சொன்னார். ‘யெகோவாவைச் சோதித்துப் பார்க்கக் கூடாது என்று எழுதியிருக்கிறதே’ என்று அவனுக்குப் பதில் சொன்னார்.

பிறகு, சாத்தான் உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் சொத்துகளையும் சிறப்பையும் இயேசுவுக்குக் காட்டினான். ‘நீ ஒரே ஒரு தடவை என்னை வணங்கினால், இதையெல்லாம் உனக்குத் தருவேன்’ என்று சொன்னான். அப்போது இயேசு, ‘போய்விடு சாத்தானே! யெகோவாவை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது’ என்றார்.

அப்போது பிசாசு அங்கிருந்து போனான். தேவதூதர்கள் வந்து இயேசுவுக்கு உணவு கொடுத்தார்கள். அதற்குப் பிறகு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை இயேசு எல்லாருக்கும் சொல்ல ஆரம்பித்தார். அந்த வேலையைச் செய்யத்தான் கடவுள் அவரை இந்தப் பூமிக்கு அனுப்பினார். இயேசு சொல்லிக் கொடுத்த விஷயங்கள் மக்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவர் எங்கே போனாலும் மக்கள் அவர் பின்னாலேயே போனார்கள்.

“தன் சுபாவத்தின்படியே [பிசாசு] பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்.”—யோவான் 8:44