Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 76

ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்

ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்

கி.பி. 30-ஆம் வருஷத்தின் வசந்த காலத்தில், இயேசு எருசலேமுக்குப் போனார். பஸ்கா பண்டிகைக்காக நிறைய பேர் அங்கே வந்திருந்தார்கள். அந்தப் பண்டிகை சமயத்தில் ஆலயத்தில் மிருகங்களைப் பலி கொடுப்பார்கள். அதற்காக, சிலர் தங்களோடு மிருகங்களைக் கொண்டுவந்தார்கள். மற்றவர்கள் எருசலேமில் அவற்றை வாங்கினார்கள்.

இயேசு ஆலயத்துக்குப் போனபோது, மக்கள் அங்கே மிருகங்களை விற்பதைப் பார்த்தார். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தார்கள். அதைப் பார்த்தபோது இயேசு என்ன செய்தார்? கயிறுகளால் ஒரு சாட்டையைச் செய்து, ஆடுமாடுகளை ஆலயத்திலிருந்து விரட்டினார். காசு மாற்றுகிற ஆட்களின் மேஜைகளைக் கீழே தள்ளினார். அவர்கள் வைத்திருந்த காசுகளைக் கீழே கொட்டினார். புறா விற்கிறவர்களைப் பார்த்து, ‘இதையெல்லாம் இங்கிருந்து கொண்டுபோங்கள்! என் அப்பாவின் வீட்டை வியாபாரம் செய்கிற இடமாக ஆக்காதீர்கள்’ என்று சொன்னார்.

இயேசு செய்ததைப் பார்த்து ஆலயத்தில் இருந்த மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘யெகோவாவின் வீட்டை நான் ரொம்ப நேசிப்பேன்’ என்று மேசியாவைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அவருடைய சீஷர்களுக்கு அப்போது ஞாபகம் வந்தது.

கி.பி. 33-ஆம் வருஷத்தில், ஆலயத்தை இயேசு இரண்டாவது தடவை சுத்தம் செய்தார். தன் அப்பாவுடைய வீட்டின் மரியாதையைக் கெடுக்க யாரையும் இயேசு விடமாட்டார்.

“நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது.”—லூக்கா 16:13